தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் கடந்த சில வாரங்களாக சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே தொடர்ந்து பெய்து வருகிறது. நாள்தோறும் சாரல் தவறாமல் பெய்கிறது. அவ்வப்போது சிறுமழை, இதமழை பெய்து வருகிறது. வானம் எப்போதும் மேக மூட்டத்துடனேயே காணப்படுகிறது. நகரில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது.
மழைநீரைச் சேகரிக்க குளங்களோ, வழிந்தோட முறையான வடிகால்களோ நகரில் இல்லாத காரணத்தால், சாதாரண மழைக்காலங்களில் தாழ்நிலை குடிசைப் பகுதிகள் மட்டுமே பாதிக்கப்படும் நிலையிருக்க, இதுபோன்ற பெருமழைகளின்போது நகரில் பெரும்பாலும் அனைத்துத் தெருக்களிலுள்ள கல் வீடுகளும் கூட பாதிக்கப்படும் நிலையும், சாலைகள் வெள்ளக்காடாகும் சூழலும் உள்ளது.
நடப்பு தொடர்மழை காரணமாக, நகரின் அனைத்துத் தெருக்களிலும் தேங்கிய மழை நீர் பெருங்குளம் போலக் காட்சியளித்தது. இதன் காரணமாக நகரில் சாலைப் போக்குவரத்தும், இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதித்துள்ளது. தேங்கிய மழை நீரை வெளியேற்ற முறையான வடிகால்கள் இல்லாததால், போர்க்கால அடிப்படையில் பல சாலையோரங்களில் வாய்க்கால் வெட்டி விடப்பட்டுள்ளது.
கே.டீ.எம். தெரு, கி.மு.கச்சேரி தெரு, அலியார் தெரு, ஆஸாத் தெரு, சித்தன் தெரு, பரிமார் தெரு, அப்பாபள்ளித் தெரு, மரைக்கார் பள்ளித் தெரு, தீவுத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் வந்து தேங்கும் மழை நீரை வழிந்தோடச் செய்வதற்காக, அச்சாலையின் ஒரு ஓரத்தில் வாய்க்கால் வெட்டி விடப்பட்டுள்ளது. அதில் வழிந்தோடும் தண்ணீர், தீவுத்தெரு - குருவித்துறைப் பள்ளி மையவாடிப் பகுதி வழியாக ஈக்கியப்பா தைக்கா வரை சென்று, அங்கிருந்து கீரிக்குளம் நோக்கி கடலில் கலக்கிறது.
கடைப்பள்ளியைச் சுற்றி மழை நீர் சுமார் 2 அடி அளவுக்குத் தேங்கியிருந்ததால், அங்கிருக்கும் கிணறு நிரம்பி, அதற்கு மேலும் ஓரடிக்குத் தண்ணீர் தேங்கியிருந்தது. மோட்டார் பம்ப் செட் துணையுடன் தேங்கிய நீர் வாய்க்காலுக்கு அனுப்பப்படுகிறது.
சித்தன் தெருவில் தண்ணீர் தேங்கினால்தான் காயல்பட்டினத்தில் மழை பெய்ததாகக் கருத முடியும் என்று கருதும் நிலை நீண்ட காலமாக இருந்தது. கடைசியாக அங்கு போடப்பட்ட சிமெண்ட் சாலை காரணமாக, அத்தெருவில் சாலைகள் உயர்ந்து நீர்த்தேக்கமின்றி காட்சியளிக்கிறது. அதற்குப் பகரமாக, தெருவிலுள்ள அனைத்து சந்து பொந்துகளில் தண்ணீர் பெருமளவில் தேங்கியுள்ளது. தாழ்வான சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல வீடுகளில், நிரம்பிய கிணற்று நீரும், கழிவு நீர்த்தொட்டியிலுள்ள நீரும் கலந்துள்ளதன் காரணமாக, சாக்கடை துர்வாடை மற்றும் கொசுத் தொல்லையால் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் மூழ்கிய பலர், வேறு தெருக்களிலுள்ள தம் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இம்மாதம் 24ஆம் நாள் வரை அத்தெருவில் பல வீடுகளிலும், அரசு மகளிர் மேனிலைப்பள்ளி வளாகத்திலும் மோட்டார் பம்ப் செட் துணையுடன் தேங்கிய நீர் சாலையில் வழிந்தோடச் செய்யப்பட்டது. எனினும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால், அம்முயற்சிக்கு முழுப்பயன் கிட்டவில்லை.
கொச்சியார் தெருவில் தேங்கிய மழை நீர் வழிந்தோட, சாலையின் கீழ்ப்பகுதியில் வடிகால் வெட்டிவிடப்பட்டுள்ளது. அதன் வழியே வழிந்தோடும் நீர், கொச்சியார் கீழத் தெரு - ஸீ கஸ்டம்ஸ் சாலை சந்திப்பில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் வழியே பண்டகசாலைத் தெரு - கீரிக்குளம் சென்று கடலில் கலக்கிறது.
நகரின் வட - தென் மேற்குப் பகுதிகளிலிருந்து ஓடிவரும் மழை நீர் வழிந்தோடுவதற்காக, எல்.எஃப். வீதியில், ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கருகில், மகாத்மா காந்தி நினைவு வளைவிற்கருகில் சாலை மறிக்கப்பட்டு, தென்வடலாக வெட்டிவிடப்பட்டுள்ளது. இதனால், இத்தனை நாட்களாக நெடுஞ்சாலையை வெட்டி விட இருந்த நடைமுறைச் சிக்கல், நடப்பு பெருமழை காரணமாக நிர்ப்பந்த அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளது. நகராட்சியால் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலிலிருந்து, வெட்டி விடப்பட்ட நெடுஞ்சாலை வழியாக - பேருந்து நிலைய நுழைவாயிலையொட்டி கிழக்குப் பகுதியில் துவங்கும் வடிகாலில் இணைந்து, அங்கிருந்து மூப்பனார் ஓடை வழியாகக் கடந்து சென்று, கடலில் கலக்கிறது.
அந்தந்த வார்டுகளில், வார்டு உறுப்பினர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண் உறுப்பினர்கள் சார்பாக அவர்களது உறவினர்கள் பணியில் உள்ளனர். துறைவாரியான நடவடிக்கைகளை, நகர்மன்றத் தலைவர் மேற்கொண்டு வருகிறார்.
நகரில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |