காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நகரின் எல்லாப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியும், வழிந்தோடிய வண்ணமும் உள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கும் மழை நீர் சில குறிப்பிட்ட பகுதிகள் வழியாக கடலில் கலக்கிறது. இவ்வாறாக தண்ணீர் வழிந்தோடும் வழித்தடங்கள் பலவற்றில், நாளடைவில் ஆக்கிரமிப்புகள் உருவாயின. சில வடிகால்கள் செல்லும் பகுதிகளில் தமக்குரிய நிலங்களும், கட்டுமானங்களும் இருப்பதாக தனியார் சிலர் ஆவனங்களுடன் கூறி வருகின்றனர்.
நகரில் தேங்கிய மழை நீர் எளிதில் வழிந்தோட இத்தடைகள் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் கருதியதையடுத்து, இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து தீர்வு ஏற்படுத்தித் தருமாறு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரிகள் ஆகியோரை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதனையடுத்து, இம்மாதம் 22ஆம் நாள் சனிக்கிழமையன்று 15.30 மணியளவில், சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன் காயல்பட்டினம் வருகை தந்தார். கே.எம்.டி. மருத்துவமனை அருகிலுள்ள நீரோடைகளைப் பார்வையிட்ட அவர், அதன் வழியே தண்ணீர் எளிதில் செல்லத் தடங்கலாக இருக்கும் கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக அன்று மாலையில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள், பொக்லைன் இயந்திரத்தின் துணையுடன் அக்கட்டுமானங்களை அகற்றும் பணியைத் துவக்கினர். ஓரளவுக்கு கட்டுமானங்கள் அகற்றப்பட்டபோதே, தடைபட்ட தண்ணீர் மிக வேகமாக அந்த நீரோடை வழியே கடந்து சென்றது.
பின்னர் அங்கு வந்த தனியார் சிலர், அக்கட்டுமானங்கள் தமக்குச் சொந்தமான நிலத்திலுள்ளது என்றும், அதற்கான ஆவனங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறி, பணியை நிறுத்தச் சொன்னதாகத் தெரிகிறது. இதனால், அங்கு மக்கள் திரளவே, சிறிது நேரம் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. ஓரளவுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்ட நிலையில், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |