ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் உள்ள காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமப் பகுதிகளை ஆறுமுகனேரி வருவாய் கிராமத்துடன் இணைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்திக்க வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்க நிர்வாகக்குழுக் கூட்டம், அதன் தலைவர் த. தாமோதரன் தலைமையில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஆர். கிழக்கத்திமுத்து, செயலர் எஸ். துரைசிங், துணைச் செயலர் அ. சேர்மலிங்கம் மற்றும் பொருளாளர் எஸ். ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆறுமுகனேரி தேர்வுநிலைப் பேரூராட்சிப் பகுதியில் உள்ள 18 வார்டுகளில் 10 வார்டுகள் காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமத்தில் உள்ளன என்றும், இதனால் பொதுமக்கள் சான்றிதழ் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிரமம் உள்ளதென்றும், இதைத் தவிர்க்க மேற்குறிப்பிட்ட பகுதிகளை ஆறுமுகனேரி வருவாய் கிராமத்தில் இணைக்க வேண்டுமென்றும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்திப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தகவல்:
தினமணி |