மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்திட சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழவுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
செயற்குழுக் கூட்டம்:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 17ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 19.45 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய – மன்றத் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத், அனைவரையும் வரவேற்று தலைமையுரையாற்றினார். மன்ற உறுப்பினர் மாதச் சந்தா தொகைகளை கல்வி மற்றும் மருத்துவ உதவி விண்ணப்பங்களுக்காக மட்டும் பயன்படுத்தலாம் என்றும், இனி வரும் காலங்களில், பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளைத் தனியாகவும், மன்ற பொதுக்குழுக் கூட்டத்தைத் தனியாகவும் நடத்திடலாம் என்றும் அவர் தனதுரையில் கூறினார்.
புதியோர் அறிமுகம்:
சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள - காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ஏ.எச்.சாமு ஷிஹாபுத்தீன் - மன்றத்தின் புதிய உறுப்பினராக அறிமுகம் செய்யப்பட்டார்.
வேலை தேடி சிங்கப்பூர் வந்துள்ள காயலரான எல்.எம்.டீ.அபூபக்கர் ஃபைஸலும் இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவருக்குத் தகுந்த வேலைவாய்ப்பு கிடைத்திட மன்ற உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பளிக்க வேண்டுமாய் - மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
நடப்பு கூட்டத்தை ஒருங்கிணைத்த - மன்றத்தின் பருவ உறுப்பினர் எம்.எஸ்செய்யித் லெப்பை சிற்றுரையாற்றினார்.
மன்றத்தின் செயற்குழுக் கூட்டங்கள் உள்ளிட்ட தகவல்களை ஊடகங்களில் செய்தியாக வெளியிடுவதற்கு முன்பாகவே மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அவை பகிரப்பட வேண்டும் என்று கூறிய அவர், அவ்வாறு செய்வதால் பொதுக்குழு உறுப்பினர்கள் - செயற்குழு குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து, அதற்கேற்ப தமது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள இயலும் என்று கூறினார்.
அதுபோல, ஊடகங்களில் வெளியிடப்படும் மன்றச் செய்திகளின் இணைப்பை (news link)யும் உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் அனுப்பிட வேண்டும் என்றார்.
இக்கருத்துக்களை செயற்குழு வரவேற்றதோடு, இனி வருங்காலங்களில் அதன்படி செயல்பட முடிவு செய்யப்பட்டது.
செயலரின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து, மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார். அவரது உரை உள்ளடக்கம்:-
>> இம்மாதம் 05ஆம் நாளன்று நடைபெற்ற மன்றத்தின் பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
>> மன்றத்தின் முதியோர் நலத் திட்டத்தின் கீழ், 9ஆவதாக ஒருவர் பயனாளியாக இணைக்கப்பட்டார். இத்திட்டத்திற்காக மன்ற உறுப்பினர்கள் தன்னார்வத்துடன் முன்வந்து ஓராண்டுக்கான தொகைகளை வழங்கியமைக்கு மன்றத்தின் சார்பில் நன்றிகள்.
>> இக்ராஃ கல்விச் சங்கம், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புகளின் அண்மைக்கால செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
>> மன்றத்தின் - பயன்படுத்திய நல்லாடை உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை சேகரிக்கப்பட்ட உடைகள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வகைக்காக உதவிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தற்போது பெய்து வரும் தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு முன்னுரிமையளித்து - மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி அவ்வுடைகளை சமூக ஆர்வலர்கள் துணையுடன் வினியோகிக்கவுள்ளார்.
>> மன்ற உறுப்பினர்களின் தாராள உதவிகள் காரணமாக பெறப்பட்ட ரூபாய் 85 ஆயிரம் தொகை, மனிதாபிமான உதவிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
>> காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPAவின் நகர்நல அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவை மன்றம் வழங்கி வருகிறது.
இவ்வாறு செயலரின் உரை அமைந்திருந்தது.
துணைத்தலைவர் உரை:
மன்ற துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், மன்றத்தின் அத்தியாவசிய சமையல் பொருளுதவித் திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து உறுப்பினர்களுக்கு விவரித்ததோடு, கடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளதாகக் கூறினார்.
பொருளாளரின் வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை - மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் கூட்டத்தில் சமர்ப்பிக்க, சில விசாரணைகளுக்குப் பின் கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
இவ்வாண்டின் நடப்பு இறுதிக் காலாண்டிற்கான சந்தா தொகைகளை இதுவரை நிலுவையில் வைத்திருப்போர் விரைந்து வழங்கி, இவ்வாண்டின் அனைத்து செயல்பாடுகளும் வெற்றிகரமாய் அமைந்திட துணைநிற்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
சிறப்பு அழைப்பாளர் உரை:
ஹாங்காங்கிலிருந்து வருகை தந்திருந்த காயலர் ஏ.எல்.அப்துர்ரஹ்மான் இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மன்றத்தின் நடப்பு கூட்டத்தை தான் முழுமையாக அவதானித்ததாகக் கூறிய அவர், அனைத்து நடவடிக்கைகளும் நேர்த்தியாக அமையப்பெற்றுள்ளதாகப் புகழ்ந்துரைத்தார்.
ஓரமைப்பு வெற்றிகரமாக இயங்கிட, அனைத்து வயது வரம்பினரும் இணைந்து குழுப்பணியாற்றிட வேண்டும் என்றும், அமைப்பின் கூட்டங்களில் திறந்த மனதுடன் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறிய அவர், சிங்கை காயல் நல மன்றம் இது விஷயத்தில் முன்மாதிரியாய் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது என்றார்.
மன்றத்தின் அனைத்துத் திட்டங்களுக்கும் உறுப்பினர்கள் தாமாக முன்வந்து தாராளமாக நிதியளித்துக் கொண்டிருப்பதைப் புகழ்ந்து பேசிய அவர், கல்விக்கான உதவித்தொகைகளை இன்னும் அதிகமாக உயர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திட்டக் குழு, தணிக்கைக் குழு அறிக்கை:
இக்ராஃ உறுப்பினர் வருடாந்திர சந்தா தொகைகளை மன்ற உறுப்பினர்கள் விரைவாக வழங்கி ஒத்துழைக்குமாறு திட்டக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
வரும் நவம்பர் 07ஆம் நாளன்று நடைபெறும் மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டத்திற்கு முன்பாக மன்றத்தின் வரவு-செலவு கணக்குகளை தணிக்கைக் குழு - சிங்கை அரசுப் பதிவகத்தில் சமர்ப்பிக்க செயற்குழு கேட்டுக்கொண்டது.
விளையாட்டுப் போட்டிக் குழு அறிக்கை:
எதிர்வரும் 2015ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் உறுப்பினர்கள் முன்பை விட அதிகளவில் கலந்துகொள்ள வசதியாக, போட்டிகள் முற்கூட்டியே துவக்கப்படுவதாக, விளையாட்டுப் போட்டிக் குழு ஒருங்கிணைப்பாளர் எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ தெரிவித்தார்.
நடப்பு கூட்டத்திற்கு மறுநாளே டென்னிஸ் விளையாட்டுப் போட்டி துவக்கப்படவுள்ளதாகக் கூறிய அவர், அனைத்து விளையாட்டுப் போட்டிகளுக்கான கால அட்டவணையைக் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார். மன்ற உறுப்பினர்கள் போட்டிகளில் கலந்துகொள்ள வசதியாக கால அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மன்ற உறுப்பினர்களின் தொடர்பு விபரங்கள்:
மன்ற உறுப்பினர்களின் தொடர்ப விபரங்களை கைபேசி குறுஞ்செய்தி வாயிலாகப் பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மன்ற துணைச் செயலாளர் ஜெ.அபுல் காஸிம் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் தகவல்களைப் பெற்று, அடுத்த செயற்குழுக் கூட்டத்திற்கு முன்பாக, மன்றத்தின் கூகுள் குழுமத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டார்.
அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர்:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளராக - பருவ உறுப்பினர் அஹ்மத் மூஸா நியமிக்கப்பட்டார்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் துஆவுடன் கூட்டம், 21.30 மணியளவில், இரவுணவு விருந்துபசரிப்புடன் இறையருளால் இனிதே நிறைவுற்றது. நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தி தொடர்பாளர் - சிங்கை காயல் நல மன்றம்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
சிங்கை காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |