கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் இயங்கி வரும் மலபார் காயல் நல மன்றத்தின் (மக்வா) 14ஆவது பொதுக்குழுக் கூட்டம், திரளான உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. KCGC செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் 14ஆவது பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 09ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 10 மணியளவில், JAN COTTAGE நெய்னா காக்கா இல்ல மாடியில் நடைபெற்றது.
மன்றத்தின் துணைத்தலைவர் யு.எல்.செய்யித் அஹ்மத், மூத்த உறுப்பினர் சாளை அபுல்ஹஸன், வாவு அலாவுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைச்செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். உறுப்பினர் அஃப்ரஸ் இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் செயற்குழு உறுப்பினர் ஸலாஹுத்தீன் - மன்றத்தின் சார்பில் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் மஸ்ஊத் தலைமையுரையாற்றினார்.
ஊரிலிருந்து உதவி கோரி பெறப்படும் விண்ணப்பங்களை மன்ற செயற்குழு உறுப்பினர்கள் விரைவாகப் பரிசீலிப்பதால், பயனாளிகள் உரிய நேரத்தில் பயனடைவதாகக் கூறிய அவர், இச்சேவை இறைவனின் பொருத்தத்தை நாடி தொய்வின்றி நடந்தேற மாதச் சந்தா தொகையை உறுப்பினர்கள் உரிய நேரத்தில் வழங்கி ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் உதுமான் அப்துர்ராஸிக் சமர்ப்பிக்க, மன்றத்தின் கணக்குத் தணிக்கையாளர் சேட் மொகுதூம் முஹம்மத் அவர்களால் கணக்குத் தணிக்கை செய்யப்பட்ட பின், கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
செயலர் உரை:
தொடர்ந்து, மன்றச் செயலாளர் உதுமான் லிம்ரா உரையாற்றினார்.
மருத்துவ உதவி உட்பட - தேவையான நகர்நலப் பணிகள் அனைத்தையும், மக்வா இறையருளால் நிறைவாகச் செய்து வருவதாகக் கூறிய அவர், உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ உதவிக் கூட்டமைப்பான ஷிஃபா மூலம் பயனாளிகளுக்கு இதுவரை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மக்வாவால் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அதன் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினார்.
மன்ற உறுப்பினர்கள் தொய்வின்றி வழங்கி வரும் சந்தா தொகைகளைக் கொண்டே இப்பணிகள் திருப்திகரமாக செய்யப்பட்டு வருவதாகக் கூறிய அவர், மன்ற உறுப்பினர்கள் முகமலர்ச்சியுடன் தமது பங்களிப்பை வழங்குவது நிர்வாகிகளை பெரிதும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது என்று பெருமிதத்துடன் பேசினார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஷிஃபா செயற்குழுக் கூட்ட விபரங்கள் குறித்தும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவர் விளக்கினார்.
சிறப்பு விருந்தினர் உரை:
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ஸதக்காவின் (தர்மத்தின்) முக்கியத்துவம் என்ற தலைப்பில் உருக்கமாகவும், தெளிவாகவும் உரையாற்றியதோடு, உலக காயல் நல மன்ற அமைப்பான ஷிஃபாவின் செயல்பாடுகளுக்கு, மக்வா செயலாளர் உதுமான் லிம்ரா உடைய ஆலோசனைகள் பெரிதும் பயன்பட்டு வருவதாகப் புகழ்ந்துரைத்து, அவரது இச்செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பளித்து வருவதாகக் கூறி மக்வா அமைப்பை அவர் பெரிதும் பாராட்டிப் பேசினார்.
தான் சார்ந்த KCGC அமைப்பின் அண்மைக்கால செயல்பாடுகள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும் அவர் தனதுரையில் விவரித்தார்.
களறி சாப்பாடு ஆயத்தப் பணிகள்:
பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நிகழ்விடத்தின் கீழ்ப்பகுதியில் மதிய உணவு - களறி சாப்பாடு சமையல் பணிகள் பரபரப்போடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தம் குடும்த்தினருக்காக முன்பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, மக்வாவின் பெயர் அச்சிடப்பட்ட பிரத்தியேக பாத்திரத்தில் பவுத்தி சாப்பாடு வினியோகிக்கப்பட்டது.
நன்றியுரை:
செயற்குழு உறுப்பினர் ரபீக் நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
திரளான உறுப்பினர்கள்...
அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, மன்ற நிர்வாகத்தினரும், துணைக்குழு பொறுப்பாளர்களும் விமரிசையாக செய்திருந்தனர்.
ளுஹ்ர் தொழுகை:
கூட்ட நிறைவுக்குப் பின், ளுஹ்ர் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. மன்ற தலைவர் மஸ்ஊத் தொழுகையை வழிநடத்தினார்.
மதிய உணவு விருந்துபசரிப்பு:
பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கூட்டம், நிகழ்விடத்திலேயே மதிய உணவு - களறி சாப்பாடு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, மலபார் காயல் நல மன்றத்தின் (மக்வா) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்யது ஐதுரூஸ் (சீனா)
செய்தித் தொடர்பாளர்
மலபார் காயல் நல மன்றம் – கோழிக்கோடு
மக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |