சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு தண்டனையையையும் நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை நிறுத்தி வைக்கவும், ஜாமீன் வழங்கக் கோரியும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உட்பட 4 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் மதன் பி லோகுர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு, ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவின் வழக்குரைஞரிடம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதில், வழக்கை தாமதப்படுத்தும் எந்தவித நடவடிக்கையும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கக் கூடாது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் படித்து 2 மாதத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட வேண்டும். ஆவணங்களை படிக்க கால அவகாசம் வேண்டும் என்று நீங்கள் சொன்னால், உடனடியாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்று கூறினர்.
சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருப்பதாக வழக்குரைஞர் கூறினார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
கர்நாடக உயர்நீதிமன்றமும் மேல்முறையீட்டு மனுவை விரைந்து முடிக்கும் என்று நம்புகிறோம்.
டிசம்பர் 18ம் தேதி வரை நாட்டை விட்டு எங்கும் செல்லக் கூடாது.
இதையடுத்து, அடுத்த வழக்கு விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
தகவல்:
தினமணி |