காயல்பட்டினம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் 11 கடைகள் உள்ளன. அவற்றில் 2 கடைகளை (எண் 5 மற்றும் எண் 6) குத்தகைக்கு
எடுத்திருந்தவர் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்ததால், அவ்விரு கடைகளையும் மீண்டும் ஏலம் விட நகர்மன்றம் அக்டோபர் மாதம் தீர்மானம் நிறைவேற்றியது.
நவம்பர் 7, 2014 அன்று வெளிவந்த ஏல அறிவிப்பு
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சில நாட்கள் கழித்து - நவம்பர் 7 அன்று ஏல அறிவிப்பு வெளியானது. ஏல அறிவிப்பினை தொடர்ந்து, ஏலத்தில் பங்கேற்க பலர் ஆர்வமாக நகராட்சிக்கு பணம் செலுத்த சென்றுள்ளனர்.
5ம் எண் கடை ஏலத்தில் பங்கேற்க 9 பேர் பதிவு செய்துள்ளனர். 6ம் எண் கடை ஏலத்தில் பங்கேற்க பணம் செலுத்த விரும்பியவர்கள் விண்ணப்பத்தை
பெற அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
6ம் எண் கடையை குத்தகைக்கு எடுத்தவர் (ஆட்டோ ஓட்டுனர் ராயன் என்பவர்), பாக்கி தொகையை (சுமார் 40,000 ரூபாய்) செலுத்த முன் வந்துள்ளதால் - 6ம் எண் கடை ஏலம் தற்போது விடப்படாது என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய அவகாசம் வழங்கப்பட்டும் பாக்கியை செலுத்தாத பின்னரே - மன்றம் தீர்மானம் மூலம், ஏலம் அறிவிப்பு வெளிவந்தது. அறிவிப்பு
வெளிவந்தப்பின் - பாக்கியை செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளார் என்ற காரணத்தை கூறி ஏலத்தை நிறுத்துவது விதிமுறைகள் மீறுவதாகும்.
பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அனேக கடைகள் பினாமிகளால் - குத்தகை எடுத்தவருக்கு, மேல் வாடகை வழங்கி - நடத்தப்பட்டு வருகிறது.
அதிகாரிகளும், ஒரு சிலரும் - ஏலத்தை தவிர்த்து, 6ம் எண் கடையின் வாடகை பாக்கியை செலுத்தி, பழைய வாடகையைஅடிப்படையாக கொண்டு,
மேல் வாடகை மூலம் 6ம் எண் கடையை கைவசம் எடுத்திட முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து - குத்தகை எடுக்க விரும்பிய பலர் புகார் தெரிவிக்கவே, இம்முயற்சி கைவிடப்பட்டு, 6ம் எண் கடை ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக
தெரிகிறது.
5ம் எண் கடைக்கான ஏலம் நவம்பர் 27 (வியாழன்) அன்று காலை நடைபெற்றது. அதில் - 9 பேர் பங்கேற்றனர்.
ஆரம்ப தொகையாக 2000 ரூபாய் அறிவிக்கப்பட்டு, 5000 ரூபாய் வரையில் - காயல் மௌலானா (கஸ்டம்ஸ் சாலை) என்பவரும், நெய்னா முஹம்மத் (தீவு தெரு) போட்டியிட்டுள்ளனர். இறுதியாக - மாத வாடகை 5050 ரூபாய்க்கு காயல் மௌலானா என்பவர் 5ம் எண் கடையின் குத்தகையை பெற்றுள்ளார். |