காயல்பட்டினம் சொளுக்கார் தெருவிலுள்ள, நஹ்வீ அப்பா தைக்காவை செயல்களமாகக் கொண்டு நஹ்வீ அப்பா நற்பணி மன்றம் துவக்கப்பட்டுள்ளது.
இவ்வமைப்பின் கலந்தாலோசனைக் கூட்டம் 27.02.2015 வெள்ளிக்கிழமையன்று 20.30 மணிக்கு, நஹ்வியப்பா தைக்கா வளாகத்தில், ஒய்.எஸ்.ஃபாரூக் தலைமையில் நடைபெற்றது.
நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் பங்கேற்ற இக்கூட்டத்தில், வட்டார அளவில் பைத்துல்மால் பிரிவைத் துவக்கி மகளிரைக் கொண்டு இயக்கி, சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் தேவையுடையோரைக் கண்டறிந்து தகுந்த உதவிகளைச் செய்திட தீர்மானிக்கப்பட்டது.
நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, முஹ்யித்தீன் ஆண்டகை நினைவு நாள் விழா, மஹான் நஹ்வியப்பா நினைவு நாள் விழா ஆகிய முப்பெரும் விழாக்களை, 13.03.2015 அன்று சொளுக்கார் தெருவில் நடத்திடவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இம்மாதம் 08ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 20.30 மணியளவில் தைக்கா வளாகத்தில் மகளிருக்கான கலந்தாலோசனைக் கூட்டம், மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்தவ்ஹீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கூட்ட விளக்கவுரையாற்றினர். முந்தைய கூட்டத்தின் தீர்மானங்கள் மகளிருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
தீவுத்தெரு பெண்கள் தைக்காவின் அங்கத்தினரால் ஏற்கனவே அப்பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் வட்டார அளவிலான பைத்துல்மால் அமைப்பு குறித்து, அதன் நிர்வாகி ஹாஜ்ஜா நஹ்வீ ஐ.எல்.ஜவ்ஹரிய்யா இக்கூட்டத்தில் விளக்கிப் பேசி, தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தின் நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
(1) 13.03.2015 அன்று முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றவுடன், பெண்கள் நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்கவும், அதற்கான பொறுப்பை பெண்களிடமே வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
(2) நஹ்வீ அப்பா நற்பணி மன்றத்தால் துவக்கப்படும் நஹ்வீ அப்பா பைத்துல்மால் பிரிவானது, நஹ்வீ அப்பா தைக்கா, அ.க. பெண்கள் தைக்கா ஆகிய இரண்டு பெண்கள் தைக்காக்களையும் உள்ளடக்கிய பொது நிர்வாகமாக இயக்கிட தீர்மானிக்கப்பட்டது.
இவ்விரு கூட்டங்களுக்கான ஏற்பாடுகளையும், கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் தலைமையில், ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா, எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
நஹ்வீ அப்பா தைக்கா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |