காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நகரின் எல்லாப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியும், வழிந்தோடிய வண்ணமும் உள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கும் மழை நீர் சில குறிப்பிட்ட பகுதிகள் வழியாக கடலில் கலக்கிறது. இவ்வாறாக தண்ணீர் வழிந்தோடும் வழித்தடங்கள் பலவற்றில், நாளடைவில் ஆக்கிரமிப்புகள் உருவாயின. சில வடிகால்கள் செல்லும் பகுதிகளில் தமக்குரிய நிலங்களும், கட்டுமானங்களும் இருப்பதாக தனியார் சிலர் ஆவணங்களுடன் கூறி வருகின்றனர்.
நவம்பர் 25 அன்று , காயல்பட்டினம் கே.டீ.எம். தெரு - நெசவுத் தெருவிற்கு இடைப்பட்ட பகுதியிலுள்ள மூப்பனார் ஓடையில் தேங்கியிருந்த குப்பைகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணி நகராட்சியால் துவக்கப்பட்டது. மூப்பனார் ஓடை பகுதியில் கழிவுநீர்த்தொட்டி அமைத்துள்ள சில வீடுகளைச் சேர்ந்தவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால், பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நிறுத்தப்பட்ட பணிகள் இன்று காலை மீண்டும் துவங்கின. ஹாலோ பிளாக் கொண்ட கட்டுமானம் ஒன்று அகற்றப்பட்டது. இப்பணியின் போது - காவல்துறையினர், வருவாய் துறை அதிகாரிகள் அங்கிருந்தனர்.
புகைப்படங்களில் உதவி:
எம்.எஸ்.எம்.சம்சுதீன்,
13வது வார்டு உறுப்பினர், காயல்பட்டினம் நகராட்சி. |