காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நகரின் எல்லாப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியும், வழிந்தோடிய வண்ணமும் உள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கும் மழை நீர் சில குறிப்பிட்ட பகுதிகள் வழியாக கடலில் கலக்கிறது.
காயல்பட்டினம் 18ஆவது வார்டுக்குட்பட்ட சேதுராஜா தெரு பகுதியில் தேங்கும் மழைநீர், நெய்னார் தெரு வழியாக கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியிலுள்ள குளத்திற்குச் சென்று, அங்கிருந்து கடலில் கலக்கும் நிலை, நெய்னார் தெருவில் இரட்டைக்குளத்துப் பள்ளிக்கு வடபுறத்தில் குடியிருப்புகள் உருவாவதற்கு முன்பு வரை இருந்தது. அப்பகுதியில் குடியிருப்புகள் வந்த பிறகு, நிலத்தின் ஏற்ற-இறக்கத் தன்மை மாற்றம் கண்டது. அதன் காரணமாக, சேதுராஜா தெரு பகுதியில் தேங்கும் நீர் எங்கும் வழிந்தோட வழியில்லா நிலை ஏற்பட்டுள்ளது.
நடப்பு தொடர்மழை காரணமாக, வழமை போல சேதுராஜா தெருவில் தண்ணீர் தேங்கியுள்ளது. அப்பகுதியிலுள்ள குடிசைகள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. கனமழையின்போது ஒரு குடிசை சிதைந்து விழுந்துவிட்டது. நீரில் மூழ்கிய குடிசைப் பகுதி மக்கள் வேறு இடங்களில் தங்கி வருகின்றனர். கல் வீடுகளில் வசிப்போரும், இடுப்பளவு தண்ணீரைக் கடந்து செல்ல வழியின்றி, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
இதுகுறித்து, காயல்பட்டினம் நகராட்சியில் அவர்கள் தொடர்ந்து முறையிட்டதையடுத்து, சேதுராஜா தெருவில் தேங்கிய மழைநீரை வழிந்தோடச் செய்வதற்காக, இம்மாதம் 24ஆம் நாள் திங்கட்கிழமையன்று 11.00 மணியளவில் நெய்னார் தெரு சாலை தோண்டப்பட்டு, குழாய் பதித்து மூடப்பட்டது.
தமது பகுதியில் தண்ணீர் தேங்கி, இயல்பு வாழ்க்கை பாதித்துவிடும் என்றஞ்சிய நெய்னார் தெரு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பதிக்கப்பட்ட குழாயின் இரு முனைகள் வழியாகவும் தண்ணீர் புக வழியின்றி மணல் கொண்டு மூடப்பட்டது.
இதனையறிந்து, சேதுராஜா தெருவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நிகழ்விடம் வந்து, அடைக்கப்பட்ட குழாயின் இரு முனைகளையும் மண்வெட்டி கொண்டு திறந்துவிட்டதோடு, தண்ணீர் வழிந்தோட வடிகால் தோண்டினர். இதனால், இரு தெரு மக்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் இதுகுறித்து விசாரித்தபோது, தங்கள் பகுதியில் தேங்கிய மழை நீரை வழிந்தோடச் செய்ய வேண்டும் என சேதுராஜா தெரு பொதுமக்கள் கூறினர்.
சேதுராஜா தெரு ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து வழிந்தோடும் நீரால் தங்கள் தெருவும் பாதிக்காதிருக்க, தேவையான இடங்களில் குழாய்களைப் பதித்து தண்ணீரை வழிந்தோடச் செய்வதை தாங்கள் தடுக்கப் போவதில்லை என நெய்னார் தெரு பொதுமக்கள் கூறினர்.
இரு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த ஆணையர், வெட்டி விடப்படும் அனைத்து இடங்களிலும் குழாய் பதிப்பது தேவையற்றது என்றும், வெட்டிவிடும் பகுதிகளில் சாலைகள் குறுக்கிடும் இடங்களில் மட்டும் குழாய்கள் பதிக்கப்படும் என்று கூற, இரு தரப்பினரும் அதற்கு இசைவு தெரிவித்ததையடுத்து, கிழக்கிலுள்ள குளத்திலிருந்து சேதுராஜா தெரு நோக்கி பொக்லைன் இயந்திரம் மூலம் வெட்டப்பட்டது.
வெட்டி விடப்பட்ட பகுதியில் தனியார் நிலமும் வருவதால், அதை மூட வலியுறுத்தி சிலர் குறுக்கீடு செய்யவே, அவ்விடத்தை மூடிவிட்டு தவிர்த்து, மாற்றுப்பாதையில் வெட்டிவிடப்பட்டது. நேர்கோட்டில் வெட்டிவிடப்பட்டிருந்தால் எளிதில் வழிந்தோடு் நிலையிலிருந்த மழைநீர், மாற்றுப்பாதையில் வெட்டிவிடப்பட்டதால் வேகம் குறைந்து ஓடியது. வெட்டப்பட்ட வடிகாலை சற்று ஆழப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் முழுப்பலன் தரவில்லை.
இந்நிலையில், இம்மாதம் 26ஆம் நாள் புதன்கிழமையன்று காயல்பட்டினம் வருகை தந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார், இவ்விடத்தைப் பார்வையிட்ட பின், நெய்னார் தெரு சாலையை வெட்டி பதிக்கப்பட்டிருந்த குழாயை அகற்ற உத்தவிட்டதையடுத்து, அக்குழாய் அகற்றப்பட்டது. தற்போது ஓரளவுக்கு தண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. ஆனால், சாலை வெட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதையடுத்து, அவ்வழியே செல்வோர் மாற்றுப்பாதைகள் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
“பதிக்கப்பட்ட குழாயை - மாவட்ட ஆட்சியர் உத்தரவிற்கிணங்க அகற்றியும் விட்டனர்... ஆணையர் வாக்களித்த படி புதிய குழாய்கள் பதிக்கப்படவுமில்லை... மொத்தத்தில், நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் இரு தரப்பு மக்களுக்கும் பயன் கிடைக்கப் போவதில்லை” என அப்பகுதி பொதுமக்கள் தற்போது கூறும் நிலையுள்ளது.
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் வாசகம் இணைக்கப்பட்டது @ 17:12 / 27.11.2014] |