‘ஜன்சேவா கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம்’ என்ற பெயரிலான - வட்டியில்லா கடன் வழங்கும் சங்கம் குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி - காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஜன்சேவா பிரநிதிகளின் பங்கேற்புடன் தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து, ஜன்சேவா பயணக் குழுவினர் வெளியிட்டுள்ள விபர அறிக்கை வருமாறு:-
‘ஜன்சேவா கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம்’ என்ற பெயரிலான - வட்டியில்லா கடன் வழங்கும் சங்கம் குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்காக, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து நாடுகளில் - அங்குள்ள தமிழ் பேசும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து, ஜன்சேவா காயல்பட்டினம் கிளை தலைவர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், அதன் சென்னை கிளை செயலாளர் எஸ்.இம்தியாஸ் அஹ்மத், நிர்வாகிகளான எஸ்.இப்னு ஸஊத், எல்.கே.கே.லெப்பைத்தம்பி ஆகியோரடங்கிய - ஜன்சேவா பிரதிநிதிகள் குழு இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்றது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்...
சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் நாளன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமான நிலையத்தைச் சென்றடைந்த பயணக் குழுவினரை, தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்க துணைத்தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயலாளருமான எம்.எஸ்.செய்யித் முஹம்மத், தக்வா துணைச் செயலாளர் எம்.ஐ.அப்துல் வஹ்ஹாப் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
தக்வா சிறப்புக் கூட்டத்தில்...
அன்றிரவு தாய்லாந்து காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்ற - காயலர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் பயணக் குழுவினர் பங்கேற்று உரையாற்றினர்.
பேங்காக் மஸ்ஜித் கேளரங்கில்...
கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் நாள் திங்கட்கிழமையன்று, பாங்காக் நகரிலுள்ள பேங்காக் மஸ்ஜித் கேளரங்கில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்க தலைவர் அஜ்மல்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதன் துணைத்தலைவர் ஹுமாயூன், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் ஏ.டபிள்யு.அப்துல் காதிர் புகாரீ இறைமறை வசனங்களை கிராஅத்தாக ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்க செயலாளர் முஹம்மத் ஸாபிக் வரவேற்புரையாற்றினார்.
தாய்லாந்து காயல் நல மன்ற செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத், இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த ஜன்சேவா பிரதிநிதிகள் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், இந்தியாவிலிருந்து ஜன்சேவா பிரதிநிதிகளாகக் கலந்துகொண்ட ஜன்சேவா காயல்பட்டினம் கிளை தலைவர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், அதன் சென்னை கிளை செயலாளர் எஸ்.இம்தியாஸ் அஹ்மத், நிர்வாகிகளான எஸ்.இப்னு ஸஊத், எல்.கே.கே.லெப்பைத்தம்பி ஆகியோர் உரையாற்றினர்.
பின்னர், ஜன்சேவா குறித்த பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு பயணக் குழுவினர் விளக்கமளித்துப் பேசினர்.
நன்றியுரையைத் தொடர்ந்து, பேங்காக் மஸ்ஜித் இமாம் முஹ்யித்தீன் துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் நிறைவுற்றது. ஜன்சேவா காயல்பட்டினம் கிளை துணைச் செயலாளர் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
தாய்லாந்து இஸ்லாமிய வங்கியில் பயணக் குழுவினர்:
கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் நாளன்று, தாய்லாந்து இஸ்லாமிய வங்கியின் நடவடிக்கைகளை, ஜன்சேவா பயணக் குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
இந்தியாவின் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 10 ஆண்டுகள் பொருளியல் துறையில் பயின்று, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற - வங்கியின் ஷரீஆ துறை துணைத் தலைவர் ஆதம் பயணக் குழுவினருக்கு வங்கியின் செயல்திட்டங்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
தாய்லாந்து முழுவதும் மொத்தம் 2300 ஊழியர்களைக் கொண்டு 130 கிளைகளுடன் தாய்லாந்து இஸ்லாமிய வங்கி செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்தியாவில் வட்டியிலா நிதித் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்து, அவருக்கு பயணக் குழுவினர் விளக்கிக் கூறினர்.
நிறைவில், குழுமத்தினருக்கு வங்கியின் ஆண்டறிக்கை மலரை தாய்லாந்து இஸ்லாமிய வங்கியின் ஷரிய்யா துறையின் துணைத் தலைவர் முனைவர் ஆதம், பயணக் குழுவினருக்கு அன்பளிப்புச் செய்தார்.
தாய்லாந்து காயல் நல மன்றத் தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், அதன் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்திருந்தனர்.
நீடூர் மற்றும் கீழக்கரை மக்களுடன்...
நீடூர் மற்றும் கீழக்கரை ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கான சிறப்புக் கூட்டம், கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் நாள் புதன்கிழமையன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சில், ஜன்சேவா குறித்து பயணக் குழுவினர் அளித்த விளக்கங்களின் பயனாக, இவ்விரு ஊர்களிலும் விரைவில் ஜன்சேவா கிளை துவங்குதென தீர்மானிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் துவக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, பயணக் குழுவினர் ஹாங்காங் சென்றனர்.
ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில்...
ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில், கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் நாள் சனிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின், ஜன்சேவா விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ் இறைமறை குர்ஆனின் சில வசனங்களை கிராஅத்தாக ஓத, ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் அதன் தமிழாக்கத்தை வாசித்தார்.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயலாளர் செய்யித் அஹ்மத் வரவேற்புரையாற்றினார்.
பின்னர், இந்தியாவிலிருந்து ஜன்சேவா பிரதிநிதிகளாகக் கலந்துகொண்ட ஜன்சேவா காயல்பட்டினம் கிளை தலைவர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், அதன் சென்னை கிளை செயலாளர் எஸ்.இம்தியாஸ் அஹ்மத், நிர்வாகிகளான எஸ்.இப்னு ஸஊத், எல்.கே.கே.லெப்பைத்தம்பி ஆகியோர் உரையாற்றினர்.
பின்னர், ஜன்சேவா குறித்த பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு பயணக் குழுவினர் விளக்கமளித்துப் பேசினர்.
ஜன்சேவா காயல்பட்டினம் கிளை துணைச் செயலாளர் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நீடூர் அப்துர்ரஹ்மான் நன்றி கூற, கவ்லூன் பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
ஜன்சேவா பயணக் குழுவினரின் உரை விபரங்கள்:
தாய்லாந்து மற்றும் ஹாங்காங் நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கப் பிரதிநிதிகள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு வருமாறு:-
வாவு எஸ்.காதிர் ஸாஹிப் - தலைவர், ஜன்சேவா காயல்பட்டினம் கிளை:
காயல்பட்டினத்தில் ஜன்சேவா கிளை துவக்கப்பட்ட முறை, அதன் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து அதன் தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் உரையாற்றினார். அவரது உரை விபரம்:-
வட்டியில்லா பொருளாதாரத் திட்டம் இன்று அத்தியாவசியத் தேவையாக உலக நாடுகளில் உருவெடுத்து வருகிறது. இந்தியாவில் வட்டியில்லாத வங்கியை நோக்கி, ஜன்சேவா தனது பயணத்தைத் துவக்கி, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக, சிறுதொழில் முனைவோருக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம்’ என்ற பெயரில் தமிழகத்தின் - சென்னை, வாணியம்பாடி, காயல்பட்டினம், நெல்லை ஆகிய 4 கிளைகள் உட்பட, இந்தியா முழுக்க 24 கிளைகளுடன் ஜன்சேவா இயங்கி வருகிறது. நாகர்கோவில், கோவை, நீடூர், கீழக்கரை ஆகிய ஊர்களிலும் ஜன்சேவாவைத் துவக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காயல்பட்டினத்தில் ஜன்சேவா கிளையைத் துவக்குவதற்காக நடத்தப்பட்ட கருத்தரங்கங்களில் நானும் கலந்துகொண்டேன். அதில் ஏற்பட்ட ஈர்ப்பால், நான் மட்டுமின்றி, என் குடும்ப அங்கத்தினர் சிலரும் கூட இதில் முதலீடு செய்துள்ளோம். பலரது கூட்டு முயற்சியின் பலனாக, மிகக் குறைந்த கால அவகாசத்தில், 20 லட்சம் ரூபாய் முதலீடாகத் திரட்டப்பட்டது.
காயல்பட்டினத்தில் கிளையைத் துவக்கும் முன், ஏற்கனவே வாணியம்பாடியில் இயங்கி வரும் ஜன்சேவாவை 11 பேர் கொண்ட குழுவினர் நேரில் சென்று பார்த்தறிந்து வந்தோம். அதன் தொடர்ச்சியாக இறையருளால் காயல்பட்டினத்தில் ஜன்சேவா துவக்கப்பட்டது. அதற்கான நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டபோது, பலரது வற்புறுத்தல் காரணமாக நான் காயல்பட்டினம் கிளையின் தலைவராகப் பொறுப்பேற்க நேர்ந்தது. என் கடமையுணர்ந்து, என்னாலியன்ற அளவில் இறையருளால் செயல்பட்டு வருகிறேன்.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால் - மஹ்ழரா, ஜாவியா, பெரிய - சிறிய குத்பா பள்ளிகள், அல்ஜாமிஉல் அஸ்ஹர், மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள் எல்லாம் இந்த ஜன்சேவாவில் மாச்சரியங்களை மறந்து ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
ஜன்சேவா காயல்பட்டினம் கிளையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்குதாரர்களாகவும், வைப்பீட்டாளர்களாகவும் (Share Holders and Depositers) உள்ளனர். காயல்பட்டினத்தைச் சேர்ந்த இன்னும் பலர் இதில் முதலீட்டாளர்களாகவும், வைப்பீட்டாளர்களாகவும் இணைய வேண்டும் என்பதையும், இதுவரை கிளை துவக்கப்படாத பிற ஊர்களைச் சேர்ந்தோர் தமது பகுதிகளில் கிளை துவக்கிட தூண்ட வேண்டும் என்பதையும் அடிப்படை நோக்கங்களாகக் கொண்டே நாங்கள் பயணித்து இங்கு வந்துள்ளோம்.
அவசரத் தேவைக்கு உதவி செய்ய வழிகாட்டுதலின்றி, வட்டிக்கடைகளில் நகைகளையும், பொருளாதாரங்களையும், ஏன் - மானம், மரியாதையையும் இழந்து விழிபிதுங்கி இருப்போர் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துவிடாமல் காக்கும் பொருட்டே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு உங்கள் யாவரின் மேலான ஒத்துழைப்புகளை வழங்கி, இம்மை - மறுமை நற்பேறுகளை நிறைவாக அடைந்திட அனைவரையும் அன்புடன் அழைத்து எனதுரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்.இப்னு ஸஊத் - நிர்வாகக் குழு உறுப்பினர், ஜன்சேவா காயல்பட்டினம் கிளை:
ஜன்சேவாவின் வட்டியில்லா பொருளாதாரத் திட்டம் குறித்து அதன் சென்னை மற்றும் காயல்பட்டினம் கிளை நிர்வாகக் குழு உறுப்பினா எஸ்.இப்னு ஸஊத் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம்:-
வட்டியில்லா நிதி திட்டங்கள் மட்டுமே ஏழைகளை அநியாய வட்டிக் கடன் கொடுமையில் இருந்து மீட்கும் என நிபுணர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே, வட்டியில்லா வங்கி முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல முனைகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அப்பயணத்தில் ஓரம்சமாக, இந்தியாவில் ஜன்சேவா எனும் கூட்டுறவு கடன் சங்கம் 4 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டு, தற்போது தமிழகத்தில் 4 கிளைகள் உட்பட நாடு முழுக்க 24 கிளைகளுடன் ஜன்சேவா இயங்கி வருகிறது.
பொருளாதாரச் சுரண்டலை முற்றிலும் தடுக்கும் வகையிலும், மக்களின் பொருளாதார வாழ்வாதாரம் மேம்படையவும் வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கி முறையே சாத்தியமானாது என்பது உலகளாவிய அளவில் நிருபணமாகி வருகிறது.
இஸ்லாமிய நாடுகளில் மட்டுமின்றி ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிலும் வட்டியில்லா வங்கிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த வங்கி முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.
இந்திய இஸ்லாமிய பொருளாதார மையம் என்ற நிறுவனம் இதற்காக துவக்கப்பட்டு அதன் தலைவராக அப்துல் ரகீப் சாகிப் செயல்பட்டு வருகிறார். இந்நிறுவனம் இஸ்லாமிய வங்கிமுறையை இந்தியாவில் அமல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான எம்.அப்துல் ரஹ்மான், அப்பொறுப்பிலிருந்தபோது பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய முதல் உரையிலேயே இதை வலியுறுத்திப் பேசியுள்ளார். தொடர்ந்து அங்கு அவர் ஆற்றிய பல உரைகளிலும் வட்டியில்லாப் பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்திப் பேசியுள்ளார்.
வட்டியில்லா வங்கி முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவது சாத்தியமே என்றாலும் கூட, இதைப்பற்றிய முழுமையான ஆய்வோ அல்லது ஆய்வில் வட்டியில்லா வங்கி முறை பற்றி முழு விவரம் அறிந்தவர்கள் இடம் பெறக்கூடிய வாய்ப்பையோ பாரபட்சமுடன் செயல்படும் சில அதிகாரிகள் திட்டமிட்டு தடுத்துவிட்டனர்.
இதற்கிடையில் இந்திய வங்கி முறையின் மேம்பாட்டு நிலையை ஆய்வு செய்ய 1998இல் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு மத்திய அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், வங்கி முறையில் மேம்பாட்டை முழுமையாகக் காண வேண்டுமானால் இஸ்லாமிய வங்கி முறையை அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்தது.
இவ்வாறு பரிந்துரை செய்த ரகுராம் ராஜனே இப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டு விட்டதால் இஸ்லாமிய வங்கி முறை இந்தியாவில் அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.
அதன் முன்னோட்டமாக கேரளாவில் ரூபாய் 1000 கோடி மூலதனம் செய்யப்பட்டு, இஸ்லாமிய பைனான்ஸ் நிறுவனம் தொடங்க முயற்சிக்கப்பட்டபோது, நீதிமன்றம் மூலம் அதைத் தடுக்க சுப்பிரமணியசுவாமி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டு, இந்நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.
இச்சூழ்நிலையில் வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தலைமையில், காங்கிரஸ் எம்.பி.க்களான மவ்லானா அஸ்ராருல் ஹக் (உ.பி.), முஹம்மது அதீப் (டெல்லி), ஹுசைன் தல்வர் (மகாராஷ்டிரா), ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. அலி அன்வர் அன்சாரி (பீகார்), சமாஜ்வாதி எம்.பி ஷபீகுர் ரஹ்மான் பர்க் (உ.பி.), பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி முகம்மது சலீம்கான் (உ.பி) ஆகியோரும், இந்திய இஸ்லாமிய பொருளாதார மைய தலைவர் அப்துல் ரகீப் சாகிபும் கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் நாளன்று, அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜ் குழு பரிந்துரைப்படி இஸ்லாமிய வங்கி முறையை நன்கு தெரிந்த இரண்டு மூன்று அறிஞர்கள் உள்ளடக்கிய ஆய்வுக் குழு உருவாக்கப்பட்டு நடைமுறை திட்டங்களை வகுக்க வேண்டும்.
மலேஷி்ய நாட்டில் சுற்றுப்பயணம் செய்த இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்படும் இஸ்லாமிய வங்கி முறை மிகச்சிறந்த ஒன்று; அது இந்தியாவிற்கு சாலச் சிறந்தது. அது பற்றி ஆய்வு செய்யப்படும்” என்று பேசியது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது. அதை இங்கே நினைவுகூர்வது பொருத்தம் என்று கருதுகிறேன்.
குறைந்தபட்சம் ஜன்சேவா போன்ற வட்டியிலா வங்கி முறையை செயல்படுத்தக்கூடிய ஒரு சிறு தனிப்பிரிவையாவது உருவாக்குவதற்கேற்ப மத்திய அரசு அனுமதி தர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது.
எல்.கே.கே.லெப்பைத்தம்பி - நிர்வாகக் குழு உறுப்பினர், ஜன்சேவா காயல்பட்டினம் கிளை:
ஜன்சேவா சென்னை மற்றும் காயல்பட்டினம் கிளைகளின் நிர்வாகக் குழு உறுப்பினர் எல்.கே.கே லெப்பைத்தம்பி ‘வட்டி ஓர் வன்கொடுமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:-
வட்டி ஒரு கொடூரமானது என்பதை கொடுப்போரும், வாங்குவோரும்தான் மற்றவர்களை விட மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர். எனினும் அதிலிருந்து விடுபட முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலை தனிமனிதருக்கு மட்டுமல்ல. மாறாக, உலக நாடுகள் அனைத்துமே இந்த வட்டியை மையமாக வைத்தே இயங்கி வரும் நிலையில், அதன் கொடூரம் புரிந்திருந்தும் அதிலிருந்து விடுபட வழி அறியாது விழி பிதுங்கி நிற்கின்றன. பணக்கார நாடுகள் சில, ஏழை நாடுகளை வட்டியின் பெயரால் சுரண்டிப் பிழைத்து வருகின்றன. வளர்ந்து வரும் ஏழை நாடுகளோ வேறு வழியின்றி வட்டிக்கு வாங்கி, அதற்கான வட்டியைக் கட்ட மேலும் வட்டிக்கு வாங்கி... என வட்டிக்கு மேல் வட்டி என்று பின்னோக்கிச் சென்றுகொண்டே இருக்கின்றன.
உலகளவில் இன்று இயங்கி வரும் எல்லா தொழில் நிறுவனங்களும் இந்த வட்டியை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகின்றன.
இத்தொழிலில் ஈடுபட்டுவரும் முனைவர்கள் கூறும் காரணங்கள்தான் வேடிக்கையானது. விரைவில் முன்னேற்றம் அடைய வட்டிக்கு வாங்குவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என அவர்கள் வாதிடுகின்றனர். அவசரத் தேவைக்கு என வட்டிக்கடைகாரர்களைத் தவிர கடன் தருவதற்கு யார் முன் வருகிறார்கள்? என பலவீனமான கேள்வி ஒன்றையும் எடுத்து வைக்கின்றனர்.
மொத்தத்தில், வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை. ஆனால் சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும், பேராசைக்காரர்களையும், சகோதர மனப்பான்மை அற்றவர்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும் உணருவதில்லை.
பெரும் சமூகத் தீமையான வட்டியை விட்டு இஸ்லாமை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களும் கூட விலகாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதே. இதற்கு முக்கிய காரணம் பலர் இதை ஒரு பாவமாகவே கருதவில்லை என்பதேயாகும்.
ஈமான் கொண்டோரை! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) உண்ணாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள் என திருமறை குர்ஆனின் 3ஆவது அத்தியாயம், 130ஆவது வசனம் கூறுகிறது.
இறைவன் நான்கு பேர்களை சுவர்க்கத்திற்கோ அல்லது அதனுடைய சுகத்தை அனுபவிப்பதற்கோ விட மாட்டான். அவர்கள்
1. குடிப்பதை வழமையாகக் கொண்டவர்கள்.
2. வட்டி வாங்கித் தின்றவர்கள்.
3. அநாதைகளின் சொத்தை அநியாயமாக அபகரித்தவர்கள்.
4. பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள்.
வட்டியும், வியாபரமும் ஒன்றுதான் என்றும், திருமறையில் வட்டியைப் பற்றிக் கூறப்படும் வசனங்கள் இக்காலத்திற்குப் பொருந்தாது என்றும் - பலர் பணத்தின் மீது கொண்ட பேராசையால் தாமாகவே தாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் சிலர் வட்டி வாங்குவதுதான் பாவம்; கொடுப்பது பாவமில்லை என்றும், வட்டியை அடிப்படையாகக் கொண்ட வங்கியில் வேலை செய்வது கூடும் என்றெல்லாம் கூட கூறுகின்றனர்.
வட்டி வங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக் கணக்கை எழுதுவது வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபிகளார் அவர்கள் சபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவர்களே.
இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது.
எஸ்.இம்தியாஸ் அஹ்மத் - செயலாளர், ஜன்சேவா சென்னை கிளை:
‘ஜன்சேவாவின் நோக்கமும், செயல்திட்டங்களும்’ எனும் தலைப்பில், அதன் சென்னை கிளை செயலாளர் எஸ்.இம்தியாஸ் அஹ்மத் விளக்க உரையாற்றினார்.
ஜன்சேவாவின் செயல்பாடுகள் குறித்த - பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு, அதன் பிரதிநிதிகள் விரிவான விளக்கமளித்தனர்.
ஜன்சேவா காயல்பட்டினம் கிளை துணைச் செயலாளர் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
நன்றியுரையைத் தொடர்ந்து, பேங்காக் மஸ்ஜித் இமாம் முஹ்யித்தீன் துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, ஜன்சேவா பயணக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
ஜன்சேவா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |