காயல்பட்டினத்தில் பெய்துள்ள தொடர்மழையால் தேங்கியுள்ள நீர் வழிந்தோட முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், காயல்பட்டினம் நகராட்சியைக் கண்டித்து, தவ்ஹீத் ஜமாஅத் களமிறங்கிப் போராடும் என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தால் நிர்வகிக்கப்படும் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில், இம்மாதம் 21ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று அதன் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ ஆற்றிய ஜும்ஆ உரையில் பேசியுள்ளார். உரை விபரம் வருமாறு:-
கடலிலும், கரையிலும் மனிதர்களின் விஷமக் கரங்களின் விளையாட்டுகள் காரணமாக குழப்பங்கள் மலிகின்றன என இறைமறை குர்ஆன் கூறுகிறது. எது எப்படி இருக்க வேண்டுமோ, அது அப்படி இருக்கும்படியாகவே அல்லாஹ் விதிகளை அமைத்திருக்கின்றான். சூரிய - சந்திர ஓட்டங்கள், இரவு - பகல் மாறி வருதல், வானம் - பூமியின் அமைப்புகள் என இவற்றையெல்லாம் பயன்படுத்தும் நாம், அதன் இயல்பான நிலைகளுக்கு மாற்றம் ஏற்படுத்தி, இயற்கையைச் சிதைக்கும்போது பல சீரழிவுகளுக்கு ஆளாகிறோம்.
காயல்பட்டினத்தை இன்று கடற்கரைப் பகுதி என்று சொல்வதை விட, நகருக்குள் கடல் புகுந்துவிட்டதோ என்று கருதுமளவுக்கு தெருக்களிலும், சந்து - பொந்துகளிலெல்லாம் மழை வெள்ளம். இதற்குக் காரணம், பொருளாதாரத்தை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு, குளங்களையும் - நீர்நிலைகளையும் நம் சகோதரர்கள் வசிப்பிடங்களாக மாற்றிவிட்டதுதான்.
குளங்கள், ஓடைகள் என பல நீர்நிலைகள் காயல்பட்டினத்தில் இருந்திருக்கின்றன. ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட சிறு குளங்கள், பல ஓடைகள், 3 ஏரிகள் இந்த ஊருக்குள் இருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் அழித்து, இன்று ப்ளாட் போட்டுவிட்டார்கள். இதுதானே இந்த நகரின் பிஸினஸ்? ப்ளாட் போடுவதில் கவனம் செலுத்தியவர்கள், அவற்றிலுள்ள நீர்நிலைகளைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தவில்லை. அதுபற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை. வசதி படைத்தவர்கள் விற்றுவிட்டனர். வசதி குறைந்தவர்களோ அவற்றை வாங்கி, குளங்களில் தமது வீடுகளை அமைத்துக்கொண்டனர். அதன் காரணமாக, தற்போது ஒரு பக்கம் சாதிப்பு; மற்றொரு பக்கம் பாதிப்பு.
தெருக்களிலெல்லாம் அசுத்தங்கள் கலந்து தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் காரணமாக கிருமித் தொற்றுக்கள். இந்தச் சீரழிவுக்கு பொதுமக்கள் மட்டும் காரணமில்லை. அவர்களின் இச்செயல்களுக்குத் துணை போன அரசும் சேர்ந்துதான். நகராட்சி இதில் சரியான முறையில் பொறுப்புணர்வுடன் செயல்படாததன் விளைவுதான் இன்று இந்த பாதிப்புகள்.
நல்ல வருமானமுள்ள இந்த நகராட்சியின் பணத்தை யாரும் சுருட்டிக்கொண்டார்கள் என்று கூறவில்லை. இதை செலவழிக்க வேண்டிய நேரத்தில் செலவழிக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்தச் சீரழிவுகளைப் போக்க வடிகாலாவது முறைப்படி அமைக்கலாம். ஆனால் செய்யப்படவில்லை.
மக்கள் பணத்தை மக்களுக்குத் தேவையான தருணங்களில் செலவழிக்காமல் இருப்பதும் ஒருவகை ஊழல்தான். இந்த ஊழல் தடுக்கப்படுவதற்காக, பொதுமக்கள் கொதித்தெழ வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையே இந்த நெருக்கடி நிலை நமக்கு உணர்த்துகிறது.
குடிசை வீடுகளில் இடுப்பளவு நீர் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இன்று பொதுநல அமைப்புகள் களமிறங்கிப் பணியாற்றுகின்றன. என்றாலும், அவர்களின் பாதிப்பை முழுமையாக இல்லாமலாக்கும் தகுதி நகராட்சிக்குள்ளது. எனவே, முறையாகத் திட்டமிட்டு, வடிகால்களை அமைத்து, தேங்கும் நீர் கடலில் கலக்க நிரந்தர செயல்திட்டம் அமைத்து செயல்படுத்த வேண்டும். தவறினால், எங்கள் ஜமாஅத் சார்பில் களமிறங்கிப் போராடவும், தேவைப்பட்டால் மாநில தலைமையைக் கொண்டு போராட்டத்தை வீரியமாக்கவும் தயங்க மாட்டோம் என இந்த உரை மூலம் அறைகூவல் விடுத்து நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு, ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ உரையாற்றினார்.
தகவல்:
Y.M.முஹம்மத் தம்பி
(AKM ஜுவல்லர்ஸ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |