மத்திய அரசின் - மத்திய நிதி ஆணையம் (Central Finance Commission) 1951 ஆம் ஆண்டு முதலாவதாக அமைக்கப்பட்டது. ஐந்தாண்டு பணிகாலங்களுக்காக அமைக்கப்படும் இந்த ஆணையத்தின் முக்கிய பணி - மத்திய அரசு
விதிக்கும் வரிகளை, மத்திய - மாநில அரசுகள் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது குறித்து பரிந்துரை செய்வது. மேலும் இந்த ஆணையம், மாநில
அரசாங்கங்கள் - தத்தம் மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கு, மத்திய அரசின் மானியத்தை எவ்வாறு பகிர்ந்து வழங்குவது என்பது குறித்தும்
பரிந்துரை செய்யும்.
நவம்பர் 2007 இல் மத்திய அரசின் 13வது நிதி ஆணைய குழு அமைக்கப்பட்டு, அது தனது பரிந்துரைகளை 2009 ஆம் ஆண்டு இறுதியில்
வழங்கியது. அதன் பரிந்துரை - ஏப்ரல் 1, 2010 முதல் மார்ச் 31, 2015 வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்திற்கு பொருந்தும்.
13வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி - இந்த ஐந்தாண்டு காலகட்டத்தில், சுமார் 2371 கோடி ரூபாயினை, மத்திய அரசு, தமிழக
உள்ளாட்சி மன்றங்களுக்கு மானியமாக - தவணை முறையில் வழங்கவுள்ளது. 2371 கோடி ரூபாய் - இரு வகையாக பிரிக்கப்பட்டு, பொது
அடிப்படை மானியம் (General Basic Grant) வகையில் 1550 கோடி ரூபாயும், பொது செயல்பாடு மானியம் (General Performance Grant)
வகையில் 820 கோடி ரூபாயும் மத்திய அரசால் வழங்கப்படும்.
மத்திய அரசால் வழங்கப்படும் பொது அடிப்படை மானியம் (General Basic Grant) 2010-11 ஆம் ஆண்டு முதல் - ஒவ்வொரு ஆண்டும், இரு
தவணையாக மாநில அரசால் - உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஐந்தாம் ஆண்டின் (2014 - 15) இரண்டாம் (மற்றும் இறுதி) தவணை உள்ளாட்சி மன்றங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, 15 லட்சத்து, 10 ஆயிரத்து, 651 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொகை - State Bank of India வங்கியின் தூத்துக்குடி கிளையில் உள்ள காயல்பட்டினம் நகராட்சிக்கான - 10852664253 எண் வங்கி கணக்குக்கு Electronic Clearance System (ECS) முறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ECS மூலம் பணம் அனுப்பப்பட வேண்டும் என்பது - மத்திய அரசின் பொது செயல்பாடு மானியம் (General Performance Grant) பெற, மத்திய அரசு - மாநில அரசுக்கு - விதித்துள்ள 9 நிபந்தனைகளில் ஒன்று. பார்க்கவும் கீழே.
இந்த மானிய தொகையை உள்ளாட்சி மன்றங்கள் எந்த வகைக்கு செலவு செய்ய வேண்டும் என தமிழக அரசு - டிசம்பர் 9. 2010 தேதியிட்ட
அரசாணை (G.O. [Ms] No. 306 dt 09.12.2010) மூலம் தெரிவித்துள்ளது. அந்த அரசாணையை காண இங்கு அழுத்தவும். அந்த அரசாணைப்படி - இந்த மத்திய
அரசின் மானிய தொகை, உள்ளாட்சி மன்றங்களின் குடிநீர் திட்டங்கள் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களில் உள்ளாட்சி மன்றங்களின் பங்களிப்பு
தொகையினை வழங்கவும், நிலுவையில் உள்ள மின்சார கட்டணங்களை கட்டவும், நிலுவையில் உள்ள TWAD / CMWSSB அமைப்புகளுக்கான குடிநீர்
கட்டணங்களை கட்டவும் - முன்னுரிமை கொடுத்து பயன்படுத்தப்படவேண்டும். உள்ளாட்சி மன்றங்களே நிறைவேற்றும் குடிநீர் திட்டங்கள் வகைக்கு - இந்த தொகையை பயன்படுத்தக்கூடாது.
பொது அடிப்படை மானியம் (General Basic Grant) மத்திய அரசால் உடனடியாக வழங்கப்படுகிறது. ஆனால் பொது செயல்பாடு மானியம் (General
Performance Grant) - மாநில அரசுகள், குறிப்பிட்ட 9 மாற்றங்களை - உள்ளாட்சி மன்ற நிர்வாகங்களில்
கொண்டு வருவதன் அடிப்படையில், மத்திய அரசால், மாநில அரசுக்கு வழங்கப்படும். மத்திய அரசு கோரும் மாற்றங்களில் - உள்ளாட்சி மன்றங்கள்
முறையாக சொத்து வரியை வசூல் செய்வது, உள்ளாட்சி மன்றங்களுக்கு உதவி செய்ய சொத்து வரி வசூல் குறித்து மாநில அளவில் வாரியம்
அமைப்பது, குடிநீர் வழங்கல், குப்பை அள்ளுதல், கழிவு நீர் நீக்குதல், மழை நீர் தேங்காது வடிகால் அமைத்தல் போன்ற விசயங்களில் அடிப்படை
சேவை இலக்குகளை நிர்ணயித்தல் போன்றவையும் அடங்கும்.
|