தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் கடந்த சில வாரங்களாக சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே தொடர்ந்து பெய்தது. சில நாட்கள் இடைவெளிவிட்ட நிலையில், இம்மாதம் 27ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று காலையில் துவங்கி, நள்ளிரவு வரை தொடர்மழை பெய்தவண்ணம் இருந்தது.
கிடைத்த இடைவெளியில், நகரில் தேங்கியிருந்த மழைநீரெல்லாம் வழிந்தோடிக்கொண்டிருந்த நிலையில் பெய்துள்ள இம்மழை காரணமாக மீண்டும் தெருக்களில் நீர்த்தேக்கம், பள்ளிவாசல்களுக்குள் நீர் புகல், வீடுகளில் கிணறும் - கழிவுநீர்த் தொட்டியும் கலக்கல் ஆகியன திருப்பம் கண்டன.
தொடர்ந்து பெய்து வரும் மழையால், நகரின் தரைப்பரப்பில் நாட்பட்ட நீர்த்தேக்கம் காரணமாக மண் வலுவிழந்து, ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வரிசையில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி ஆய்வுக் கூட கட்டிட வளாகத்தில், கடந்த 1993ஆம் ஆண்டுவாக்கில் நட்டப்பட்ட மரமொன்று வேரோடு சரிந்து விழுந்துள்ளது.
நகரில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |