காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நகரின் எல்லாப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியும், வழிந்தோடிய வண்ணமும் உள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கும் மழை நீர் சில குறிப்பிட்ட பகுதிகள் வழியாக கடலில் கலக்கிறது. இவ்வாறாக தண்ணீர் வழிந்தோடும் வழித்தடங்கள் பலவற்றில், நாளடைவில் ஆக்கிரமிப்புகள் உருவாயின. சில வடிகால்கள் செல்லும் பகுதிகளில் தமக்குரிய நிலங்களும், கட்டுமானங்களும் இருப்பதாக தனியார் சிலர் ஆவனங்களுடன் கூறி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இம்மாதம் 24ஆம் நாள் திங்கட்கிழமை காலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தின்போது நெசவு ஜமாஅத் சார்பிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரி முத்து, இம்மாதம் 24ஆம் நாள் திங்கட்கிழமையன்று 17.00 மணியளவில் காயல்பட்டினம் வந்து, மூப்பனார் ஓடை, முன்னாள் நகர்மன்றத் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் இல்லத்திற்குள் கோட்டைச் சுவரையொட்டியுள்ள ஓடை, கே.எம்.டி.மருத்துவமனை அருகிலுள்ள நீரோடைகள் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்ட பின், ஓடைகளிலுள்ள அடைப்புகளை அகற்றினால் மழை நீர் வழிந்தோடும் என்று கூறிச்சென்றார்.
அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 25ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலையில், காயல்பட்டினம் கே.டீ.எம். தெரு - நெசவுத் தெருவிற்கு இடைப்பட்ட பகுதியிலுள்ள மூப்பனார் ஓடையில் தேங்கியிருந்த குப்பைகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணி நகராட்சியால் துவக்கப்பட்டுள்ளது. மூப்பனார் ஓடை பகுதியில் கழிவுநீர்த்தொட்டி அமைத்துள்ள சில வீடுகளைச் சேர்ந்தவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால், பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கள உதவி:
M.M.முஜாஹித் அலீ
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |