| 
   சஊதி அரபிய்யா-ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக யான்பு வாழ்  காயல் சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்காக சென்ற 28.11.2014 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் ஜித்தாவிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள யான்பு நகருக்கு மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் ஆறு வாகனங்களில் பயணமாயினர். வழியில் ரத்வா கம்பெனி பள்ளிவாசல் அருகில் காலை சிற்றுண்டிக்காக ஒதுங்கி, சகோ.A.M.செய்யிது அஹ்மது ஏற்பாட்டில் கொண்டு வந்திருந்த தேநீர் மற்றும் வடைகள் பரிமாறப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 12:00 மணியளவில் யான்பு  வந்தடைந்தோம். 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக யான்பு  நகர் வாழ்  மன்ற உறுப்பினர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு ஜும்ஆ  தொழுகைக்குப்பின் காயல் ஹவுசில் வைத்து வெகு சிறப்பாக ஆரம்பமானது. இனிய இந்நிகழ்விற்கு சகோ.முஹம்மது ஆதம் சுல்தான் தலைமை தாங்கினார். சகோ.அல்ஹாஃபிழ் ஸல்மான்  ஃபாரிஸ்  இறைமறை ஓதினார். சகோ.Z.A.சுல்தான் லெப்பை அனைவரையும் அகமகிழ வரவேற்றார். மன்றச்செயலர் சகோ.சட்னி S.A.K.செய்யிது மீரான் நிகழ்ச்சியை நெறிபடுத்தினார். 
  
 
  
  தலைமையுரை:  
  
"தொலை தூரத்திலிருந்து யான்பு வந்து நம் காயல் சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடுவது மிகுந்த சந்தோசமளிக்கிறதென்றும், இம்மன்றம் நமதூர் மக்களுக்கு செய்யும் பணிகளில் யான்பு காயலர்களின் பங்கு அளப்பரியதாக இருக்குமென்றும், நம் புண்ணிய நோக்கம் நிறைவேற நாம் ஒன்றிணைந்து பணிகளாற்ற வேண்டுமென்றும், நாம் என்ன செய்தோம், என்ன செய்கிறோம், என்ன செய்வோம் என ஆழ சிந்தித்து நம் பணிகளை முன்னெடுக்கவேண்டுமென்றும், மன்றத்தின் பணிகளுக்கு யான்பு காயலர்கள் என்றும் துணை நிற்பார்கள் நற்பணிகளை தொடர்ந்து செய்து அல்லாஹ்வின் அருளை பெறுவோம்" என்று தனது தலைமை உரையில் கூறி அமர்ந்தார் சகோ.முஹம்மது ஆதம் சுல்தான். 
  
 
  
  அறிமுகவுரை:  
  
தொடர்ந்து பேசிய மன்றத்தலைவர் சகோ.குளம் M.A.அஹ்மது முஹ்யித்தீன்  மன்றத்தின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள், உதவிகள் குறித்த குறிப்பை நினைவூட்டிய அவர்;  "நாம் அனைவரும் சேர்ந்து ஆரம்பித்த இம்மன்றம் கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் அறுபத்தைந்து இலட்சம் வரை உதவிகள் செய்து பயனாளிகளின் பிரார்த்தனைகளை பெற்றுள்ளதென்றும், இப்பாரிய உதவி நம் கைகோர்த்தலின் கூட்டு முயற்சியாலேயே சாத்தியமானதென்றும் 'இக்ரஃ' மற்றும் 'ஷிஃபா' அமைப்புகளின் தோற்றம் அதன் தேவை அவ்வமைப்புகளுக்கு நம்மன்றம் செய்து வரும் பங்களிப்புகள் குறித்தும் விபரமாக தெரிவித்த அவர்; இதுபோன்று ஒன்றுபட்டு செயல்பட்டால் மேலும் பல நல்ல பணிகளை நமதூருக்கு வழங்கலாமென்றும்" கூறினார். 
   
 
  
 
  
  கருத்துரைகள்:  
  
"கல்வி மற்றும் மருத்துவ தேவைகளின் அவசியத்தை வலியுறுத்தியும், மன்றம் செய்து வரும் சீரிய சேவைகளை நினைவூட்டியும், நம் மன்றப்பணிகளில் யான்பு காயலர்களின் பங்களிப்பு மிக அவசியமென்றும், நம் நகர் நலப்பணிகளுக்காக யான்பு சகோதரர்களை சந்திக்கும் எனது இந்த முதல் யான்பு பயணம் சிறப்பாக அமைந்துள்ளதென்றும்" கூறி அமர்ந்தார் மன்றத் துணைத்தலைவர் சகோ மருத்துவர் M.A.முஹம்மது ஜியாது. 
  
 
  
 
  
 "கனவிலும், நினைவிலும் நாம் நினைத்திராத அறப்பணிகளை ஆச்சர்யமூட்டும் வகையில் நம் மன்றம் செய்து வருகிறதென்றால் அது நாம் அளிக்கும் சந்தா என்ற சிறு தொகை மூலமும், நல்லுள்ளங்கள் அளிக்கும் நன்கொடைகள் மூலமும்தான். இவ்வாறான அறப்பணிகளை செய்வது நம் மன்றத்திற்கு கிடைத்த மகத்தான நற்பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். 
  
 
  
 
  
மறுமை வெற்றியே நம் மன்றத்தின் குறிக்கோள். நம் மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கஷ்டத்தில் பங்கு பெற்று அதை நிவர்த்தி செய்வதின் மூலமும் அந்த வெற்றியை அடையலாம். நம் நகர் மக்களுக்கு நன்மைகள் செய்வதில் 
உலக காயல் நல மன்றங்களிடையே போட்டி நிலவுவது மகிழ்வளிக்கிறது. அவ்வாறு நன்மைகளுக்காக போட்டியிடுவதின் மூலம் அல்லாஹ்வின் உதவியால் ஆரோக்கியமான காயலை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் நம்மால் உணர முடிகிறது.  உங்களின் மேலான ஆலோசனைகளையும், உங்களின் அன்பான ஆதரவினையும், உங்களின் தாரளமான உதவிகளையும் உரிமையோடு  தருவீர்கள்  என்ற ஆவலில் இங்கு வந்துள்ளோம். மன்றத்திற்கு ஊக்கமளிக்குமாறும், மன்றப் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற பிரார்த்திக்குமாறும் வேண்டி அமர்ந்தார்"   சகோ.S.H.ஹுமாயூன் கபீர். 
  
 
  
 
  
"நம் மன்றம் கடந்து வந்த பாதை, அதன் பயணம், அதன் இலக்கு பற்றிய செய்திகளை தந்தவர்; ஒரு சிறு தென்னை தும்பால் எதுவும் சாதிக்க முடியாது. அது திரிக்கப்பட்டு கயிறானால் பெரிய கப்பலையே இழுக்கலாம். அதுபோல் எம்மோடு தோள் நின்று களப்பணிகளில் ஒன்று சேர்ந்தால் இன்னும் பல அறப்பணிகளை நாம் ஆர்வமோடு செய்யலாம். ஆகவே நன்கொடைகள், தர்மங்கள் இவைகளை மன்றப்பணிகளுக்காக தந்துதவுமாறு யான்பு சகோதரர்களை கேட்டுக்கொண்டார்" சகோ.S.S.ஜாஃபர் சாதிக். 
 "நாமே அதிசயக்கும் வகையில் நம் மன்றம் மகத்தான பணிகளை செய்தது நம் ஒற்றுமையின் ஊடேதான். அறப்பணிகள் வெற்றியடைய ஒற்றுமை மிக முக்கியம். அந்த ஒற்றுமையின் மூலம் இன்னும் நாம் நிறையவே சாதிக்கலாம். சகோதரர்கள் தமது யோசனைகளை மன்றத்திற்கு வழங்குமாறு கேட்டு அமர்ந்தார்." சகோ.A.M.செய்யிது அஹ்மது. 
  
 
  
 
  
"இக்ரஃ மற்றும் ஷிபா வின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார் சகோ.M.W.ஹாமீது ரிஃபாய். இக்ரஃ மூலம் உதவி பெற்று மேற்படிப்பில் வெற்றி பெற்ற ஒரு மாணவன்  மன்றத்திற்கு நன்றிக்கடன்பட்டிருப்பதாக கூறிய செய்தியை நினைவுபடுத்தினார். பயனாளிகளின் பிரார்த்தனைகள் நம் மன்றத்திற்கு தெம்பாக உள்ளதென்றும், நாம் அளிக்கும் தர்மங்கள் நமக்கு மிகப்பயனளிக்குமென்றும், நாம் வழங்குவது சொற்பமாக இருந்தாலும் அதிலும் அல்லாஹ்வின் அருள் நிறைந்துள்ளதென்றும், ஆகவே நம்மால் இயன்ற அளவு நம் நகர் மக்களின் துயர் துடைக்க பாடுபடுவோம்" என்றும்  கேட்டுக்கொண்டார். 
  
 
  
 
  
  மனுக்கள் வாசிப்பு :  
  
மருத்துவம் மற்றும் கல்வி உதவி வேண்டி வந்த சில மனுக்கள் வாசிக்கப்பட்டு பயனாளிகளுக்கு செயற்குழுவில் உதவிகள் வழங்கிடும் முறை குறித்தும், அது நிமித்தம் நடந்தேறும் கருத்து பகிர்வுகள் மற்றும் ஆலோசனைகள் பற்றியும் எடுத்துச்சொல்லப்பட்டது. 
  
 
  
 
  
  மன்ற செயல்பாடுகள் :  
  
மருத்துவம் மற்றும் உயர் கல்விக்கான உதவிகள் வழங்கி வருவதோடு; நகரின் அவசியம் அறிந்து உதவுவதும், தாய்லாந்து காயல் நற்பணி மன்றத்துடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நமதூர் இறைஇல்ல இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கும் ரமலான் மாத சிறப்பு நிதியுதவி அளிப்பில் நம்மன்றம் பங்களிப்பு செய்ததும், KEPA  சுற்றுச்சூழல் அமைப்பு  மற்றும்  நல அமைப்புகளுக்கு உதவி வருவதும், மேலும் இதுபோன்ற பல நகர் நலப்பணிகளில் நம் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.  
  
 
  
 
  
மன்றபணிகளில் யான்பு காயலர்கள் இணைந்து சேவையாற்றுவதுபோல் ஜித்தாவிலிருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மலைப்பிரதேசமான அப்ஹா நகரில் வசிக்கும் 10 காயலர்கள் நம் மன்றத்தில் உறுப்பினர்களாகி மன்றத்தின் நலப்பணிகளுக்கு உதவியாக  இருந்து வரும் செய்திகளை விபரமாக எடுத்துச்சொன்னார்  மன்றச்செயலர் சகோ.சட்னி S.A.K.செய்யிது மீரான் 
கடந்த 10 ஆண்டுகளில் இம்மன்றம் வழங்கிய  உதவிகள் குறித்த நிதிநிலை விளக்கத்தின் முழு விபரப்பட்டியலின்  நகல் அனைவருக்கும் அளிக்கப்பட்டது. 
  
 
  
 
  
  கலந்துரையாடல்:  
  
யான்பு மற்றும் ஜித்தா சகோதரர்களிடையே  கலந்துரையாடல் நடைபெற்றது. கேட்கப்பட்ட ஐயங்களுக்கு முறையே தெளிவுகள் தரப்பட்டது. தரமான அழகான ஆரோக்கியமான கருத்துக்களை பரிமாறி கொண்டார்கள். யான்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் காயல் சகோதரர்கள் திரளாக கூட்டத்தில் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர். 
  
 
  
 
  
  நன்றியுரை:  
  
சகோ.கலவா M.A.செய்யிது இப்ராஹிம் வந்திருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை கூறினார். சகோ.S.S.ஜாஃபர் ஸாதிக் துஆ , கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். பிறகு காயலின் பாரம்பரிய களரி சாப்பாடு மதிய உணவாக அனைவருக்கும் பரிமாறப்பட்டது.  
  
 
  
 
  
நல்லதோர் உணவிற்குப்பின் செவிக்கு விருந்தாக அழகிய இஸ்லாமிய கீதங்கள் சகோ.M.O.முஹம்மது நூஹுவினால் இசைக்கப்பட்டது. தொடர்ந்து காயலின் சுவைமிகு இஞ்சி,ஏலம் தேநீர் விநியோகிக்கப்பட்டது. அன்போடு வரவேற்று கனிவாக உபசரித்த யான்பு வாழ் காயலர்களுக்கு மனமார்ந்த நன்றி கூறி காயல் ஹவுசிலிருந்து மாலை 5-00 மணியளவில் பிரியா விடைபெற்று, வழியில் YANBU ROYAL COMMISSION ல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள CHINA PARK ல் சிறிது அமர்ந்து ஒய்வு எடுத்து விட்டு ஜித்தா நோக்கி புறப்பட்டனர். வழியில் மக்ரிப், இஷா தொழுகைகளை நிறைவேற்றி இரவு 10-30 மணியளவில் இறையருளால் ஜித்தா வந்தடைந்தனர். 
  
 
  
 
  
கலந்தாலோசனை கூட்ட நிகழ்வுக்கு இட வசதியும் மதிய உணவு அனுசரணையையும் சகோ.M A.கலவா இப்ராஹீம் மிக சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்விற்கான எல்லாவித ஏற்பாடுகளையும் காயல் ஹவுஸ் சகோதரர்கள் நலமே செய்திருந்தனர்.
இப்பயணமும், இந்நிகழ்வும் சிறப்பாக நடந்தேற உதவி புரிந்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். 
  
 
  
 
  
தகவல்:  
அரபி M.I.முஹம்மது ஷுஅய்ப்    
நிலைப்படங்கள்:  
M.N.முஹம்மது ஷமீம்  
சட்னி S.A.K.முஹம்மது உமர் ஒலி  
சொளுக்கு S.M.அஹமது லெப்பை  
காயல் நற்பணி மன்றம் - ஜித்தா. 
  |