சொத்துக் குவிப்பு வழக்கில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த அவர், தற்போது பிணையில் உள்ளார்.
ஜெயலலிதா சிறையிலிருந்தபோது விடுதலைக்காகவும், பிணையில் வெளிவந்த பிறகு வழக்குச் சிக்கல்களிலிருந்து அவர் முழுமையாக விடுபடுவதற்காகவும், அக்கட்சியைச் சார்ந்தவர்களால் உண்ணாவிரதங்கள், பல்சமயப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளருமான தமிழ்மகன் உசேன், அஜ்மீரில் துவங்கி, இந்தியாவின் 100 தர்காக்களில் ஜியாரத் செய்து, சிறப்புப் பிரார்த்தனை செய்து வருகிறார்.
30.11.2014 ஞாயிற்றுக்கிழமையன்று 16.00 மணியளவில் காயல்பட்டினத்திற்கு தமிழ்மகன் உசேன் வருகை தந்தார்.
ஸாஹிப் அப்பா தர்ஹா, லெப்பப்பா தர்ஹா, பெரிய முத்துவாப்பா தர்ஹா, காட்டு மகுதூம் பள்ளி ஷஹீத் முத்து மகுதூம் வலிய்யுல்லாஹ் தர்ஹா ஆகிய தர்ஹாக்களில் ஜியாரத் செய்தார். அவ்விடங்களிலுள்ள மஹான்களின் மண்ணறை மீது போர்வை போர்த்தி, மலர் தூவி மரியாதை செலுத்திய தமிழ்மகன் உசேன், தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா - சொத்துக் குவிப்பு வழக்குச் சிக்கல்களிலிருந்து முழுமையாக விடுபடுவதற்காக நடத்தப்பட்ட சிறப்புப் பிரார்த்தனைகளில் பங்கேற்றார்.
காயல்பட்டினத்தில் தர்ஹாக்களுக்கு அவர் சென்றபோது, அந்தந்த தர்ஹா நிர்வாகிகளால் வரவேற்பளிக்கப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், அதிமுக நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதிர், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், கட்சியின் நிர்வாகிகளான ராமச்சந்திரன், எஸ்.ஏ.முகைதீன், என்.எம்.அஹ்மத், சின்னத்தம்பி உள்ளிட்ட - காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார அதிமுக நிர்வாகிகள், காயல்பட்டினம் சுற்றுவட்டார ஊர்களின் உள்ளாட்சித் தலைவர்கள், நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அதிமுக குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |