காயல்பட்டினம் கடற்கரை பராமரிப்பு தொடர்பாக நகர்மன்றக் கூட்டங்கள் பலவற்றில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்ட நிலையிலும், அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால் அவை ஏட்டளவிலேயே உள்ளன.
நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எப்போதாவது ஒருமுறைதான் கடற்கரைக்கு வந்து செல்லும் நிலையுள்ளதால், பராமரிப்பு விதிமீறல்கள் கண்காணிக்கப்படாத நிலையில், பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையும் இணைந்து நாளுக்கு நாள் கடற்கரையில் சேரும் குப்பைகளின் அளவு அதிகரித்து வருகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு, இந்த ஊரின் மக்களாக தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற கடமையுணர்வுடன் களமிறங்கியுள்ளனர் காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் இயங்கி வரும் ‘கலங்கரை விளக்கம்’ மகளிர் தன்னார்வக் குழுவினர்.
காயல்பட்டினம் கடற்கரையை, இம்மாதம் 01ஆம் நாள் சனிக்கிழமையன்று 14.00 மணி முதல், 16.00 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாமல் பணியாற்றி, முழுமையாக துப்புரவு செய்தனர்.
நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி தன்னார்வ மகளிருக்கு, துப்புரவுப் பணிக்குத் தேவையான பொருட்களை வழங்கி, பணியின்போது நேரில் சென்று வழிகாட்டினார்.
வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட குடும்பப் பெண்கள், சிறுவர் - சிறுமியர் என 30க்கும் மேற்பட்டோர் தன்னார்வத்துடன் பணியாற்றியமைக்காக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், கடற்கரைக்கு நேரில் சென்று அவர்களை வாழ்த்திப் பாராட்டினார்.
இதுகுறித்து, தன்னார்வ மகளிர் கூறியதாவது:-
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியைச் சேர்ந்த நாங்கள், ‘கலங்கரை விளக்கம்’ என்ற பெயரில் இயக்கமாகச் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் வசிக்கும் ஊருக்கு எங்களால் இயன்ற எதையாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலே இவ்வமைப்பின் துவக்கத்திற்குக் காரணம்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவராக வஹீதா அம்மா இருந்த காலத்தில், கடற்கரையில் இதுபோன்று சேர்ந்த அளவுக்கதிகமான குப்பைகளை நாங்கள் தன்னார்வத்துடன் களப்பணியாற்றி அகற்றினோம். அதைப் போல தற்போதும் நாங்கள் களப்பணியாற்றுகிறோம். இப்பணியை எங்களால் இயன்ற அளவுக்கு தொடர்ந்து செய்வோம்.
கடற்கரையில் சேரும் குப்பைகள் பெரும்பாலும் தேனீர் அருந்தும் கோப்பைகள், திண்பண்டங்களுக்கான தட்டுகள், ஐஸ் க்ரீம் உறைகள், விறகடுப்பு வைத்து திண்பண்டங்கள் விற்பனை செய்வோர் விட்டுச் செல்லும் அடுப்புக் கரி ஆகியனவாகவே உள்ளன. இவற்றை விற்பனை செய்ய வரும் வணிகர்களுக்கு நகராட்சி நிர்வாகம் முறையான கட்டுப்பாடுகளை விதித்து, அதன்படி தொடர்ந்து கண்காணித்து வந்தாலே இக்குப்பைகள் சேராமல் கடற்கரை சுத்தமாக இருக்கும். அதை, ஆணையர் தலைமையிலான நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
“துள்ளி விளையாட வேண்டிய வயதில் நீங்களும் ஏன் இந்த வேலையைச் செய்கிறீர்கள்?” என்று அங்கிருந்த சிறுவர்களிடம் வினவியபோது, “எடம் துப்புரவா இருந்தாத்தானே நாங்க நல்ல ஜாலியா வௌயாட முடியும்? அதுக்குத்தான் செஞ்சோம்...” என்றனர் அவர்கள்.
காயல்பட்டினம் கடற்கரை பராமரிப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |