தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் நவம்பர் 20 அன்று (நேற்று) 16.30 மணி துவங்கி, இன்று (நவம்பர் 21) 11.00 மணி வரை தொடர் கனமழை பெய்தது. நகரின் அனைத்து சாலைகளிலும் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேற்று துவங்கி, இன்று வரை பெய்துள்ள தொடர் கனமழை காரணமாக, காயல்பட்டினம் பெரும்பாலும் மழை நீரால் நிறைந்துள்ளது. எங்கு பார்த்தாலும், மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது. பேருந்து போக்குவரத்திற்கான திருச்செந்தூர் சாலையில் கே.எம்.டி. மருத்துவமனை அருகிலும், எல்.எஃப். வீதியில் இரத்தினபுரி அருகிலும் நெடுஞ்சாலையை மூடியவாறு மழைநீர் ஆறு போலக் காட்சியளிக்கிறது.
இன்று காலையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் காயல்பட்டினம் வந்து, மழை நீர்த்தேக்கப் பகுதிகளை நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார்.
காயல்பட்டினம் எல்.எஃப்.வீதி நெடுஞ்சாலையின் வட பகுதியில் திரண்டிருந்த மழை நீர் வழிந்தோட வழியின்றி, பெருங்குளமாக உருவெடுத்தது. நெடுஞ்சாலைத் துறை துணை இயக்குநர் திருவேங்கட ராமலிங்கம், இணைப் பொறியாளர் வானமாமலை, வருவாய் ஆய்வாளர் சிவசண்முகநாதன் ஆகியோர், அப்பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
காயல்பட்டினம் புதுப்பள்ளி வளாகத்திலிருந்து பேருந்து நிலையம் எதிரிலுள்ள சாலை முனை வரை ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டிருந்த மழை நீர் வடிகால், காயல்பட்டினம் நகராட்சியால் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டும் - நெடுஞ்சாலையின் குறுக்கே வெட்டி விட நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி கிடைக்காததால், காத்திருப்பில் இருந்தது.
இதுகுறித்து, நகர்மன்றத் தலைவர் நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியதில், சாலையின் குறுக்கே தோண்ட வாய்மொழியாக இசைவு தெரிவித்ததாகவும், பல்வேறு காரணங்களைக் காட்டி கீழ்நிலை அதிகாரிகள் காலதாமதம் செய்ததாகவும் தெரிகிறது.
இன்றைய தொடர் கனமழை ஏற்படுத்திய நிர்ப்பந்தம் காரணமாக, போர்க்கால அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பேருந்து நிலையம் எதிரிலுள்ள நெடுஞ்சாலைப் பகுதி வெட்டி விடப்பட்டுள்ளது. இதனால், நகரின் வடபகுதியிலிருந்து திரண்டு வரும் மழை நீர், இந்த ஓடை வழியாக தென்பகுதி வடிகாலுக்கு வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பரிமார் தெருவில் தேங்கித் திரண்டிருந்த மழை நீர், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி வழியாக கடலுக்குச் சென்று கலக்கும் வகையில் வெட்டி விடப்பட்டுள்ளது.
தொடர்மழை துவங்கிய நாள் தொட்டு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள - நகரின் தாழ்வான பகுதிகளைப் பார்வையிட்டு, தேவையான ஏற்பாடுகளுக்கு பரிந்துரைத்துள்ளார்.
அதுபோல, நகர்மன்ற உறுப்பினர்கள் தத்தம் வார்டு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வழிந்தோடச் செய்யத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், பொருத்துநர் நிஸார் உள்ளிட்ட அதிகாரிகள், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
படங்கள்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
A.K.இம்ரான்
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |