நஹ்வீ அப்பா நற்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. திரளானோர் பங்கேற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில், நஹ்வியப்பா தைக்காவை செயல்களமாகக் கொண்டு இயங்கி வருகிறது நஹ்வியப்பா நற்பணி மன்றம். இதன் சார்பில், நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, முஹ்யித்தீன் ஆண்டகை நினைவு நாள் விழா, மஹான் நஹ்வியப்பா நினைவு நாள் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள், இம்மாதம் 13ஆம் நாள் (ஹிஜ்ரீ 1436, ஜமாதியுல் அவ்வல் 21ஆம் நாள்) வெள்ளிக்கிழமையன்று, சொளுக்கார் தெருவில் நடைபெற்றது.
அன்று 06.30 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி இமாம் மவ்லவீ எம்.எல்.முஹம்மத் அலீ தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, ஈஸால் தவாப் செய்யப்பட்டது. பெண்கள் பங்கேற்ற மவ்லித் மஜ்லிஸ், நஹ்வியப்பா தைக்கா வளாகத்தில், 10.00 மணிக்கு நடைபெற்றது.
மாலை நிகழ்ச்சிகள் சொளுக்கார் தெரு நஹ்வியப்பா திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடைபெற்றன.
மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் தை.மு.க.முத்து செய்யித் அஹ்மத் தலைமையில் நபிகளார் புகழ் பாடும் புர்தா மஜ்லிஸ் 16.45 மணியளவில் நடைபெற்றது. ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப் வழிநடத்தலில், மத்ரஸா மாணவர்கள் தஃப்ஸ் அடித்து, மஜ்லிஸில் இணைந்து பங்கேற்றனர்.
19.00 மணியளவில் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி துவங்கியது. குருவித்துறைப் பள்ளி - மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமை தாங்கினார். மார்க்க அறிஞர்களும், நகரப் பிரமுகர்களும் முன்னிலை வகித்தனர்.
ஸெய்யிதினா பிலால் பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மத்ரஸா ஹாமிதிய்யா மாணவர் என்.எம்.இசட்.அஹ்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் வரவேற்புரையாற்றினார். பின்னர் அனைவரும் எழுந்து நின்று, ஸலாம் பைத் பாடினர். நஹ்வியப்பா புகழ் கூறும் அரபி பாடலை ஹாஃபிழ் கே.ஏ.எம்.முஹம்மத் உதுமான் பாட, சொற்பொழிவு நிகழ்ச்சிகள் துவங்கின.
“கண்ணிய நபி மீது கண்ணியம் காட்டுவது” எனும் தலைப்பில் இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாம் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா சிறப்புரையாற்றினார்.
“மஹான் நஹ்வியப்பா அவர்களின் வரலாறு” எனும் தலைப்பில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ சிறப்புரையாற்றினார்.
“குத்புல் அக்தாப் கவ்துல் அஃலம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாறு” எனும் தலைப்பில், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.
மத்ரஸா ஹாமிதிய்யா ஆசிரியர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷெய்கு அலீ மவ்லானா துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
விழா நிகழ்ச்சிகளில் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை, எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா, நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், நஹ்வீ எஸ்.ஐ.இஸ்ஹாக் லெப்பை, எஸ்.ஏ.ஸிராஜ் நஸ்ருல்லாஹ், ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபீ, ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் உள்ளிட்டோரடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.
நஹ்வியப்பா நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |