தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் நவம்பர் 20 அன்று (நேற்று) 16.30 மணி துவங்கி, இன்று (நவம்பர் 21) 11.00 மணி வரை தொடர் கனமழை பெய்தது. நகரின் அனைத்து சாலைகளிலும் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேற்று துவங்கி, இன்று வரை பெய்துள்ள தொடர் கனமழை காரணமாக, காயல்பட்டினம் பெரும்பாலும் மழை நீரால் நிறைந்துள்ளது. எங்கு பார்த்தாலும், மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு முன் உரை நிகழ்த்தப்பட்டது. மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுதலை பெற, சுயநலம் தவிர்த்து - நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் உரை நிகழ்த்தினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
1977ஆம் ஆண்டில் நமதூரில் மிகப்பெரிய அளவில் மழை பெய்தது. தற்போது பெய்து வரும் மழையை விட அது மிகவும் கூடுதல். ஆனாலும், அந்நாளில், நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட குளங்களும், நீரோடைகளும் நிறைவாக இருந்தன. காலப்போக்கில் அவை காணாமல் போய்விட்டது.
நகரில் இன்று வீடுகள் தாழ்வாகவும், சாலைகள் உயர்ந்தும் அமையப்பெற்றுள்ளது. இதனால், ஓரளவுக்கு மழை பெய்தால் கூட, பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கும் நிலையுள்ளது.
ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டிருக்காமல், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்றத்தினர், நகரின் பொதுநல அமைப்பினர் இணைந்தமர்ந்து ஆராய்ந்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வாய்ப்பு கிடைக்கும்.
நமதூரில், பள்ளிவாசல்களோடு இணைந்தே சங்கங்கள் அமையப்பெற்றுள்ளன. அந்தந்த மஹல்லா பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளின்போது, இளைஞர்கள் வேகமாகக் களமிறங்கிப் பணியாற்றிட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவ்வாறு முன்னோர்கள் ஏற்படுத்தினர். அந்நோக்கம் மறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
இன்று ஜும்ஆ தொழுகைக்காக நான் பள்ளிவாசலை நோக்கி வந்தபோது, வழியில் ஒரு பிரச்சினையைக் கண்ணுற்றேன். தேங்கிய மழை நீரை ஒரு பகுதி வழியாக வெட்டி விடும் முனைப்பில் ஒரு சாராரும், தம் பகுதி வழியே வெட்டி விடக்கூடாது என்று மறுப்பில் மற்றொரு சாராரும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
இதுபோன்ற சுயநலப் போக்குகள் தவிர்க்கப்பட்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டால், நிச்சயம் நிரந்தரத் தீர்வுக்கு வழி பிறக்கும்.
இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது.
தகவல்:
S.A.முஹ்யித்தீன்
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |