காயல்பட்டினத்தில் பெய்துள்ள தொடர்மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், கால்வாய்களில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடங்களையும், மழைநீர் முறையாகக் கடலில் கலக்க இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட உத்தரவிட்டுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நகரின் எல்லாப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியும், வழிந்தோடிய வண்ணமும் உள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கும் மழை நீர் சில குறிப்பிட்ட பகுதிகள் வழியாக கடலில் கலக்கிறது. இவ்வாறாக தண்ணீர் வழிந்தோடும் வழித்தடங்கள் பலவற்றில், நாளடைவில் ஆக்கிரமிப்புகள் உருவாயின. சில வடிகால்கள் செல்லும் பகுதிகளில் தமக்குரிய நிலங்களும், கட்டுமானங்களும் இருப்பதாக தனியார் சிலர் ஆவனங்களுடன் கூறி வருகின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி, பூந்தோட்டம், தாயிம்பள்ளி, மூப்பனார் ஓடை, நெய்னார் தெரு, கே.எம்.டி. மருத்துவமனையையொட்டிய ஓடை போன்ற பகுதிகளை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ரவிக்குமார், இம்மாதம் 26ஆம் நாள் புதன்கிழமையன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார்.
இரத்தினபுரி பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியை நேரடியாகப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், அதனை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்,
அதன் தொடர்ச்சியாக, பல்வேறு இடங்களைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், கால்வாய்களில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றவும், மழைநீர் முறையாகக் கடலில் கலப்பதற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-
பொதுமக்கள் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களைக் கட்டக் கூடாது. கால்வாய்கள், கன்மாய்கள், ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளைப் பாதுகாக்க மக்கள் ஒத்துழைப்பளிக்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நோய் பரவாமல் இருக்க மருத்துவ முகாம் நடத்தப்படும். இம்முகாமைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், வட்டாட்சியர் வெங்கடாச்சலம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், பொறியாளர் சிவகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
படங்களுள் உதவி:
முஜாஹித் அலீ
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |