காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழையால் நகரே மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதுபோன்ற பிரச்சினை எழுவதால், போர்க்கால அடிப்படையில் தற்காலிகத் தீர்வும், பின்னர் நிரந்தரத் தீர்வும் கோரியும், நிவாரணப் பணிகளை திருப்திகரமாகச் செய்யத் தவறியதாக, காயல்பட்டினம் நகராட்சியைக் கண்டித்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், இம்மாதம் 22ஆம் நாள் சனிக்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைத் தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.
கட்சியின் நகர துணைச் செயலாளர் எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், கண்டன முழக்கங்களை முன்மொழிய, பங்கேற்றோர் வழிமொழிந்தனர். பின்னர் அவர் அறிமுகவுரையாற்றினார்.
அரிமா சங்கம் காயல்பட்டினம் கிளை சார்பில் எம்.எல்.ஷேக்னா லெப்பை, சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் அப்துல் அஜீஸ், அஹ்மத் நெய்னார் பள்ளி சார்பில் என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், திமுக சார்பில் அதன் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஹஸன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் எஸ்.எம்.பாக்கர், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் அதன் நகர செயலாளர் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், வஞ்சிக்கப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் அலீ அக்பர், இந்திய தேசிய லீக் சார்பில் அப்பாஸ், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் நகர செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நடப்பு தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் கோரியும், தேங்கிய மழை நீரை போர்க்கால அடிப்படையில் கடலுக்கு வெட்டி விடுமாறும், நிவாரணப் பணிகளில் மெத்தமாகச் செயல்படும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் அவர்களது உரைகள் அமைந்திருந்தன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1:
மழைக்காலங்களின்போது தேங்கும் மழை நீர் வழிந்தோட முறையான வடிகால்கள் இல்லாத காரணத்தால், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்குள்ளாகின்றனர்.
தற்போது தொடர்ச்சியாகப் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் பெருமளவில் தேங்கி, நகர மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளதோடு, சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அவல நிலையைப் போக்கிட, காயல்பட்டினம் நகராட்சி இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என இக்கூட்டம் கருதுகிறது. எனவே, இது விஷயத்தில் நகராட்சி அதிகாரிகளும், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளும் இன்னும் அதிக கவனம் செலுத்தி, தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றிடவும், இனியும் தேங்காவண்ணம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இக்குறையைப் போக்கிட வழிவகைகளைக் கண்டறியவும், பின்னர் நிரந்தரத் தீர்வு காண அரசை வலியுறுத்தவும் நகராட்சி மன்றம் ஆவன செய்ய வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2:
தொடராகப் பெய்து வரும் நடப்பு வடகிழக்குப் பருவமழை காரணமாக, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரில் உருவாகும் கிருமிகளால், நகரில் பல்வேறு தொற்றுநோய்கள் பரவி, குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் பாதித்து வருகிறது.
இந்த நோய்க்கிருமிகளை அழிக்க, தேங்கிய மழை நீரில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், ப்ளீச்சிங் பவுடர் தூவுதல், கொசு விரட்டும் புகையடித்தல் ஆகிய பணிகள் தற்போது நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டாலும் அவை போதுமானதாக இல்லை.
நகரின் பரப்பளவு, மொத்த மக்கள் தொகை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இன்னும் அதிக பணியாளர்களைப் பயன்படுத்தி, தேவையான கருவிகளை வாங்கி, மேற்படி பணிகளை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் திருப்திகரமாகச் செய்திட நகராட்சியை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3:
மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகள், நிரந்தர செயல்திட்டம் வகுத்து நடவடிக்கை மேற்கொள்ளல் ஆகியவற்றில் இனியும் மெத்தனப்போக்கு தொடருமாயின், போராட்டததை இன்னும் வலிமையாக நடத்தப்படும் என்பதை இக்கூட்டம் அரசுக்குத் தெரிவிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |