தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் கடந்த சில வாரங்களாக சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே தொடர்ந்து பெய்தது. சில நாட்கள் இடைவெளிவிட்ட நிலையில், இம்மாதம் 27ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று காலையில் துவங்கி, நள்ளிரவு வரை தொடர்மழை பெய்தது.
இத்தொடர்மழை காரணமாக நகரில் கோடையின் தாக்கம் முற்றிலும் தணிந்து, நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மேல் உயர்ந்துள்ளது. நடப்பு மழை சராசரியைத் தாண்டியே பெய்துள்ளதாக அரசுத் துறைகளும் தெரிவித்துவிட்டன.
கடந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாத நிலையில், நடப்பாண்டும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமான காரணத்தால், மழை வேண்டி ஜும்ஆ தொழுகையில் குனூத் சிறப்புப் பிரார்த்தனை வாரந்தோறும் செய்யப்பட்டு வந்தது. முதல் முறையாகப் பெய்த கனமழைக்குப் பிறகும் - மழை போதாது என்பதால் பிரார்த்தனை தொடர்ந்தது. ஆனால், தற்போது அளவுக்கதிகமாக மழை பெய்து, நகரே மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.
இதனையடுத்து, இம்மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் ஜும்ஆ குத்பா பேருரையின்போது, கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ - மழையை - தேவையுடைய வேறு திசைகளுக்கு மாற்றக்கோரி நபிகள் நாயகம் செய்த பிரார்த்தனையை எடுத்தோதி பிரார்த்தனை செய்தார். இப்பிரார்த்தனையில் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். |