காயல்பட்டினம் நகராட்சியின் நவம்பர் மாத சாதாரண கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை; நவம்பர் 28) மாலை 3:30 மணி முதல் மாலை 6:30 மணி
வரை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தலைமை தாங்கினார். 18 உறுப்பினர்களும்
கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நீண்ட விவாதங்களுக்கு பிறகும், பல விவாதங்கள் இன்றியும் நிறைவேற்றப்பட்டன.
நீண்ட விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் - பயோ காஸ் திட்டம், குப்பைகள் கொட்ட முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி
வாவூ செய்யாது அப்துர் ரஹ்மானால் வழங்கப்பட்ட ஸர்வே எண் 278 நிலம் சுற்றி BUFFER ZONE அமைப்பது மற்றும் DCW தொழிற்சாலைக்கு
முறையற்ற வகையில் முன்னால் ஆணையரால் வழங்கப்பட்ட கட்டிட உரிமம் ஆகியவை குறித்ததும் ஆகும்.
பயோ காஸ் திட்டத்திற்கு கோரப்பட்ட டெண்டர் மூலம் பெறப்பட்ட 3 ஒப்பந்தப் புள்ளிகளில் குறைவான தொகை குறிப்பிட்டிருந்த நிறுவனத்திற்கு பணி
வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் - இந்த திட்டத்தை, நகராட்சிகள் மண்டல செயற் பொறியாளர் (திருநெல்வேலி) வழங்கியுள்ள
அறிக்கையில் பரிந்துரைத்துள்ள ஸர்வே எண் 278 இடத்தில் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சிகள் மண்டல செயற் பொறியாளர் தயாரித்துள்ள அறிக்கையில் உள்ள பல குறைப்பாடுகளை மேற்கோள்காட்டி நகர்மன்றத் தலைவர் தீர்மானப்
புத்தகத்தில் தனது கருத்தினை பதிவு செய்தார்.
குப்பைகள் கொட்ட முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யாது அப்துர் ரஹ்மானால் வழங்கப்பட்ட ஸர்வே எண் 278 நிலம் சுற்றி -
விதிமுறைகள் கூறுவது போல் - BUFFER ZONE அமைத்திட நகர்மன்றத் தலைவர் தீர்மானம் கொண்டு வந்திருந்தார். அந்த தீர்மானத்தை பெருவாரியான உறுப்பினர்கள் நிராகரித்தனர்.
DCW தொழிற்சாலையின் விரிவாக்க திட்டங்களான PVC EXPANSION, CPVC PRODUCTION, TCE PLANT, SYNTHETIC IRON OXIDE PLANT ஆகியவற்றுக்கு
டிசம்பர் 6, 2013 அன்று - தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இன் விதி 250 படி நகர்மன்றத்தின் ஒப்புதல் பெறாமல் முன்னாள் ஆணையர்
ஜீ. அஷோக் குமார் கட்டிட உரிம அனுமதி வழங்கியுள்ளார். இந்த தகவல் - இம்மாதம் துவக்கத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
கீழ் பெறப்பட்ட தகவலில் வெளிவந்தது.
அதனை தொடர்ந்து KEPA சார்பாக - இந்த உரிமத்தை ரத்து செய்ய நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர், திருநெல்வேலி மண்டல நகராட்சி
நிர்வாகத்துறை இயக்குனர், நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையருக்கு கடிதம் வழங்கப்பட்டது. அந்த உரிமத்தை ரத்து செய்ய கோரி - தீர்மானம்
ஒன்றினை நேற்றைய கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் கொண்டு வந்திருந்தார்.
கூட்டத்திற்கு முன்பாக - KEPA அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம். ஸதக்கத்துல்லாஹ் தொலைபேசியில் உரையாடியும், அனைத்து உறுப்பினர்களுக்கு - இத்தீர்மானத்தை நிறைவேற்ற கோரி - கடிதமும் வழங்கி ஆதரவும் கோரியுள்ளார்.
இருப்பினும் - நகர்மன்றத் தலைவர், 5வது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.சம்சுதீன் ஆகியோர் மட்டும் உரிமத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற சம்மதம் தெரிவித்தனர்.
இதர 16 உறுப்பினர்கள் - நகர்மன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று அமைத்து, ஆய்வுகள் மேற்கொண்டப்பின், இது குறித்து முடிவு எடுக்க ஆதரவு தெரிவித்தனர். அந்த அடிப்படையில் தீர்மானம் நிறைவேறியது.
நகர்மன்றத் தலைவர் தனது கருத்தாக - உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த உரிமத்தை முறையற்ற வகையில் வழங்க உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் - தீர்மான புத்தகத்தில் எழுதினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள் குறித்த விபரங்களும், முழு வீடியோ பதிவும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். |