காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நகரின் எல்லாப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியும், வழிந்தோடிய வண்ணமும் உள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கும் மழை நீர் சில குறிப்பிட்ட பகுதிகள் வழியாக கடலில் கலக்கிறது. இவ்வாறாக தண்ணீர் வழிந்தோடும் வழித்தடங்கள் பலவற்றில், நாளடைவில் ஆக்கிரமிப்புகள் உருவாயின. சில வடிகால்கள் செல்லும் பகுதிகளில் தமக்குரிய நிலங்களும், கட்டுமானங்களும் இருப்பதாக தனியார் சிலர் ஆவனங்களுடன் கூறி வருகின்றனர்.
இவ்வாறிருக்க, இம்மாதம் 24ஆம் நாள் திங்கட்கிழமையன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தில், காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளி - நெசவு ஜமாஅத் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் பின்வருமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது:-
நெசவு ஜமாஅத்தின் சார்பில் சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவையும், அதற்குச் சான்று பகரும் ஆவணம் மற்றும் படங்கள் சிலவற்றையும் நேரில் அளித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், காயல்பட்டினம் ஆறாம்பள்ளிக்கு எதிரில் துவங்கி, கே.எம்.டி.மருத்துவமனையையொட்டி ஓடும் நீரோடை வரையிலான நீளத்தைக் கொண்டது மீயான் மூப்பனார் ஓடை. நகரப் பிரமுகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரின் ஆக்கிரமிப்புகள், அதற்குத் துணை போன உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவற்றின் காரணமாக தற்போது அந்த ஓடை கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. இதனால், மழை நீர் தேங்கி, எங்கள் நெசவுத் தெரு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.
இதுகுறித்து, தகுந்த ஆதார ஆவணம் மற்றும் படங்களையும் இணைத்த மனுவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நாங்கள் நேரில் அளித்து, பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கக் கோரியிருக்கிறோம்... என்றனர்.
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |