“சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள நகராட்சி அலுவல்களுக்கான புதிய வாகனம் கொள்முதல்” எனும் தலைப்பில், காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சர்ச்சை குறித்து, 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் பின்வருமாறு தன்னிலை விளக்கமளித்துள்ளார்:-
30.04.2012 அன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தின் பொருள் எண் 25 கீழ்கண்டவாறு தெரிவிக்கிறது.
அரசு ஆணைகள் அனுமதித்துள்ளபடி நகர்மன்ற தலைவருக்கு பிரத்யேக வாகனம் ஒன்று வாங்க - வார்டு 1 உறுப்பினர் ஏ.லுக்மான் அவர்கள் அனுப்பியுள்ள கடிதம் மன்றத்தின் பார்வைக்கு.
அலுவலக குறிப்பு:
மன்றம் அனுமதி வழங்கலாம்.
இப்பொருள் மன்ற கூட்டத்தில் விவாதத்திற்கு வந்தபோது நானும் சகோதரர்கள் K.ஜமால், M.S.M. சம்சுத்தீன் ஆகியோரும் ஆதரித்தது உண்மை.
எங்கள் மூவரோடு மன்றத்திற்கு கடிதம் கொடுத்த சகோதரர் A. லுக்மான் அவர்களுடன் மொத்தம் நான்கு பேர் மட்டுமே அக்கூட்டத்தின் இறுதிவரை இதை ஆதரித்தோம். அந்த பொருள் குறித்த விவாதத்தின் இறுதியில், பெரும்பான்மை உறுப்பினர்கள், இப்பொருளுக்கு ஒப்புதல் தராததால், மன்றம் வாகனம் வாங்க அனுமதிக்கவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் சில மாதங்கள் கழித்து, நகர்மன்றத் தலைவர், பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்கு மாற்றமாக, மன்றம் இதற்கு அனுமதி வழங்கியதாக, மினிட் புத்தகத்தில் எழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தீர்மானத்தை நீக்கிவிட்டு, திருத்தி எழுதும்படி மன்றக் கூட்டம் ஒன்றில் அப்போதே நான் கேட்டுக்கொண்டேன்.
அதனால் ஏற்பட்ட சர்ச்சையின் முடிவில், மினிட் புத்தகத்தில் திருத்தி எழுதமுடியாது என்றும், எனவே புதிதாக ஒரு பொருளை மன்றத்தின் பார்வைக்கு கொண்டுவந்து, பழைய தீர்மானத்திற்கு மாற்றமாக புதிய தீர்மானம் நிறைவேற்றலாம் என கூறப்பட்டது. அதனடிப்படையில் 2013 ஜனவரி 29-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கீழ்கண்ட பொருளுக்கு, கீழ்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காயல்பட்டணம் நகராட்சியானது இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ளது. நகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 40542 ஆகும். நகராட்சியின் மொத்த பரப்பளவு 12.50 சதுர கிலோமீட்டா். நகராட்சிப் பகுதிகளில் அதிகமான திட்டப்பணிகள் நடப்பதாலும் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதாலும் நகராட்சி ஆணையாளா் அவா்களுக்கு தனியாக ஒரு வாகனம் நகராட்சியில் உள்ளது. தற்பொழுது நகராட்சியில் புதிய குடிநீர் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்த இருப்பதாலும் நகா்மனற தலைவா் அவா்களுக்கு தனியாக வாகனம் ஒன்று DGS&D விலையில் பொது நிதியிலிருந்து வாங்குவதற்கு தொகை ரூ.8.00 இலட்சத்திற்கு மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.
அலுவலக குறிப்பு:
DGS&D விலையில் பொது நிதியிலிருந்து வாங்குவதற்கு நகராட்சி நிர்வாக ஆணையா் அவா்களின் அனுமதி பெற்று வாங்கிட மன்றம் அனுமதி வழங்கலாம்.
தீர்மானம்:
நிதிபற்றாக்குறை காரணமாக மன்றம் அனுமதி வழங்கவில்லை.
இரண்டாவது தீர்மானத்தை தலைவர் மினிட் புத்தகத்தில் எழுதும்போதுகூட, நிதிநிலையை கருத்தில் கொண்டு என்று உறுப்பினர்கள் சொன்ன வாசகத்தை, நிதிநிலை பற்றாக்குறை என்று எழுதியுள்ளார். அப்போதைய நிதிநிலை திருப்தியளிக்கும் வகையில் இருந்தாலும். பணிகள் அதிகம் நிறைவேற்ற வேண்டிது இருந்ததால், அவைகளை மனதில் கொண்டு, நிதிநிலையை கருத்தில் கொண்டு என்ற வாசகம் சொல்லப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் முதல் தீர்மானப் பொருளில் விவாதம் நடைபெற்ற போதுகூட மக்களுக்கு உருப்படியாக ஏதேனும் செய்துவிட்டு, வாகனம் வாங்குவது பற்றி யோசிக்கலாம் என்றுதான் உறுப்பினர்களின் பெரும்பாண்மையோர் கருத்தாக இருந்தது. அக்கருத்தின் அடிப்படையிலேயே வாகனம் வாங்க தேவையிலை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைதான் தலைவர் மன்றம் அனுமதி வழங்கியதாக எழுதிவிட்டார்.
இந்நிலையில், முதல் தீர்மான நாளில் இருந்து சுமார் 3 ஆண்டுகள் கழித்தும், இரண்டாவது தீர்மான நாளில் இருந்து சுமார் 2 ஆண்டுகள் கழித்தும் தற்போது நகர்மன்றத் தலைவர் ஒரு புதிய முயற்சியை மேற்கொள்கிறார். அதாவது, தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு, இரண்டாவது தீர்மானத்தை மறைத்து, அவர் திட்டமிட்டு தவறாக எழுதிய முதலாவது தீர்மானத்தை சுட்டிக்காட்டி, வாகனம் வாங்கும் முயற்சியை மேற்கொள்கிறார். இது தவறு தானே?
இந்த முறைகேட்டை எதிர்த்து, ஒரு உறுப்பினரைத் தவிர, நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டு, நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு புகார் கடிதம் அனுப்பினோம்.
இந்நிலையில், உள்ளூரின் ஒரு இணையதளம், முதல் தீர்மானத்திற்குரிய பொருளை ஆதரித்த என்னையும், என்னோடு இணைந்து ஆதரித்தவர்களையும் சுட்டிக்காட்டி, நாங்கள் இந்த புகார் கடிதத்தில் கையெழுத்திட்டதை முரண்பாடாக சித்தரிக்க முயற்சித்திருக்கிறது. என்னுடைய விளக்கம் என்னவெனில், 2012- ம் ஆண்டு தீர்மானத்திற்குரிய பொருளை நான் ஆதரித்தது உண்மை. இப்புகார் கடிதத்தில் நான் ஆதரிக்கவில்லை என குறிப்பிடவில்லை.
இரண்டாவது தீர்மானம் மறைக்கப்பட்டதையும், முதல் தீர்மானம் கூட உண்மைக்கு மாற்றமானது எனவும் குறிப்பிடும் புகாரில்தான் நான் கையெழுத்திட்டுள்ளேன். இதில் என்ன முரண்பாடு இருக்கிறது? முதலாவது தீர்மான பொருளை நான் ஆதரித்தாக குறிப்பிடும் அந்த இணையதளம், அந்த தீர்மானத்தை உண்மைக்கு மாற்றமாக எழுதியதை நான் ஒரு மன்றக் கூட்டத்தில் கண்டித்ததையும் அது வசதியாக இந்த செய்தியில் மறைத்தது ஏன்?
ஒரு விசயத்தை ஆதரிப்பதும், பெரும்பாண்மையினரின் கருத்துக்கு கட்டுப்படுவதும், முரண்பாடு கிடையாது, மாறாக அதுதான் ஜனநாயகம். ஆனால் செய்த தவறை மூடிமறைக்க அல்லது நியாயப்படுத்த அல்லது தவறு செய்தவர்களைக் காப்பாற்ற இவ்வாறு செய்தி வெளியிடுவது குறித்து மிகவும் வருந்துகிறேன்.
மேலும், முதல் தீர்மானத்திற்கு முன்பு, நகராட்சிக்கு கூடுதலான பணியாட்களை நியமிக்க வேண்டி தலைவரின் தலைமையில் உறுப்பினர்கள் சென்னை சென்றோம். அந்நேரத்தில் நகர்மன்றத் தலைவர் தனக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை கேட்டறிவதிலேயே கவனம் செலுத்தினார், அப்போதுதான் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு உறுப்பினர் தலைவருக்கான வாகனம் வாங்க சட்டத்தில் இடம் உள்ளதா என நகராட்சி இணை இயக்குனரிடம் கேட்டார், தீர்மானம் நிறைவேற்றினால் சட்டப்படி வாங்கலாம் என பதில் பெறப்பட்டது.
இப்படி ஒரு உறுப்பினர் கேட்டு உரிய விளக்கத்தை பெற்றதை வைத்தும், முதல் தீர்மான விவாதத்தின்போது நான்கு பேர் ஆதரித்து பேசியதை வைத்தும், எல்லா உறுப்பினர்களுமே இப்பொருளை ஆதரித்து, தீர்மானம் நிறைவேற்றியதாகவோ, பின்னர் மாறுபட்டுவிட்டதாகவோ கருதமுடியாது.
மேலும், முதல் தீர்மானப் பொருளில் நகர்மன்ற தலைவருக்கு ”பிரத்தியேக வாகனம் வாங்க” என்ற வாசகமும், இரண்டாவது தீர்மானப் பொருளில் "தற்போது நகராட்சியில் புதிய குடிநீர் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்த இருப்பதாலும் நகா்மனற தலைவா் அவா்களுக்கு தனியாக வாகனம் ஒன்று வாங்க", என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.
செய்தி வெளியிட்டுள்ள அந்த இணையதளம், தலைவருக்கு வாகனம் வாங்குவது பற்றி குறிப்பிடாமல், செய்தி தலைப்பில், ஏதோ அலுவலகப் பணியாளர்களுக்கு வாகனம் வாங்க இருப்பது போன்று செய்தி வெளியிட்டுள்ளது. தலைப்பை படிப்பவர்கள் அப்படித்தான் புரிந்து கொள்வார்கள். இது எந்த வகையில் சரி?
இரண்டாம் குடிநீர் திட்ட பணிகள் 80 சதவிகிதம் முடிவுற்ற இப்போதைய காலகட்டத்தில், அதை பார்வையிட தலைவருக்கு வாகனம் தேவையில்லை என்றும், அதிலும் மக்களின் வரிப்பணமான பொதுநிதியில் இருந்து வாகனம் வாங்கத் தேவையில்லை என்றும், மக்கள் நலப்பணிகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அந்த இணையதளம் தலையங்கம் எழுதுவதற்கு பதிலாக, உறுப்பினர்களை குறைகூறுவது எந்த வகையில் நியாயம்?
அண்மையில் 2015 பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற இருந்து, நகர்மன்றத் தலைவரால் ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்திற்கான மாதிரி அஜன்டாவில் இடம்பெற்ற பொருள் ஒன்றை, நகர்மன்றத் தலைவர் இறுதி வடிவம் செய்த அஜன்டாவில் இடம்பெறச் செய்யாமல் தவிர்த்த காரணம் என்ன?
மாதிரி அஜன்டாவில் இடம்பெற்ற பொருள் பின்வருமாறு:
காயல்பட்டணம் நகராட்சிக்கு புதிதாக ஈப்பு வாகனம் வாங்குவதற்கு நகர்மன்ற தீர்மானம் 234 நாள் 30.04.2012-ல் அனுமதி பெறப்பட்டது. நகராட்சி நிர்வாக ஆணையாளர் சென்னைக்கு கருத்துரு 07.08.2014-ல் அனுப்பப்பட்டது. காயல்பட்டணம் நகராட்சிக்கு புதிதாக ஈப்பு வாகனம் வாங்கிக் கொள்ள ந.க.எண் 19745 பி2/2014-2 நாள் 22.01.2015 தேதியில் DGS&D விலையில் வாங்கிக்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் சென்னை அவர்கள் அனுமதி அளித்துள்ளார். மேலும் ஈப்பு வாகனத்திற்கு ஓட்டுநராக டெஸ்கோ நிறுவனம் (முன்னாள் இராணுவத்தினர் மூலம் அல்லது தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்படுகிறது.
அலுவலக குறிப்பு:
1) இந்நகராட்சி அலுவலக பயன்பாட்டிற்கு புதிதாக ஈப்பு வாகனம் வாங்க DGS&D விலையில் விலைப்புள்ளி பெற்று வாங்கி கொள்ள அதற்கான தொகையினை நகராட்சி பொது நிதியில் செலவு செய்ய மன்றம் அனுமதிக்கலாம்.
2) டெக்ஸ்கோ நிறுவனம் மூலம் அல்லது தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநரை நியமனம் செய்ய மன்றம் அனுமதிக்கலாம்.
3) புதிய ஈப்பு வாகனம் வாங்கிய பின்பு பதிவு செய்ய உண்டாகும் செலவினத்தை மன்றம் அனுமதிக்கலாம்.
இந்த பொருளை கூட்ட அஜன்டாவில் இணைக்க தலைவர் ஏன் மறுத்தார்? என்று மீண்டும் கேட்கிறேன்.
முதல் தீர்மான எண்ணை மேற்கோள்காட்டி, நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் வாகனம் வாங்க அனுமதி பெற்றிருப்பதாக இப்பொருளில் குறிப்பிட்டிருப்பதால், இது விவாதத்திற்கு வந்தால் உண்மைக்கு மாற்றமாக முதலாவதாக எழுதிய தீர்மானம் அம்பலத்திற்கு வந்துவிடும் என்பதாலும், அதனால் மீண்டும் விமர்சனம் எழும் என்பதாலும், விவாதங்களை தவிர்த்து, மறைமுக குறுக்கு வழியில் வாகனத்தை வாங்கிவிடலாம் என்ற நோக்கத்தில்கூட தலைவர் இந்த பொருளை கூட்ட அஜன்டாவில் சேர்ப்பதை தவிர்த்திருக்கலாம் என்பது எனது குற்றச்சாட்டாகும்.
இந்த தன்னிலை விளக்கத்தில், முதலாவது இரண்டாவது தீர்மானம் பற்றி, நான் குறிப்பிட்டிருப்பதை நடுநிலையோடு உன்னிப்பாக படித்தால், இதன் உண்மை நிலவரம் புரியும். நடுநிலை தவறி, எப்போதும் ஒருதலைபட்சமாக எழுதுகின்றவர்கள் அந்த இணையதளம் வெளியிட்டுள்ள வாகனம் சம்பந்தமான செய்திக்கும் உறுப்பினர்களுக்கு எதிராகவே கருத்துக்களை பதிகின்றனர். இந்த என்னுடைய தன்னிலை விளக்கத்தையும் அவர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதும் எனக்குப் புரியும். இருப்பினும் மனசாட்சி உள்ள நடுநிலையாளர்களுக்கு மட்டுமே இந்த தன்னிலை விளக்கம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்தையும் அல்லாஹ் அறிவான். உண்மை வெல்லும். இன்ஷாஅல்லாஹ்.
இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்ற 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தன்னிலை விளக்கமளித்துள்ளார். |