ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றம் நடத்திய 36ஆவது காயலர் சங்கமம் நிகழ்ச்சியில், அம்மன்றத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட - அமீரகம் வாழ் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து, துபை காயல் நல மன்றச் செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
கடந்த 14.11.14 வெள்ளிக்கிழமை துபை அல் ஸஃபா பூங்காவில் வைத்து துபை காயலர்களின் 36வது ஒன்று கூடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
அனைவருக்கும் முன்பாக வரவேற்புக் குழுவினர் பூங்கா வந்து வருபவர்களை வரவேற்று அவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்காக காத்திருந்தனர். காலை 10.30 மணியளவில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் துவங்கினர். வருபவர்களின் காலைப் பசியைத் தீர்ப்பதற்காக சூடான சுண்டலும், சுவையான தேனீரும் பரிமாறப்பட்டன.
ஆண்கள் தரப்பில் ஆண்களும், பெண்கள் தரப்பில் பெண்களும் ஒன்றுகூடி தங்கள் நண்பர்கள், உறவினர்கள் என்று அளவளாவ ஆரம்பித்தனர். ஜும்ஆ தொழுகைக்கான நேரம் நெருங்கியவுடன் அனைவரும் அருகிலுள்ள மஸ்ஜிதுக்கு விரைந்தனர்.
ஜும்ஆ தொழுகை முடிந்ததும் கூட்ட நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சிக்கு துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் தலைமை தாங்கினார். அல்ஹாஃபிழ் கே.எம். இஃப்திகாருதீன் அவர்கள் சில இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
பொறியாளரும், எழுத்தாளருமான எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் நிகழ்ச்சித் தலைவரையும், மேடைக்கு வந்த ஸஃபா பூங்கா அதிகாரி அப்துல்லாஹ் அவர்களையும், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சகோ. எஸ்.டி. ஷெய்கு அப்துல் காதர், தம்மாம் காயல் நல மன்றத் தலைவர் டாக்டர் இத்ரீஸ், ஜாஸ்மின் பாரடைஸ் அல்ஹாஜ் கலீல், அபூதபீ காயல் நல மன்றத் தலைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ ஆகியோரையும், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களையும், மூத்த உறுப்பினர்களையும், சகோதர, சகோதரிகளையும், துடிப்புடன் சேவையாற்றிக் கொண்டிருந்த தன்னார்வத் தொண்டர்களையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.
மூத்தோர் உரை:
பின்னர் மன்றத்தின் மூத்த உறுப்பினர் துணி உமர் காக்கா அவர்கள் சிறிது நேரம் உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது:
மன்றம் தொடர்ந்து நடப்பதற்கு தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்களும், இன்னும் சில உறுப்பினர்களும் கடுமையாக உழைக்கிறார்கள். தலைவர் தனது நேரத்தை மன்றத்திற்காக ஒதுக்கி செலவிட்டு வருகிறார். இதேபோன்று புதிய உறுப்பினர்களும், இளைஞர்களும் முன்வந்து மன்றத்தின் நலப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சிறப்புரை:
பின்னர் சிறப்பு விருந்தினர் தம்மாம் காயல் நல மன்றத் தலைவர் டாக்டர் இத்ரீஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது சிறப்புரையில் கூறியதாவது:
உங்கள் அன்பு முகங்களைப் பார்ப்பதற்கு அருமையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன். துணி உமர் காக்கா, இன்னும் மற்ற மூத்த உறப்பினர்களின் உற்சாகம், உத்வேகம் ஆச்சரியம் அளிக்கிறது. இளைஞர்கள் எல்லா காரியங்களையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். துபை காயல் நல மன்றம் மருத்துவ உதவிகள், கல்விச் சேவைகள் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
மருத்துவம் என்பது நிறைவடைவதில்லை. ஒரு நோய் ஒழிந்தால், பல நோய்கள் உருவாகின்றன. ஆகவே மருத்துவ சேவையை என்றும் தொடர வேண்டும்.
நமதூரில் புற்று நோய் இப்பொழுது பரவலாக உள்ளது மிகவும் கவலை அளிக்கிறது. இளம் வயதினர் பலர் மரணமடைகிறார்கள். இதற்கு உடனடி செயல்பாடு தேவை. நமதூர் கே.எம்.டி. மருத்துவமனையின் கட்டமைப்பு, சுற்றுப்புறச் சூழல் எல்லாம் அருமையாக அமைந்துள்ளன. இது மாதிரி வேறெங்கும் அமையாது. அதன் செயல்பாடுகளில் தொய்வு விழாது அது முன்னேறுவதற்கும், அபிவிருத்தி அடைவதற்கும் நாம் ஒத்துழைப்புகள் செய்ய வேண்டும்.
முன்பு நமதூரைச் சார்ந்த சிறந்த மருத்துவர்கள் இரவிலும் அவசர சிகிச்சைக்காக வீடுகளுக்கு வருவார்கள். இன்று அவர்களெல்லாம் நம்மை விட்டுப் பிரிந்து போய் விட்டார்கள். ஆதலால் நமதூரில் இன்று அவசரகால சிகிச்சைக்கு மருத்துவர் உதவி என்பது இல்லை. ஒருவர் மரணித்துவிட்டார் என்று சொல்லக்கூட இன்று மருத்துவர் இல்லாதது பெருங்குறையாகும்.
ஆகவே இதில் கவனம் செலுத்துவது மிக அவசியம். இளம் மருத்துவர்கள் இதற்காக முன்வரவேண்டும். ஒரு நோயாளியின் துன்பத்தை நீக்கினால் அவர் நமக்கு நன்றி செலுத்துகிறார். இறைவனிடம் நமக்காக துஆ செய்கிறார். உங்கள் மன்றத்தின் மூலம் கேஎம்டி மருத்துவமனைக்கு அதிகமான உதவிகள் செய்கின்றீர்கள். அது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.
இவ்வாறு அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினர்கள் கவுரவிப்பு:
டாக்டர் இத்ரீஸ் அவர்களுக்கு மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஜனாப் கத்தீப் செய்யது இப்றாஹீம் அவர்கள் நினைவுப் பரிசை வழங்கினார். ஜாஸ்மின் பாரடைஸ் கலீல் காக்கா அவர்களுக்கு மன்றத்தின் மூத்த உறுப்பினர் எம்.எஸ். நூஹு ஸாஹிப் அவர்களும், அல்ஹாஜ் எஸ்.டி. ஷெய்கு அப்துல் காதர் அவர்களுக்கு மன்றத்தின் பொருளாளர் ஜே. முஹம்மது யூனுஸ் அவர்களும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
தலைமையுரை:
பின்னர் மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது:
நமதூரில் கலவரம் நடந்த சூழலில்தான் நமது மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. பெரியகுளத்தைச் சார்ந்த முஹ்யித்தீன் மதனி ஆலிம் அவர்கள் ஆரம்பத்தில் ஆக்கமும், ஊக்கமும் தந்தார்கள். அப்பொழுது கொஞ்சம் பேர்தான் இருந்தோம். ஆனால் இன்று நமதூர் இளைஞர்கள் பலர் இங்கே பல துறைகளில் முன்னணியில் உள்ளனர். இதற்குக் காரணமான நம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மூத்த உறுப்பினர் துணி உமர் காக்கா, செய்யது இப்றாஹீம் உட்பட இதர செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்திற்காக கடின உழைப்பு செய்திருக்கிறார்கள். விருந்து உணவு ஏற்பாடுகளை அவர்கள்தான் கடைசி வரை நின்று சாதிக்கிறார்கள். வருடத்திற்கு இரண்டு கூட்டங்கள் நடத்துகிறோம். அதனால் புதிய உறுப்பினர்களும், இளைஞர்களும் இணைந்து பணியாற்றுவது அவசியம். ஐடி படித்த உறுப்பினர்களும் தங்களின் பங்களிப்பை தவறாது பயன்படுத்த வேண்டும்.
உறுப்பினர் பெயர், தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைப் பதிவு செய்வதற்கும், அப்டேட் செய்வதற்கும் உறுப்பினர்கள் முன்வரவேண்டும். தொண்டியைச் சார்ந்த ஜனாப் அஸ்ஹருத்தீன் அவர்கள் மன்றத்திற்கான தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக ஸாஃப்ட்வேர் தயார் செய்து தேவையான ஒத்துழைப்பை அளித்து வருகிறார்.
முன்பு நமதூர் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கியும், சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களை உருவாக்கிய சில பள்ளிகளின் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் முகமாக பள்ளி நிர்வாகம் மூலமாக அவர்களின் நலத் திட்டங்களுக்கு உதவிகள் வழங்கியும் அவர்களை கௌரவித்து வந்தோம்.
இந்த வருடம் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், இமாம்களுக்கும், முஅத்தின்களுக்கும், மதரசா ஆசிரியர்களுக்கும், இதர ஊழியர்களுக்கும் கேஎம்டியில் வைத்து இலவச மருத்துவப் பரிசோதனைகளுக்கு மன்றத்தின் சார்பில் ஏற்பாடு செய்தோம். நமக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்கள், உலமாக்கள் ஆகியோரைச் சந்திப்பது நமது கடமை.
மன்றத்தின் செலவுகளை ஈடுகட்ட மன்ற உறுப்பினர்கள் முறையாக சந்தா செலுத்த வேண்டும். இந்தக் கூட்ட நிகழ்வுக்கான செலவுகளை ஈடுகட்ட தாராளமாக நன்கொடைகளைத் தந்தால் மன்றத்தின் சந்தா நிதி மிச்சப்படும். அதனை நமதூர் மக்களின் நலன்களுக்கு மட்டுமே பயன்படுத்த உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் தன் தலைமையுரையில் குறிப்பிட்டார்.
செயற்குழுவில் சேர ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளும்படி தலைவர் வேண்டுகோள் விடுக்க, அதனையேற்று ஏழு சகோதரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தார்கள்.
அதேபோன்று ஐடி துறையில் உள்ளவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளும்படி தலைவர் வேண்டுகோள் விடுக்க, மூன்று சகோதரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தார்கள்.
வணிகர் பேரவை:
அமீரகத்தில் வணிகம் புரியும் நமதூர் வணிகர்களை இணைத்து ஒரு வணிகர் பேரவை (Business Forum) அமைக்க திட்டம் இருப்பதாகவும் தலைவர் தெரிவித்தார்.
நிதிநிலையறிக்கை:
பின்னர் மன்றத்தின் நிதிநிலை அறிக்கையை பொருளாளர் ஜே. முஹம்மது யூனுஸ் சமர்ப்பித்தார். மன்றம் இக்ரஃ, கேஎம்டி மூலமாக காயல் பதியில் செய்த கல்விச் சேவைகள், மருத்துவ உதவிகள், பைத்துல் மால்கள் மூலமாக செய்து வரும் கல்வி உதவிகள் மற்றும் ஏழை எளியோருக்கான உதவிகள் போன்றவற்றை அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
கல்வியறிக்கை:
அதன் பின்னர் மன்றத்தின் கல்விக் குழு அறிக்கையை அதன் பொறுப்பாளர் சகோ. ஸக்காஃப் முனவ்வர் சமர்ப்பித்தார். இந்தக் கல்விக் குழு ஆரம்பித்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன என்றும், இந்தக் கல்வி உதவி மூலம் 80 ஏழை மாணவ மாணவியர் பலன் பெற்றுள்ளனர் என்றும், அனைத்து உதவிகளையும் இக்ரஃ மூலமாகவே செய்வதாகவும், இன்னும் எதிர்காலத்தில் கேரியர் கைடன்ஸ் போன்று பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவ அறிக்கை:
அடுத்ததாக மன்றத்தின் மருத்துவக் குழு அறிக்கையை மூத்த செயற்குழு உறுப்பினர் டி.ஏ.எஸ். மீரா ஸாஹிப் அவர்கள் சமர்ப்பித்தார். கடந்த ஒரு வருடத்தில் 41 நோயாளிகள் மன்றத்தின் மருத்துவ உதவி மூலம் பலனடைந்துள்ளனர் என்று கூறிய அவர், மைக்ரோ காயல் மூலமாகவும், ஷிஃபா மூலமாகவும், கேஎம்டி மருத்துவமனை மூலமாகவும் மன்றம் செய்து வரும் மருத்துவ உதவிகள், பள்ளி மற்றும் மதரஸா ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்கள் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார்.
கலந்துரையாடல்:
பின்னர் நமதூர் பிரச்னைகள் குறித்து கருத்துப் பரிமாற்ற கலந்துரையாடல் நடந்தது. உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைப் பரிமாறினர். ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை ஒரே கட்டணமாக ஆக்க வேண்டும், கேஎம்டி மருத்துவமனையிலிருந்து நடமாடும் அவசர சிகிச்சைக்கு (Mobile Emergency) ஏற்பாடு செய்ய வேண்டும், கேஎம்டி மருத்துவமனையில் நல்ல அனுபவம் உள்ள, நோயாளிகளை அன்போடு கனிவாக கவனித்துக்கொள்ளும் நர்ஸ்களை பணியில் அமர்த்துதல், புற்று நோய் போன்ற பாதிப்புகளை நமதூர் மட்டுமல்லாமல் அருகிலுள்ள ஊர்களிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து அவர்களையும் சேர்த்து போராட வேண்டும் போன்ற நமதூருக்குத் தேவையான நல்ல பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
நன்றியுரை:
நிகழ்ச்சியின் இறுதியாக செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். நூஹு ஸாஹிப் அவர்கள் நன்றியுரை நவின்றார்.
கூட்ட நிகழ்விடத்திற்கான ஏற்பாகளை எந்தக் குறையும் இல்லாமல் செய்து தந்த இப்றாஹீம் காக்கா மற்றும் பிரபு சுல்தான், விருந்து உணவு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்த துணி உமர் காக்கா, விளக்கு தாவூத் ஹாஜி, அஹமது முஹ்யித்தீன் மற்றும் ஹுஸைன் ஃபாரூக், தன் வீட்டு சமையலறையைத் தந்துதவிய தலைவர், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்காக வாராவாரம் கூடிய செயற்குழு உறுப்பினர்கள், இங்கே சுழன்று சுழன்று பணியாற்றிய தன்னார்வத் தொண்டர்கள், இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனுமதி தந்த ஸஃபா பூங்கா நிர்வாகத்தினர், தாயகத்தில் இருந்துகொண்டே வாகனம் மற்றும் பணியாளர்களைத் தந்துதவிய மன்றத்தின் மூத்த உறுப்பினர் ராவன்னா அபுல் ஹஸன் காக்கா (Emichem) மற்றும் அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தார், வாகனங்களை மேற்பார்வை செய்த முத்து முஹம்மத், கூட்டத்தில் கலந்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள், எங்கள் அழைப்பை ஏற்று மகிழ்ச்சியுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அபூதபி சகோதரர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் நிழற்படங்கள் எடுத்த ஃபயாஸ் ஹமீது மற்றும் ஸுப்ஹான், ஒலிபெருக்கி ஏற்பாடுகளைச் செய்த ஸாஜித், கூட்டம் நடத்துவதற்கு பாய்கள், இன்னபிற பொருட்கள் தந்து உதவிய ஈடிஏ ‘டி’ பிளாக் நிர்வாகத்தினர், உறுப்பினர் சந்தா வசூல் செய்து தரும் முத்து ஃபரீத், முனவ்வர் மற்றும் அபூபக்கர், உறுப்பினர்களின் பெயர்களைப் பதிவு செய்து, அவர்களது தொடர்புகளைப் புதுப்பித்த வரவேற்புக் குழுவைச் சார்ந்த தஸ்தகீர், நூஹு லெப்பை மற்றும் உமர் காலித், அன்பளிப்புகளுக்கு அனுசரனை வழங்கியவர்கள் ஆகியோருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மதிய விருந்து:
அனைவருக்கும் நெய்ச்கோறு, களறிக் கறி, கத்தரிக்காய் மாங்காய் பருப்பு, பச்சடி இனிப்பு ஆகியவை பரிமாறப்பட்டன. உணவு உண்டவர்கள் ஊரில் களறிச் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டதாக கூறினார்கள்.
விளையாட்டுப் போட்டிகள்:
பின்னர் குழந்தைகளுக்கான பல்சுவை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சாளை சலீம் அவர்கள் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார். குழந்தைகள் குதூகலமாக அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அத்தோடு அனைத்துக் குழந்தைகளையும் மகிழ்விக்கும் விதமாக அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
குலுக்கல் பரிசுகள்:
கூட்டத்திற்கு வருகை தருபவர்கள் முற்கூட்டியே வருவதை ஊக்குவிப்பதற்காக காலை 11 மணிக்கு முன்பு வருபவர்களுக்கும் (மூன்று குலுக்கல் வாய்ப்புகள்), ஜும்ஆவுக்கு முன்பு வருபவர்களுக்கும் (இரண்டு வாய்ப்புகள்), ஜும்ஆவுக்குப் பிறகு வருபவர்களுக்கும் (ஒரு வாய்ப்பு) என்று மூன்று பரிசுக் குலுக்கல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்ட இறுதியில் இதற்கான பரிசுக் குலுக்கல்கள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயங்கள், ஆர்யாஸ் ரெஸ்டாரண்ட் உணவுக் கூப்பன்கள் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
அதேபோன்று மன்றத்திற்காக உழைத்து வரும் செயற்குழு உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரின் பெயர்கள் குலுக்கப்பட்டு அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர் மாலை நேர தேனீரும், சமோசாவும் பரிமாறப்பட்டன.
மொத்த நிகழ்ச்சியையும் மன்றத்தின் செயலாளர் டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் அவர்கள் திறமையாக நெறிப்படுத்த, துணைத் தலைவர் சாளை சலீம் அவர்கள் அழகுற தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் முறைப்படுத்தி, பொறுப்பாளிகளை Follow up செய்து மொத்த நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற சகோ. முஹம்மது ஈசா அவர்கள் உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசுகளுக்கு மூன் பேக், ஜமீல் ஜூவல்லர்ஸ், ஆரியாஸ் ரெஸ்டாரண்ட் ஆகிய நிறுவனங்களும், கத்தீப் காக்கா, இப்றாஹீம் காக்கா ஆகியோரும் அனுசரனை வழங்கியிருந்தனர்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த அந்தி சாயும் நேரத்தில் அனைவரும் பிரியா விடை பெற்று பிரிந்து சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.S.அப்துல் ஹமீத்
படங்கள்:
ஃபயாஸ் ஹமீத்
மற்றும்
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
துபை காயல் நல மன்றம் சார்பில் இதற்கு முன் நடத்தப்பட்ட காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |