காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்று 06.30 மணி துவங்கி 09.30 மணி வரை சிறிய இடைவெளியுடன் இதமழை பெய்தது. இதனால் நகரில் வெப்ப வானிலை மறைந்து, குளிர்ந்த வானிலை நிலவியது. பின்னர் வழமை போல வெயில் அடித்தது.
மாலையில் கடற்கரைக்கு பொதுமக்கள் காற்று வாங்க வழமை போல வந்திருந்தனர். ஈரமான மணற்பரப்பைத் தவிர்த்துவிட்டு, ஆங்காங்கே காய்ந்த மணற்பரப்பில் அமர்ந்தவாறு - நிலக்கடலை, சுண்டல் உள்ளிட்டவற்றைக் கொறித்துக் கொண்டும், சுக்கு காஃபீ அருந்தியும் அரட்டையில் ஈடுபட்டிருந்தனர். வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், 18.00 மணியளவில் வழமைக்கு மாற்றமாக வானம் இருண்டது.
அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்யவே, ஆங்காங்கே அமர்ந்திருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிச் சென்று, கடற்கரையின் வட - தென் பகுதிகளிலுள்ள மண்டபங்களில் தஞ்சமடைந்தனர்.
பெய்த மழையை சிறிதும் கருத்திற்கொள்ளாத மாணவர்கள் பலர், மழைக்காக தமது கால்பந்து விளையாட்டை நிறுத்தாமல் தொடர்ந்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.
சில நிமிடங்களில் மழை நின்றதையடுத்து, அவர்களுள் பெரும்பாலோர் மீண்டும் கடற்கரையில் அமர, ஒரு சிலர் வீடு திரும்பிச் சென்றனர்.
இன்று பெய்த திடீர் கோடை மழை காரணமாக, வழமை போல நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |