தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் நவம்பர் 20 அன்று (நேற்று) 16.30 மணி துவங்கி, இன்று (நவம்பர் 21) 11.00 மணி வரை தொடர் கனமழை பெய்தது. நகரின் அனைத்து சாலைகளிலும் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று 12.30 மணி நிலவரப்படி வானம் தெளிவாகக் காணப்படுகிறது. இதமான வானிலை நிலவுகிறது.
நேற்று துவங்கி, இன்று வரை பெய்துள்ள தொடர் கனமழை காரணமாக, காயல்பட்டினம் பெரும்பாலும் மழை நீரால் நிறைந்துள்ளது. எங்கு பார்த்தாலும், மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது.





கடந்த சில நாட்களாக நகரில் பெய்து வரும் தொடர் கனமழையால், நகரின் தாழ்வான பகுதிகளில் குடிசைகளிலும், சிறு வீடுகளிலும் வசிப்போர் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். வீட்டில் போதுமான அளவுக்கு சமையல் பொருட்கள் இருப்பில் இருந்தும், சமையல் உட்பட எந்த நடவடிக்கையையும் செய்ய இயலாத நிலையில் அவர்கள் உள்ளனர். தங்குவதற்குக் கூட வழியில்லாத நிலையிலிருக்கும் அவர்களுக்கு சுற்றுவட்டாரத்திலுள்ள மழை நீர் பாதிக்காத வீடுகளிலுள்ளோர் தம்முடன் இணைந்து தங்குவதற்கு வசதிகளைச் செய்துகொடுத்துள்ளனர்.
மழை நீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி மக்களின் பசியைப் போக்குவதற்காக, ஒருங்கிணைந்த முறையில் உணவு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், காயல்பட்டினம் நகர அரிமா சங்கம், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு ஆகிய பொதுநல அமைப்புகளின் சார்பில் உணவு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
இன்று மதிய உணவு காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை அனுசரணையிலும், இரவுணவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அனுசரணையிலும் வழங்கப்பட்டு வருகிறது.



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், பூந்தோட்டம், புறவழிச்சாலை, சுலைமான் நகர் (மாட்டுக்குளம்) பகுதிகளில் உணவு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு மேல நெசவுத் தெரு பொதுமக்களுக்கு உணவு ஏற்பாடு செய்துகொடுக்கப்படவுள்ளது.
உணவேற்பாடுகளைச் செய்துகொடுக்கும் பொதுநல அமைப்புகள், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த தலைவர்களிடம் உணவுப் பொட்டலங்களை மொத்தமாகக் கையளித்து, சீரான முறையில் வினியோகிக்கச் செய்து வருகின்றனர்.
காயல்பட்டினம் மேல நெசவுத்தெரு, பரிமார் தெரு, சுலைமான் நகர் (மாட்டுக்குளம்), புறவழிச்சாலை பகுதிகளில் குடியிருப்போருக்கு உணவு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
குறைந்தபட்சம், அடுத்த சில நாட்களுக்காவது உணவு ஏற்பாடுகள் செய்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்க சமூக ஆர்வலர்களால் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒருவேளை உணவு ஏற்பாட்டிற்கு சுமார் ரூபாய் பத்தாயிரம் (ரூ.10,000) செலவழிக்கப்படுவதாகவும், இவ்வகைக்கு அனுசரணையளிக்க விரும்புவோர், ‘துளிர்’ ஷேக்னா லெப்பை அவர்களை, +91 89036 80650 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, பங்களிப்பை உறுதி செய்துகொள்ளுமாறும் இதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல் & படம்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
கூடுதல் தகவல்கள் (தமுமுக):
‘முர்ஷித்’ முஹ்ஸின்
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |