தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் நவம்பர் 20 அன்று (நேற்று) 16.30 மணி துவங்கி, இன்று (நவம்பர் 21) 11.00 மணி வரை தொடர் கனமழை பெய்தது. நகரின் அனைத்து சாலைகளிலும் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேற்று துவங்கி, இன்று வரை பெய்துள்ள தொடர் கனமழை காரணமாக, காயல்பட்டினம் பெரும்பாலும் மழை நீரால் நிறைந்துள்ளது. எங்கு பார்த்தாலும், மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது.
தொடர்மழை துவங்கிய நாள் தொட்டு, இன்று வரை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளைப் பார்வையிட்டு, தேவையான நிவாரணப் பணிகளுக்கு பரிந்துரைத்துள்ளார்.
மழை நீரில் வீடுகள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தங்குவதற்காக, நகரின் பல்வேறு கல்வி மற்றும் பொதுநல நிறுவனங்களை அவர் தொடர்புகொண்டதில், எல்.கே.மேனிலைப்பள்ளி மற்றும் கே.ஏ.மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களில் தங்க இசைவு பெறப்பட்டுள்ளது.
எல்.கே.மேனிலைப்பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப், தம் பள்ளி வளாகத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்துள்ளார். அதுபோல, கே.ஏ.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியரை நகர்மன்றத் தலைவர் தொடர்புகொண்டபோது, இன்று விடுமுறை நாள் என்றபோதிலும், அவர் பள்ளியைத் திறந்து வைத்து, பொதுமக்கள் வருகைக்காக காத்திருந்துள்ளார்.
ஆனாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள் தம் வீடுகளில் தங்க ஆதரவளித்ததன் காரணமாக, குழந்தைகள் மற்றும் உடமைகளைச் சுமந்துகொண்டு, வேறிடங்களுக்குச் செல்வதற்கு அவர்கள் ஆயத்தப்படவில்லை.
எனினும், அவசியப்பட்டால் எந்நேரத்திலும் தன்னைத் தொடர்புகொள்ளுமாறும், மேற்படி பள்ளி வளாகங்களில் அவர்கள் தங்கிட மீண்டும் ஆவன செய்வதாகவும், நகர்மன்றத் தலைவர், பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |