சர்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள நகராட்சி அலுவல்களுக்கான புதிய வாகனம் கொள்முதல்! என்ற தலைப்பில் காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்தியின் தலைப்பு - நகர்மன்றத் தலைவருக்கான வாகனம் என்று இருக்க வேண்டும் என்றும், சர்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள நகராட்சி அலுவல்களுக்கான புதிய வாகனம் கொள்முதல்! என்று இருந்திருக்ககூடாது என்றும் 5வது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கிர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
காயல்பட்டணம்.காம் இணையதளம் கொடுத்திருந்த தலைப்பு பொருத்தமானதே என்று காயல்பட்டணம்.காம் தெரிவிக்கிறது. அதற்கு மாற்றாக - நகர்மன்றத் தலைவருக்கான வாகனம் என்ற தலைப்பு வழங்கியிருந்தால், தலைவரின் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்படும் வாகனம் என்ற அர்த்தத்தை அத்தலைப்பு வழங்கியிருக்கும் என்றும் காயல்பட்டணம்.காம் தெரிவிக்கிறது.
இந்த வாகனம் வாங்க - ஆகஸ்ட் 8, 2014 அன்று, திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குனர் சீனி அஜ்மல் கான், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் அப்போதைய ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே IAS க்கு எழுதிய கடிதத்தில், வாகனத்தின் தேவையாக பல அலுவல்களை தெரிவிக்கிறார்; அவற்றில் ஒன்று தான் நகர்மன்றத் தலைவரின் அலுவல் பயன்பாட்டிற்கு என்பது.
நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குனர் பட்டியலிட்ட காரணங்கள் வருமாறு:
(1) காயல்பட்டினம் நகராட்சியில் தண்ணீர் சேவைகளை பூர்த்தி செய்யப்படுவதற்கு ஆத்தூர் தமிழ்நாடு குடிநீர் வாரியத்திற்கும்
(2) பொன்னன்குறிச்சி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உறைகிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் வரப்பெற்று தண்ணீர் உந்தப்படும் வேலை நடைபெறுவதையும்
(3) ஊரில் இருந்து நீர்தேக்கம் செல்ல 4 கி.மி. தொலைவில் உள்ளதாலும்
(4) நகராட்சி ஈப்பு வாகனம் 2007இல் வாங்கப்பட்டு அடிக்கடி பழுது ஏற்படுவதாலும்
(5) நகர்மன்றத் தலைவர் அலுவலகப் பயன்பாட்டிற்கும்
(6) நகராட்சி பணிகள் ஆய்விற்கும்
ஆகஸ்ட் 8, 2014 தேதிய திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குனர் சீனி அஜ்மல் கான் கடிதம்
மேலும் - அந்த பரிந்துரையின் மீது, நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்துறையின் இயக்குனர் ஜி.பிரகாஷ் IAS, 1989ம் ஆண்டைய அரசாணை தனக்கு வழங்கும் அதிகாரத்தை மேற்கோள்காட்டி, தீர்மானம் எண் 234படி, நகராட்சிக்கு வாகனம் என்றே தெரிவித்துள்ளார். நகர்மன்றத் தலைவருக்கு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.
ஜனவரி 22, 2015 தேதிய சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் இயக்குனர் ஜி.பிரகாஷ் IAS கடிதம்
எனவே - காயல்பட்டணம்.காம் இணையதளம், செய்தி எண் 15564க்கு வழங்கிய தலைப்பு, செய்திக்கு பொருத்தமானதே என்று தெரிவிக்கிறது.
- நிர்வாகி, காயல்பட்டணம்.காம். |