தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளின் பயன்பாட்டுக் காலத்தை 01.01.2015 முதல் 31.12.2015 வரை - ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப அட்டை புதுப்பிப்புப் பணிகள் நடப்பு டிசம்பர் 15ஆம் நாள் முதல் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளின் புழங்கு காலத்தை 1.1.2015 முதல் 31.12.2015 வரை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது.
அரசு ஆணையின் படி குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி நியாயவிலைக் கடைகளில் 15.12.2014ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அந்த நியாயவிலைக் கடையில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளில், எந்தெந்த குடும்ப அட்டைகளுக்கு எந்தெந்த தேதிகளில் உள்தாள் இணைத்து வழங்கப்படும் என்ற தகவல் அந்தந்த நியாயவிலைக் கடை விளம்பரப் பலகையில் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும். நாள் ஒன்றுக்கு 75 முதல் 100 குடும்ப அட்டைகள் வரை புதுப்பிக்கப்படும்.
15.12.2014 முதல் நியாவிலைக்கடை வேலை நாட்களில், குறிப்பிடப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலைக் கடைக்கு குடும்ப அட்டையை எடுத்துச் சென்று நியாய விலைக் கடையில் 2015ஆம் ஆண்டிற்கான உள்தாளை இணைத்து பெற்றுக் கொண்டு, நியாயவிலைக் கடையில் பராமரிக்கப்படும் 2015ஆம் ஆண்டுக்கான வழங்கல் பதிவேட்டில் கையொப்பமிட / இடது கை பெருவிரல் ரேகை பதிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கையொப்பமிட்டால் அல்லது கைரேகை பதித்தால்தான் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி முடிவுற்றதாக கருதப்படும். ஆதலால் தங்களுடைய குடும்ப அட்டையை 2015ஆம் ஆண்டிற்கு புதுப்பித்துக் கொள்வதுடன் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி செம்மையாக நடைபெற தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மேற்கண்டவாறான நாட்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப அட்டைகளை புதுப்பிக்க நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆந்தந்த நாளில் நியாயவிலைக் கடைக்கு சென்று குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டையை 2015ம் ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம். அந்தந்த வாரத்தின் கடைசி நாளான சனிக் கிழமை அன்று முந்தைய நாட்களில் புதுப்பிக்கத் தவறிய குடும்ப அட்டைதாரர்கள், தங்களது குடும்ப அட்டையை நியாயவிலைக் கடையில் புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் புதுப்பிக்கவில்லையெனில், 27/12, 29/12, 30/12 ஆகிய பொது தேதிகளில் புதுப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணி 31.12.2014க்குள் முடித்திட சிறப்பான ஒத்துழைப்பை பொதுமக்களும், பணியாளர்களும் வழங்கிட அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |