காயல்பட்டினத்தில் பெய்த தொடர்மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான - நகராட்சியின் நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவதற்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில், நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் இம்மாதம் 22ஆம் நாள் சனிக்கிழமையன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இவ்வார்ப்பாட்டத்தின் நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1:
மழைக்காலங்களின்போது தேங்கும் மழை நீர் வழிந்தோட முறையான வடிகால்கள் இல்லாத காரணத்தால், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்குள்ளாகின்றனர்.
தற்போது தொடர்ச்சியாகப் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் பெருமளவில் தேங்கி, நகர மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளதோடு, சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அவல நிலையைப் போக்கிட, காயல்பட்டினம் நகராட்சி இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என இக்கூட்டம் கருதுகிறது. எனவே, இது விஷயத்தில் நகராட்சி அதிகாரிகளும், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளும் இன்னும் அதிக கவனம் செலுத்தி, தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றிடவும், இனியும் தேங்காவண்ணம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இக்குறையைப் போக்கிட வழிவகைகளைக் கண்டறியவும், பின்னர் நிரந்தரத் தீர்வு காண அரசை வலியுறுத்தவும் நகராட்சி மன்றம் ஆவன செய்ய வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2:
தொடராகப் பெய்து வரும் நடப்பு வடகிழக்குப் பருவமழை காரணமாக, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரில் உருவாகும் கிருமிகளால், நகரில் பல்வேறு தொற்றுநோய்கள் பரவி, குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் பாதித்து வருகிறது.
இந்த நோய்க்கிருமிகளை அழிக்க, தேங்கிய மழை நீரில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், ப்ளீச்சிங் பவுடர் தூவுதல், கொசு விரட்டும் புகையடித்தல் ஆகிய பணிகள் தற்போது நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டாலும் அவை போதுமானதாக இல்லை.
நகரின் பரப்பளவு, மொத்த மக்கள் தொகை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இன்னும் அதிக பணியாளர்களைப் பயன்படுத்தி, தேவையான கருவிகளை வாங்கி, மேற்படி பணிகளை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் திருப்திகரமாகச் செய்திட நகராட்சியை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3:
மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகள், நிரந்தர செயல்திட்டம் வகுத்து நடவடிக்கை மேற்கொள்ளல் ஆகியவற்றில் இனியும் மெத்தனப்போக்கு தொடருமாயின், போராட்டததை இன்னும் வலிமையாக நடத்தப்படும் என்பதை இக்கூட்டம் அரசுக்குத் தெரிவிக்கிறது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் ஆகியோரை - ஆர்ப்பாட்டத்தை நடத்திய அனைத்துக் கட்சி நிர்வாகிகள் இம்மாதம் 27ஆம் நாள் வியாழக்கிழமையன்று நேரில் சந்தித்து, ஆர்ப்பாட்டத் தீர்மானங்களை சமர்ப்பித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், அதன் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர நிர்வாகிகளான எம்.இசட்.சித்தீக், எம்.எச்.அப்துல் வாஹித், என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், காங்கிரஸ் நிர்வாகி எம்.எம்.கமால், சமத்துவ மக்கள் கட்சி நகர தலைவர் அப்துல் அஜீஸ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், நிர்வாகி ஐதுரூஸ், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஷம்சுத்தீன் உள்ளிட்டோர் இக்குழுவில் அடங்குவர்.
படங்களுள் உதவி:
M.ஜஹாங்கீர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |