காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நகரின் எல்லாப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியும், வழிந்தோடிய வண்ணமும் உள்ளது. பல்வேறு இடங்களிலிருந்து வழிந்தோடும் மழை நீர் தீவுத்தெரு வழியாக கீரிக்குளம் நோக்கிச் செல்லும் வகையில் வடிகால் வெட்டிவிடப்பட்டுள்ளது.
பல நாட்களாக தொடர்ந்து தண்ணீர் தேங்கிய நிலையிலிருந்த காரணத்தால், தீவுத்தெருவில் உயர்ந்து வளர்ந்திருந்த பன்னீர்ப்பூ மரமொன்று, இம்மாதம் 24ஆம் நாள் திங்கட்கிழமையன்று 20.30 மணியளவில் வேரோடு சரிந்து, மின் வினியோகக் கம்பிகள் மீது சாய்ந்து விழுந்தது. கம்பிகள் வலுவாக இருந்தமையால், மரத்தைத் தாங்கிக்கொண்டன. இருப்பினும், எப்போது வேண்டுமானாலும் கம்பிகள் அறுந்து விழலாம் என்ற நிலையிருந்தது.
மரம் சரிந்து விழுந்ததைக் கண்ணுற்ற அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் அளித்ததன் பேரில், அடுத்த சில நிமிடங்களில் அதன் அலுவலர்கள் விரைந்து வந்து, அப்பகுதியில் மின் வினியோகத்தைத் துண்டித்து, மின் கம்பிவடங்களின் மீது சாய்ந்திருந்த மரக்கிளைகளை மட்டும் வெட்டியகற்றி, வேண்டாத நிகழ்வுகள் ஏற்படாதிருக்க - முன்னெச்சரிக்கையாக பீ.வி.சி. குழாய்களைக் கொண்டு சாய்ந்த மரத்தின் கீழேயிருந்த மின் கம்பிவடப் பகுதிகளை மறைத்துச் சென்றனர். அவர்களுக்கு உதவியாக அப்பகுதி பொதுமக்களும் இணைந்து களப்பணியாற்றினர்.
மறுநாள் காலையில் மீண்டும் அங்கு வந்த மின் வாரிய அலுவலர்கள், மரத்தை பாதுகாப்பான முறையில் மொத்தமாக வெட்டியகற்றினர்.
மரம் திடீரென சரிந்து விழுந்ததன் காரணமாக, 24ஆம் நாளன்று இரவு முழுக்க அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
தகவல்:
A.L.முஹம்மத் நிஜார்
துணைத்தகவல்:
N.T.இஸ்ஹாக் லெப்பை ஜுமானீ
படங்களுள் உதவி:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |