பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பான முடிவு இன்று வைகோ தலைமையில் சென்னையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வைகோ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் விலகல் அறிவிப்பை நிலைத்தகவலை பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியில் கடந்த சில மாதங்களாகவே உரசல்கள் நிலவி வருகின்றன. இலங்கை தமிழர் விவகாரத்தில் பிரதமர் மோடியை வைகோ தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, எச்.ராஜா போன்றோர் மதிமுகவுக்கும், வைகோவுக்கும் எதிராக வெளியிட்ட கருத்துகள் மதிமுக தொண்டர்கள் மட்டுமன்றி தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் விமர்சிக்க வைத்தது.
பாஜக தலைவர்களின் பேச்சை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும் என்று வைகோ கூறினார். ஆனால் அதற்கு எந்த விதமான பதிலையும் பாஜக தேசிய தலைமை வெளியிடவில்லை.
பாஜக மாநில தலைவர் தமிழிசையும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் சில சமரச முயற்சிகளில் ஈடுபட்டனர். எனினும், இலங்கை அதிபர் ராஜபக்ச திருப்பதி வரவுள்ளது போன்ற விஷயங்கள் வைகோவை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது.
இன்று கூடும் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தொடருவதா? அல்லது வெளியேறுவதா? என்ற முடிவை வைகோ அறிவிப்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என மதிமுக உயர் நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தி இந்து |