காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நகரின் எல்லாப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியும், வழிந்தோடிய வண்ணமும் உள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கும் மழை நீர் சில குறிப்பிட்ட பகுதிகள் வழியாக கடலில் கலக்கிறது. இவ்வாறாக தண்ணீர் வழிந்தோடும் வழித்தடங்கள் பலவற்றில், நாளடைவில் ஆக்கிரமிப்புகள் உருவாயின. சில வடிகால்கள் செல்லும் பகுதிகளில் தமக்குரிய நிலங்களும், கட்டுமானங்களும் இருப்பதாக தனியார் சிலர் ஆவனங்களுடன் கூறி வருகின்றனர்.
காயல்பட்டினம் 12ஆவது வார்டுக்குட்பட்ட - ஓடக்கரைக்கு வடக்கே உள்ளது தைக்காபுரம். அதனையடுத்து அமைந்துள்ளது பூந்தோட்டம். இவ்விரு பகுதிகளுக்குமிடையில் மழை நீர் வழிந்தோட பாலம் ஒன்று இருந்தது. மழைக்காலங்களில் - வடக்கே இருக்கும் பூந்தோட்டத்தில் தேங்கும் மழை நீர், இப்பாலம் வழியாக தைக்காபுரத்தைக் கடந்து, ஓடக்கரை உப்பு ஓடை வழியாக கடலில் கலந்து வந்தது.
புதிய சாலை அமைப்பதாகக் கூறி, சில ஆண்டுகளுக்கு முன் இப்பாலம் அடைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக - பூந்தோட்டத்தில் தேங்கும் மழை நீர் வழிந்தோட வழியின்றி, அப்பகுதியிலுள்ள வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
பாலத்தின் வழியே மீண்டும் தண்ணீர் வழிந்தோட தாங்கள் வாய்ப்புத் தேடி முயற்சிக்கும்போதெல்லாம், அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் அதற்குத் தடை செய்து வருவதாக பூந்தோட்டத்தைச் சேர்ந்த சிலர், அண்மையில் நகரில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்றில் அனைவர் முன்னிலையில் முறையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
“எங்கள் பகுதியில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மக்கள் மாதக்கணக்கில் தமது இயல்பு வாழ்க்கையைத் தொலைத்துள்ளனர்... பூந்தோட்டம் - தைக்காபுரம் இடையே இருந்த பாலம் தடைபட்டுள்ளதால், மழைநீர் வழிந்தோட சிறிதும் வழியில்லாத நிலையுள்ளது. இத்தடையை அகற்றிட நாங்கள் முயற்சித்தபோதெல்லாம், எங்கள் 12ஆவது வார்டு உறுப்பினர் அதற்குத் தடையாக இருந்து வருகிறார்...
இங்கே அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள் இருக்கிறீர்கள்... பெரிய மனது வைத்து, இந்தத் தடையை அகற்றிட ஆவன செய்து தந்தால், உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும்... எங்கள் பகுதி மக்கள் வாழ்நாளெல்லாம் உங்களை மறக்க மாட்டார்கள்... எங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைத் துடைப்பதன் காரணமாக நீங்களும், உங்கள் மக்களும் நிம்மதியாக வாழ இறைவன் அருள் செய்வான்...”
இவ்வாறிருக்க, பாலத்தைத் தடுத்து அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலைப்பகுதியை, பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணி, இம்மாதம் 22ஆம் நாள் சனிக்கிழமையன்று 17.30 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் உடனிருந்தார்.
பாலத்தை அடைத்திருந்த சாலைப் பகுதி அகற்றப்பட்டதும், அடைபட்டிருந்த மழைநீர் தைக்காபுரம் நோக்கிப் பீறிட்டுப் பாய்ந்தது. அங்கிருந்து ஓடக்கரை உப்பு ஓடை வழியாக அது கடலில் கலந்து வருகிறது.
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |