‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சார்பில், வேளான் கண்காட்சி மற்றும் சாதனை விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பொருட்காட்சி திடலில், கடந்த நவம்பர் மாதம் 21, 22, 23 நாட்களில் நடைபெற்றது.
நிறைவு நாளன்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், சிறப்புற சாகுபடி செய்த 5 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ‘சிறந்த விவசாயி’ விருது வழங்கப்பட்டது.
நெல்சாகுபடிக்கான விருது செல்வமணி என்பவருக்கும், மா சாகுபடிக்கான விருது மாரிமுத்து என்பவருக்கும் வழங்கப்பட்டது. தேனீ வளர்ப்பிற்கான விருது வேலுசாமி என்பவருக்கும், காய்கறி உற்பத்திக்கான விருது கோபால் என்ற விவசாயிக்கும் வழங்கப்பட்டது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த செம்பருத்தி விவசாயி எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீமுக்கு - செம்பருத்தி விவசாயத்திற்கான சிறந்த விவசாயி விருது வழங்கப்பட்டது.
‘உழவுக்கு உயிரூட்டு’, ‘உழவர்க்கு வாழ்வூட்டு’ நிகழ்ச்சிகள் மூன்று நாட்களாக நடைபெற்றன. விவசாயத்திற்கு பயன்படும் புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் குறித்த கண்காட்சியும் இதில் இடம்பெற்றிருந்தது.
இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. மாணவ - மாணவியருக்கு விவசாயம் குறித்த ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. |