வடக்கிழக்கு பருவ மழையினால் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பெரிய அளவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று (ஞாயிறு) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார் IAS, மாவட்ட மூத்த அதிகாரிகள், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் உட்பட பிற உள்ளாட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் சண்முகநாதன் - தனியார் ஆக்கிரமிப்புகளால் தான் ஊர்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் துணிந்து அகற்ற வேண்டும் என்றார்.
மேலும் அவர் பேசியதாவது -
திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் திருவைகுண்டம் பகுதியில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. குறிப்பாக காயல்பட்டினம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் பகுதிகளில் ஊருக்குள் மழை நீர் தேங்கி நிற்கிறது.
காயல்பட்டினம் பகுதியில் பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் தண்ணீர் வடிந்து செல்ல வசதி இல்லாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரிகளுக்கு தொந்தரவு தரமாட்டார்கள். அதிகாரிகள் துணிந்து பணியாற்ற வேண்டும்.
காயல்பட்டினம் பகுதியில் எவ்வளவு புறம்போக்கு நிலங்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
- என அமைச்சர் பேசினார்.
தகவல்:
தி இந்து |