காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெருவில் அமைந்துள்ளது மஹான் அஸ்ஸெய்யித் அஹ்மத் ஸாஹிப் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தலம். ஆண்டுதோறும் முஹர்ரம் முதல் நாள் முதல் 14ஆம் நாள் வரை இம்மஹான் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை.
அன்னாரின் 143ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 26.10.2014 அன்று துவங்கி, 07.11.2014 அன்று நிறைவுற்றது. அந்நாட்களில் தினமும் அதிகாலையில் கத்முல் குர்ஆன் ஓதி மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
நிறைவு நாள் நிகழ்ச்சிகள் முஹர்ரம் 13, 14ஆம் நாட்களில் நடைபெற்றது. முஹர்ரம் 13ஆம் நாளான 06.11.2014 அன்று 16.30 மணியளவில், இமாம் ஹஸன் - ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா மீதான மவ்லித் மஜ்லிஸும், 19.00 மணியளவில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றன.
திக்ர் மஜ்லிஸைத் தொடர்ந்து, இமாம் ஹஸன் - ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல்லாஹ் முஹம்மத் லெப்பை மிஸ்பாஹீ இந்த சொற்பொழிவை நிகழ்த்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
முஹர்ரம் 14ஆம் நாளான 07.11.2014 அன்று 16.30 மணியளவில், மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்கள் மீதான மவ்லித் மஜ்லிஸ், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மற்றும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ தலைமையில் நடைபெற்றது. 19.00 மணியளவில் ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மஹான் அவர்களின் வாழ்க்கை வரலாற்று சுருக்க உரையை, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ நிகழ்த்தினார். துஆ, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகள் அனைத்திலும் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் கந்தூரி கமிட்டி தலைவர் டீ.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ்இமாம், செயலாளர் எஸ்.ஏ.பீர் முஹம்மத், துணைச் செயலாளர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் 141ஆவது நினைவு நாள் கந்தூரி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |