மழைநீர் வழிந்தோடத் தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, மழை பாதிப்புகள் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரிடம் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பின்வருமா கடிதம் அளித்துள்ளார்:-
கனமழை காரணமாக காயல்பட்டினத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நோய் பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசியதாகவும், சிறப்பு மருத்துவ முகாம் நடத்து ஏற்பாடு செய்து தருமாறு, மாவட்ட சுகாதார இயக்குநர் டாக்டர் உமாவிடம் கேட்டுக்கொண்டதாகவும், நகர்மன்றத் தலைவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையினால் திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளன. மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சாத்தான்குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளைப் பார்வையிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 23ஆம் நாளன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் முன்னிலையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன் தலைமையில் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தெரிவித்தாவது:-
மழையினால் 01.10.2014 முதல் 22.11.2014 வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 5 ஆடுகள், 1 பசு மாட்டிற்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 245 பகுதி சேதமடைந்த வீடுகளுக்கும், 55 முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான 403 குளங்களில் 45 குளங்கள் முழுவதும் நிரம்பியும், 58 குளங்கள் 75 சதவிதத்திற்கு அதிகமாகவும், 300 குளங்கள் 75 சதவீதத்திற்கு குறைவாகவும் நீர் நிரம்பியுள்ளது என்றார்.
இக்கூட்டத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன், சம்பந்தப்பட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வெள்ள நிலவரம் மற்றும் மேற்கொண்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
மழை நேரங்களில் அரசு அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் இருந்து கண்காணிக்க வேண்டும். விளாத்திக்குளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் விவசாயத்திற்கு தகுந்த மழை பெய்துள்ளது. திருச்செந்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் போன்ற பகுதிகளில் மழைநீர் ஊருக்குள் புகுந்து வடியாமல் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஆக்கிரமிப்புகளேயாகும். கடந்த சில வருடங்களில் மழை சரியாகப் பெய்யாமல் இருந்ததால், தண்ணீர் செல்லும் கால்வாய்கள் எல்லாம் மூடப்பட்டு தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முக்கியமான சுற்றுலாத்தலமாகும். தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வரை பல இடங்களில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக இச்சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மநாகராட்சிப் பகுதிகளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து இடங்களிலும் தேங்கி நிற்கும் மழை நீரை விரைந்து வெளியேற்றிட வேண்டும். தொடர்ந்து தண்ணீர் தேங்கியிருந்தால் கொசு உற்பத்தியாகி பல நோய்களுக்கு வழிவகுக்கும். வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.
பின்னர், தூத்துக்குடி வட்டம் முள்ளக்காடு பகுதி 1 கிராமம், கோரம்பள்ளம் பகுதி 2 கிராமம் மற்றும் கீழ தட்டப்பாறை கிராமம் ஆகிய கிராமங்களில் 21.11.2014 அன்று பெய்த கனமழையில் பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரண உதவியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினா; ஜி.வி.மார்க்கண்டேயன், மாவட்ட ஊராட்சித் தலைவா; மணத்தி.ஆர்.ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.முத்து, தூத்துக்குடி சார் ஆட்சியர் கோபால சுந்தரராஜ், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆறுமுகம், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி முத்து ஆகியோர் காயல்பட்டினத்தில் மழை நீர் பாதிப்புகளை நேரில் பார்த்துச் சென்றனர். காயல்பட்டினத்தில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமும் நடத்தப்பட்டுள்ளது.
நகர்மன்றத் தலைவர் வேண்டுகோளுக்கிணங்க, அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன், இக்கூட்டத்திற்கு முன்பாக காயல்பட்டினம் வந்து பார்வையிட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |