காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நகரின் எல்லாப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியும், வழிந்தோடிய வண்ணமும் உள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கும் மழை நீர் சில குறிப்பிட்ட பகுதிகள் வழியாக கடலில் கலக்கிறது. இவ்வாறாக தண்ணீர் வழிந்தோடும் வழித்தடங்கள் பலவற்றில், நாளடைவில் ஆக்கிரமிப்புகள் உருவாயின. சில வடிகால்கள் செல்லும் பகுதிகளில் தமக்குரிய நிலங்களும், கட்டுமானங்களும் இருப்பதாக தனியார் சிலர் ஆவனங்களுடன் கூறி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இம்மாதம் 24ஆம் நாள் திங்கட்கிழமை காலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தின்போது நெசவு ஜமாஅத் சார்பிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரி முத்து, இம்மாதம் 24ஆம் நாள் திங்கட்கிழமையன்று 17.00 மணியளவில் காயல்பட்டினம் வந்து, மூப்பனார் ஓடை, முன்னாள் நகர்மன்றத் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் இல்லத்திற்குள் கோட்டைச் சுவரையொட்டியுள்ள ஓடை, கே.எம்.டி.மருத்துவமனை அருகிலுள்ள நீரோடைகள் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டார்.
நிறைவில், ஓடைகளிலுள்ள அடைப்புகளை சரிசெய்தால் மழை நீர் வழிந்தோடும் என்று அவர் கூறிச்சென்றார்.
காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் இதன்போது உடனிருந்தனர்.
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |