காயல்பட்டினத்தில் அண்மையில் தொடராகப் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்திடுவதற்காக ‘காயல்பட்டினம் மழை - வெள்ள நிவாரணக் குழு’ எனும் பெயரில் தற்காலிக அமைப்பு துவக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் குடியிருப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிலையான நிவாரண உதவிகளைச் செய்திடுவதென இவ்வமைப்பின் மூன்றாவது கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் முதற்கட்டமாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்டி ஸிராஜ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
அண்மையில் துவங்கப்பட்ட காயல்பட்டணம் மழை, வெள்ள நிவாரண குழுவின் மூன்றாவது அமர்வு சதுக்கைதெருவிலுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 03-12-2014 புதன் கிழமை காலை 11:00 மணியளவில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் ஹாஜி துளிர் எம்.எல்.சேக்னா லெப்பை அவர்களின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களில் மூத்தவரும், காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளையின் பொருளாளருமான வாவு நாசர் அவர்கள் கூட்டத்தலைவராக முன்மொழியப்பட்டு அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்டி சிராஜ் நிஜார் வந்திருந்த அனைவர்களையும் வரவேற்றதோடு, இதுவரையும் நிவாரண குழு செய்துவந்துள்ள செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார். அவரது உரை பின்வருமாறு;
காயல்பட்டணம் மழை, வெள்ள நிவாரண குழுவின் வேண்டுகோளை ஏற்று வருகைதந்திருக்கும் உங்கள் அனைவருக்கும், எனது சார்பிலும், நமது நிவாரண குழு சார்பிலும் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
அண்மைகாலத்தில் துவங்கப்பட்ட அமைப்பாக இருந்தாலும், காயல்மாநகர மக்களுக்கு ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளை நீக்க மிக சிறப்பாக நிவாரண பணியாற்றிருக்கிறோம். அல்ஹம்துலில்லிஹ்…
இறைவன் நாடினால் இனி வரும் காலங்களில் எண்ணற்ற பணிகள் செய்ய காத்திருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்
மேலும் சென்ற மாதம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் எளியோர்களுக்கு, ஒரு வாரகாலமாக உணவளிக்கும் அறப்பணியை நமதூர் பொதுநல அமைப்புகள், வெளிநாடுவாழ் காயலர்களால் நடத்தப்படும் காயல் நலமன்றங்கள் மற்றும் சமுதாய இயக்கங்களின் ஒத்துழைப்பு, உதவியுடன் செய்துமுடித்தோம். அல்ஹம்துலில்லிஹ்…
நிவாரண குழுவின் உதவியுடன், மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ரவிக்குமார் மற்றும் சுகாதார துணை இயக்குநர் S.உமா அவர்களின் உத்தரவின் பேரில் 27-11-2014 வியாழக்கிழமை சென்ட்ரல் மேனிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் பணியாற்றியதை பாராட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 28-11-2014 தேதியில் நன்றி தெரிவித்த கடிதம் கிடைக்கப்பெற்றோம்.
தற்போது நமதூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், குடிசையில் வாழும் மக்களின் வீட்டின் நிலையை நமதுகுழு ஆய்வு செய்திருக்கிறது. ஆய்வின் விவரங்களை A) முழுவதும் பாதிக்கப்பட்ட குடிசை, B) பாதிக்கப்பட்ட குடிசைக்கு தேவையான தளவாட சாமான்கள் அளிப்பது, C) பராமரிப்பு வேலைகள் செய்து கொடுப்பது போன்ற மூன்று வகைகளில் பட்டியல் படுத்திருக்கிறது.
வரலாறு காணாத மழையால் உருவாகியுள்ள இடர்பாடுகளை நீக்க, நமதூர் பொதுநல அமைப்புகள், வெளிநாடுவாழ் காயலர்களால் நடத்தப்படும் காயல் நலமன்றங்கள் மற்றும் சமுதாய இயக்கங்கள் அவர்களால் இயன்ற நிதியினை இந்த நிவாரண குழுவின் பொருளாளர் அவர்களிடம் கிடைக்க செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதனை ஏற்ற சில அமைப்புகள் தங்களால் இயன்ற நிதியை தருவதாக கருத்து தெரிவித்துள்ளனர். பல அமைப்புகளின் பதில்களை எதிர்பாத்திருகிறோம். இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் நல்பதிகள் வருமென கருதுகிறோம். இவ்வாறாக அவரதுரை அமைதிருந்தது.
பின்னர் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களின் கருத்து பரிமாற்றத்தின் அடிப்படையில் பின்வறும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மான எண் 1, 1000 பெருமதியுள்ள அத்தியாவசிய பொருட்கள் வழங்கள்
பாதிப்புக்கு உள்ளான அனைவர்களுக்கும் ரூபாய் 1000 பெருமதியான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மான எண் 2, காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் 30 குடும்பங்கள் ஏற்பு
சதுக்கை தெருவில் அமைந்திருக்கும் காயலட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் முதற்கட்டமாக 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஆகும் முழு செலவை ஒப்புக்கொண்டதற்கு நிவாரண் குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தீர்மான எண் 3, குடிசையாகவோ அல்லது கல் கட்டிடமாகவோ கட்டிதர முடிவு செய்யப்பட்டது.
இதுவரை கண்டறியப்பட்ட குடிசைகளை அதன் குடிசைவடிவிலேயே புதுப்பிப்பதென்றால் சுமார் ரூபாய் 5,00,000/- வரை வரலாம் என்று கணக்கெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் மீண்டும் மழை பெய்தால் குடிசைகள் பழுதடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததின் அடிபடையில், குடிசையை புதிப்பிப்பதைவிட கல் கட்டிடமாக கட்ட ஆரம்ப உதவிகள் செய்வதென்றால் சுமார் ரூபாய் 15,00,000/- செலவாகலாம் என கணக்குகெடுக்கப்பட்டது. இதற்காக நமதூர் அமைப்புகளின் ஒத்துழைப்புக்கு ஏற்பவும், நிவரணகுழுவின் விதிமுறைக்கு உட்பட்டும் முடிவு செய்யப்படுமென தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றபட்டது. இக்கூட்டதில் மழை வெள்ள நிவாரண குழுவினர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துக்கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட 2ஆவது தீர்மானத்தின் படி, சதுக்கை தெருவில் அமைந்திருக்கும் காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளையின் சார்பில் 07-12-2014 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியளவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில், அறக்கட்டளையின் தலைவர் பாளையம் முஹம்மது ஹசன் அவர்கள் தொடங்கி வைத்தார்; அதனை தொடர்ந்து அறக்கட்டளையின் பொருளாளர் வாவு நாசர், அறக்கட்டளையின் துணைத்தலைவர் டூட்டி. சுஹரவத்தி, சமூக ஆர்வலர்களான பேங்காங் காயல் நலமன்றத்தலைவர் செய்யது முஹம்மது, ஓமன் காயல் நலமன்ற பிரதிநிதி இஸ்மாயில் சூபி, துபாய் காயல் நலமன்ற பிரதிநிதி பாவா நவாஸ், மற்றும் குவைத் காயல் நலமன்ற பிரதிநிதி சலாஹுத்தீன், ஆகியோர் 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும், பெட் சீட்டையும் வழங்கினர்.
இந்நிகழ்வை மழை, வெள்ள நிவாரண குழுவின் நிர்வாகிகளான, ஜனாப். ஜுவல் ஜங்சன் அப்துர்ரஹ்மான், ஜனாப். சம்சுத்தீன், ஜனாப். செய்கு சுலைமான், ஜனாப். கண்டி சிராஜ் நிஜார், மற்றும் கல்/ப். செய்யது முஹம்மது ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |