காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) நடத்திய சைக்கோமெட்ரிக் தேர்வில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவிலாக் கருணையும், நிகரில்லா கிருபையும் தங்கள் யாவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! ஆமீன்.
அன்பிற்குரிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பில் வல்லோன் அல்லாஹ்வின் கிருபையால் சென்ற 07.12.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10:30 – 01:00 மணிவரை “சைக்கோமெட்ரிக் தேர்வு” எனப்படும் திறனாய்வுச் சோதனை சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்.கே.பில்டிங் மூன்றாம் தளத்தில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இந்நிகழ்ச்சிக்கு கே.சி.ஜி.சி-யின் செயற்குழு உறுப்பினர் சகோதரர் எஸ்.எச்.அப்துல் சமது அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
முன்னதாக மாணவர் எம்.என்.மஹ்மூத் ஜயிம் புனித இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். . அதன்பின், கே.சி.ஜி.சி-யின் துணைச் செயலாளர் முஹம்மது முக்தார் அவர்கள் இந்த தேர்வினை வழி நடத்தினார். அவர் தனது உரையின் ஆரம்பமாக கே.சிஜி.சி-யின் செயல்பாடுகள், நோக்கங்கள் மற்றும் இத்தேர்வின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
சைக்கோமெட்ரிக் தேர்வுகளிலிருந்து கிடைக்கும் விவரங்களைக் கொண்டு தேர்வு எழுதுபவரின் மறைந்திருக்கும் ஆற்றல்கள் மற்றும் குணங்களைக் கண்டுபிடிக்க முடியும். ஒருவரின் சிந்தனை போக்கு, ஒரு சிறந்த குழுவின் அங்கமாக இருக்கக்கூடிய தகுதி, தலைமைப் பண்பு ஆகியவற்றைச் சைக்கோமெட்ரிக் தேர்வுகளின் மூலம் கண்டுபிடிக்க முடியும். இதில் கேட்கப்படும் விரிவான கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம், நிச்சயம் ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்றார்.
பிறகு இந்த சைக்கோமெட்ரிக் தேர்வுகளின் முறைகள், தேர்வுக்கு விடையளிக்கும் விதம், தேர்வின் கட்டுப்பாடுகள் குறித்து பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் மூலம் எடுத்துக்கூறினார்.
மொத்தம் மூன்று வகையான தேர்வுகள், அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் (Online) மூலமாகவே நடத்தப்பட்டது, தேர்வு எழுத மொத்தம் 2.15 மணி நேரம் ஒதுக்கப்பட்டது.
1. Psychometric test 2. DISC personality test 3. Personality Style Test
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை 11 நபர்கள் (இதில் மாணவர்கள் 10 நபர்கள், மாணவி 1 நபர்)
முதல் நிகழ்ச்சியாக, இந்நிகழ்ச்சியில் பங்குக்கொண்ட அனைவரும் தங்களை அறிமுகபடுத்திக் கொள்வதோடு, தங்களின் எதிர்கால திட்டம் குறித்து ஒரு நிமிடத்தில் சொல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த ஒரு நிமிடத்தை எவ்வாறு பயன்படுத்திகொள்ளவேண்டும்? அதில் என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதைப் பற்றி சகோதரர் அப்துல் சமது அவர்கள் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றவுடன் பலர் தன்னைப்பற்றி விலாவாரியாகச் சொல்ல ஆரம்பிப்பார்கள். மற்ற சிலர் சில சின்ன தகவல்களுக்கு நேரம் எடுத்துக் கொள்வார்கள். எது அவசியம், எது அனாவசியம் என்று தெரியாமல் பலர் பொன்னான முதல் சந்தர்ப்பத்தை இழந்துவிடுகிறார்கள்.
மேலும் அவர் கூறுகையில்; நிமிட / நொடி பேச்சு என்பதை ஆங்கிலத்தில் lift Speech என்று கூறுவார்கள். அதாவது ஒரு லிஃப்டில் ஏதேச்சையாக உங்கள் வாடிக்கையாளரையோ அல்லது ஒரு முக்கியஸ்தரையோ பார்க்க நேர்ந்தால், அப்போது உங்கள் பொருள் பற்றி அல்லது உங்களைப் பற்றி லிஃப்ட் செல்லும் நேரத்திற்குள் சொல்ல முடியுமா? அது தான் லிஃப்ட் ஸ்பீச். மிக நுட்பமாக, மிகச் சுருக்கமாக, முழுமையாக மனதில் பதியும் அளவு அறிமுகம் செய்வதைத் தான் அப்படிச் சொல்கிறார்கள். உங்களுக்கும் ஒரு லிஃப்ட் ஸ்பீச் அவசியம்.
உங்களிடம் உள்ள பொருளை சந்தைப்படுத்துவதைவிட, சந்தைக்கு தேவையான பொருட்கள் என்ன? என்பதை அறிந்து சந்தைப்படுத்தும்போது உங்களின் தரம் மோலோங்கும். நமக்கு தெரிந்ததை மட்டுமே செய்துக்கொண்டிருக்காமல், ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருந்து சிந்தித்துக்கொண்டிருக்காமல் பெரிதாக யோசியுங்கள். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
அதேபோல் இந்த தேர்வைப் பற்றி குறிப்பிடும் போது; இத்தேர்வை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும், ஒரே கேள்வியை இரண்டு விதமாக வெவ்வோறு இடத்தில் கேட்கப்படும் அதனை அறிந்து விடையளிக்க வேண்டும். அதே நேரத்தில் தங்களை அளவுக்கு அதிகமாக (Extraordinary) காட்டிக்கொள்ளாமல் மிக. மிக இயல்பாக உங்களை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் உங்களின் உண்மைத்தன்மை பிரதிபலிக்கும், தவறுகள் இருப்பின் அதனை திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும் என இவ்வாறு கூறினார்.
தங்களைப் பற்றி சொல்லும் போது எதை முன்னிலைப் படுத்தி பேச வேண்டும், எந்த விஷயத்தை தெளிவாக கூற வேண்டும் என்பதைப் பற்றி சகோதரர் சூஃபி அவர்கள் மாணவர்களுக்கு எடுத்து கூறினார். அவ்வாறே பங்கேற்ற அனைத்து மாணவர்களும் சிறப்பாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்களின எண்ணங்கள் குறித்து பேசினர்.
நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியாக மேற்கூறப்பட்ட மூன்று தேர்வுகளில், முதல் தேர்வு சரியாக 11:30 மணிக்கு ஆரம்பமானது. அனைவரும் உற்சாகத்துடன் தேர்வை மேற்கொண்டனர்.
முதல் தேர்வு முடிந்தவுடன் உடல் புத்துணர்ச்சிக்காக மாணவர்கள் அனைவருக்கும் சுவையான தேனீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. அதன்பின் இரண்டாம் தேர்வு 12:35 மணிக்கு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அப்படியே மூன்றாம் தேர்வு 01.15 மணிக்கு நடைபெற்று, சரியாக 01:30 மணிக்கு தேர்வுகள் அனைத்தும் நிறைவடைந்தது. மாணவர்கள் அனைவரும் 15 நிமிடத்திற்கு முன்பாகவே அனைத்து தேர்வுகளையும் முடித்ததன் மூலம் அவர்களின் ஆவல் - நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களை சந்தோஷப்படுத்தியது.
நிகழ்ச்சியின் இறுதியாக அனைவரையும் வட்டமாக அமரச்செய்து இந்நிகழ்ச்சியின் மூலமாக தங்களுக்கு ஏற்பட்ட தாக்கம் குறித்தும், கே.சி.ஜி.சி-யின் செயல்பாடுகள் மற்றும் இன்னும் கே.சி.ஜி.சி-யின் பணிகளை மேம்படுத்த தங்களின் ஆலோசனைகளை வழங்குமாறு கருத்து கேட்கப்பட்டது. அவ்வாறே பின்னூட்டம் (Feed Back) புத்தகத்திலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களில் சிலர்; இந்த வாய்ப்பு என்பது மிகவும் அறிதான ஒன்று, இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த KCGC-க்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தனர். இன்னும் சிலர் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதின் மூலம் மற்றவர்களின் முன்னிலையில் நாம் அசிங்கப்பட்டு விடுவோமோ என பயந்தோம். ஆனால் இங்கு வந்து கலந்துக்கொண்ட பிறகு எங்களுக்குள் ஒருவித தைரியம் பிறந்ததுள்ளது, இது உண்மையில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்றனர். வேறு சில மாணவர்கள் புதுமையான தேர்வு, புதுமையான அணுபவம் எங்களை நாங்களே சீர்தூக்கி பார்க்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றனர். மேலும், அனைத்து மாணவர்களின் ஒருமித்த கருத்தாக இது மிகவும் பயனுள்ள அனைவருக்கும் மிகவும் அவசியமான தேர்வாக கருதுகிறோம். இதுபோன்ற தேர்வுகளை இன்னும் அதிக மாணவர்களைக்கொண்டு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சகோதரர் அப்துல் சமது அவர்கள் மாணவர்களின் அனைத்து கருத்துக்களையும் கேட்ட பிறகு அவர் கூறியாதவது; கே.சி.ஜி.சி நடத்திய நிகழ்ச்சிகளில் இந்நிகழ்ச்சி ஒரு மைல் கல்லாகும். இது நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. நமது காயல் மாணவர்களை இதுபோன்று பல பயனுள்ள நிகழ்ச்சிகளுக்கு அழைக்கும் போது அவர்களில் பெரும்பாலோர் கலந்துக்கொள்வதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாணவர்களாகிய நீங்கள் இவ்வளவு நபர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
நாம் ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்பு உள்ளது. மற்றவர்கள் எப்படி வேண்டுமானலும் இருந்துவிட்டு போகலாம். ஆனால் ஒரு முஸ்லிம் என்பவர் அப்படி அல்லாமல் சமூக நற்சிந்தனையோடு செயலாற்ற வேண்டும். நல்ல செய்திகளை அனைவரும் அறியும் வண்ணம் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் ஒவ்வொருவரும் தாஃயி போன்று செயல்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சகோதரர் அப்துல் சமது அவர்களின் மூத்த மகன் ஏ.எஸ் ஜாவித் ரஹ்மான் கலந்துக்கொண்டார். இவர் சற்று வாய் பேச இயலாதவர் என்றாலும் தனது 10வது மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிகள் அளவில் சிறந்த மாணவன் என்று பெயர் பெற்றதோடு கல்வி மற்றும் விளையாட்டுக்களில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். இவை தவிர, திருவள்ளூர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இரண்டு முறை நற்சான்றிதழ்களும், பரிசுகளும் பெற்றுள்ளார். இச்செய்தியை இங்கு பதிவுச்செய்வதன் நோக்கம் சாதிக்க, சாதனைகள் படைக்க உடல் ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருத்தல் வேண்டும் என்பதே ஆகும்.
அடுத்து வழக்கறிஞர் எல்.எஸ்.எம் ஹசன் ஃபைசல் அவர்கள் பேசுகையில்; மாணவர்களாகிய உங்களின் ஒன்றிணைப்பு இந்நிகழ்ச்சியின் பலமாகும். நேரம் தவறாமை என்பது மிகவும் மதிப்பு மிக்கதாகும். மாணவர்கள் எந்தஒரு நிகழ்ச்சியிலும் / நிகழ்விலும் நேரம் தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும். உங்களுக்காக, உங்களைப்போன்ற மாணவர்கள், வேலை தேடுவோர் என அனைவருக்காகவும் வழிகாட்ட தயராக இருக்கிறோம். எனவே கே.சி.ஜி.சி-யை பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
கே.சி.ஜி.சி-யின் சேவை காயல்பட்டண மக்களுக்காகவே இருந்தது. எனினும் அதனை சற்று தளர்த்தி அனைவருக்குமான சேவையில் இறங்கியிருக்கிறோம். ஆனாலும் காயல் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே உங்களில் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது இந்த செய்தியைப்பற்றி எடுத்து சொல்ல வேண்டும். இதன்மூலம் பலர் பயனடைவார்கள் என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியாக இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது முக்தார் அவர்கள் பேசுகையில்; எங்களுக்குத் தெரிந்த தகவல்களை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். அதேபோல் நீங்களும் உங்களது தரப்பிலிருந்து எங்களுக்கு உதவ வேண்டும். அதாவது கல்வி கலந்தாய்வு விவரம் போன்ற தகவல்களை எங்களுக்கு வழங்கி எங்களது பணியில் நீங்களும் கைகோர்க்க வேண்டும் என்றார்.
மேலும், கூறுகையில் இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பு செய்தியை அனைத்து மின்னனு சாதனங்களிலும் (Electronic Media) வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் வெறும் இரண்டு நபர்கள் மட்டுமே பதிவு செய்தார்கள். ஆனால் இன்று நிகழ்ச்சியின் இறுதியில் 15 நபருக்கு 11 நபர்கள் கலந்துக்கொண்டது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பங்கேற்ற அனைவரும் ஒன்றிணைந்து (Group Photo) புகைப்படம் எடுத்துக்கொண்டு, துவா கஃப்ஃபாராவுடன் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.
grp
இத்தேர்வின் மதிப்பீடுகள் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இத்தேர்வை ஆன்லைன் மூலமாக வடிவமைக்க, கேள்விகளை மென்பொருள் புரோகிராம்களைப் பயன்படுத்தி திறம்பட உருவாக்கி, இந்த நிகழ்ச்சியை முறையாக நெறிபடுத்த மிகுந்த பொறுப்புடன் செயல்பட்ட இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் சகோதரர் முஹம்மது முக்தார் மற்றும் அவரது நண்பர் சகோதரர் சூஃபி ஆகிய இவர்களுக்கும்,
இந்நிகழ்ச்சி நடத்த, இணைய இணைப்புடன் (Internet Connection) கூடிய பத்து கம்ப்யூட்டர்கள், குளிர்சாதன அறை உட்பட, உள்கட்டமைப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து உதவிய அயீசரா ஜுவல்ஸ் நிறுவனத்தாருக்கும், ஒத்துழைப்பு கொடுத்து உதவிய அதன் பணியாளர்களுக்கும்.
இந்நிகழ்ச்சியை வழிநடத்தி கொடுத்து, நிகழ்ச்சியின் அனைத்து நிகழ்விலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும்.
நிகழ்ச்சியின் முத்தாய்பாய் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் எமது கே.சி.ஜி.சி-யின் நிர்வாகம் உள்ளார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. ஜஸாக்கல்லாஹூ கைரன்.
இந்நிகழ்ச்சியின் இரண்டாம் (மதிப்பாய்வுரை) அமர்வு (Review Session) இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 14.12.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முதல் அமர்வு நடைபெற்ற அதே இடத்தில் காலை சரியாக 10:00 மணியளவில் நடைபெறும். அதன்பின் புகழ்பெற்ற நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை பயிற்சியாளரைக் கொண்டு தேவையான பயிற்சி அளிக்கப்படும். இறுதியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |