தமிழக அரசாணைகள் - நகராட்சியின் அலுவல் பயன்பாட்டிற்காக, ஜீப் போன்ற வாகனங்களை வாங்க அனுமதிக்கின்றன. இவ்வாகனங்களை -
நகர்மன்றத் தலைவர், ஆணையர் ஆகியோர் பயன்படுத்தலாம் என்றும் விதிமுறைகள் கூறுகின்றன.
அவ்வாகனங்களை பயன்படுத்தும் முறைகளையும், (டீசல் போன்ற விஷயங்களுக்கு) அனுமதிக்கப்பட்ட செலவீனங்களையும் அரசாணைகள்
தெரிவிக்கின்றன.
THE TAMIL NADU LOCAL FUND AUDIT DEPARTMENT MANUAL இல் இருந்து...
காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது அலுவல் பயன்பாட்டிற்காக ஒரு ஜீப் உள்ளது. அதனை ஆணையர் பயன்படுத்தி வருகிறார். வெறும்
காயல்பட்டினம் நகராட்சி என்ற பெயர் பலகை மட்டும் இத்தனை ஆண்டுகளாக கொண்டிருந்த வாகனத்தில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நகராட்சியின்
புதிய ஆணையராக காந்திராஜ் என்பவர் பொறுப்பேற்றப்பின், ஆணையர் என கூடுதல் பலகையும் நிறுவப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
புதிய நகர்மன்றம் பதவியேற்ற சில மாதங்களில், மார்ச் 2012 இறுதியில் - நகர்மன்றத் தலைவர் மற்றும் 10 உறுப்பினர்கள், சென்னை சென்று அரசு
அதிகாரிகளை சந்தித்தனர். அவ்வேளையில் - நகராட்சியில், அலுவல் பயன்பாட்டிற்காக - ஒரு வாகனம் தான் உள்ளது என்றும், அதனை ஆணையர்
பயன்படுத்தி வருவதாகவும், நகர்மன்றத் தலைவர் - தன் பணிகளை செய்ய வாகனம் இல்லை என்றும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதில் கூறிய - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் சந்திரகாந்த் காம்ப்ளே IAS, வாகனம் வாங்க தீர்மானம் நிறைவேற்ற கூறியுள்ளார் என
தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் மாதம் (2012) இறுதியில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் - புதிய வாகனம் வாங்குவது குறித்த பொருள் (எண் 25)
இடம்பெற்றது. இப்பொருளை முன் மொழிந்தது - அப்போதைய 1வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான்.
இக்கூட்டம் குறித்த செய்தி - மே 7, 2012 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியானது.
ஏப்ரல் 30, 2012 அன்று நடந்த கூட்டம் குறித்த செய்தியில் இருந்து...
இச்செய்தியில் காண்பது போல் - நகர்மன்றத் துணை தலைவர், சட்டத்தில் தலைவருக்கு வாகனம் அனுமதி இல்லை என கருத்து கூறினார். 10வது
வார்டு உறுப்பினர், ஊருக்கு ஏதேனும் குறிப்பிடத்தக்க பணிகள் செய்த பின்னர் வாகனம் வாங்கலாம் என கருத்து கூறினார்.
இப்பொருள் குறித்து பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 15ஆவது வார்டு
உறுப்பினர் கே.ஜமால் ஆகியோர் ஆதரவு தெரிவித்தே பேசினர். பெருவாரியான உறுப்பினர்கள் விருப்பத்தில் பெயரிலேயே - 1வது வார்டு உறுப்பினர்
மூலமாக கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானமும் நிறைவேறியது (தீர்மானம் எண் 234).
இக்கூட்டம் நிறைவுற்ற சில வாரங்களில் - தலைவர் மற்றும் பெருவாரியான உறுப்பினர்கள் இடையில் கருத்து வேறுபாடுகள் துவங்கியது.
முதலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வாகன தொகை கூறப்படாததால், ஜனவரி 22, 2013 அன்று நடந்த
கூட்டத்தில் - மீண்டும் வாகனம் குறித்த பொருள் இடம்பெற்றது. அதில் - ஆணையரின் அலுவலக குறிப்பாக, DGSD என்ற அரசு நிர்ணயித்த
விலையில் வாகனம் வாங்க அனுமதி வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் - பெருவாரியான உறுப்பினர்கள், நிதிபற்றாக்குறை
காரணமாக மன்றம் அனுமதி வழங்கவில்லை என இப்பொருள் குறித்து தீர்மானம் எழுத கூறவே, அப்பொருள் நிராகரிக்கப்பட்டது (தீர்மானம் எண்
447).
முதலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும், தற்போது பரிசீலனைக்கு வந்த தீர்மானத்திற்கும் இடைப்பட்ட 9 மாதங்களில் நகராட்சியில் பல
மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. நகர்மன்றத் தலைவரை நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் நீக்க முடிவு செய்திருந்த பெருவாரியான உறுப்பினர்கள்,
தலைவருக்கு எதிராக எடுத்துவைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்றான - பெருவாரியான உறுப்பினர்களின் கருத்துக்கு எதிராக - நிறைவேறியதாக
எழுதப்பட்ட தீர்மானங்களில் - இதுவும் ஒன்று.
தீர்மானம் எண் 234 ரத்து செய்யப்படாத காரணத்தாலும், தீர்மானம் எண் 447 - நிதிபற்றாக்குறை என்ற காரணத்தை மட்டும் கூறியதாலும்,
நிதிபற்றாக்குறை என்பது உண்மையான காரணம் அல்ல என்பதனை நிதி அறிக்கைகள் மூலம் கருத்தில் கொண்டும், பல திட்டப்பணிகள் நடந்து
வருவதாலும், அலுவல்களுக்கு கூடுதல் வாகனம் தேவை என்ற அடிப்படையிலும், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர்
ஜி.பிரகாஷ் IAS, திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சீனி அஜ்மல் கான் பரிந்துரையின் அடிப்படையில் - அரசு
அனுமதித்துள்ள DGSD விலையில், வாகனம் வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிகிறது.
தற்போது - நகராட்சிக்கு, அலுவல் பயன்பாட்டிற்காக புதிய வாகனம் வாங்குவது, உறுப்பினர்களால் - சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த
தீர்மானத்திற்கு அப்போது ஆதரவு தெரிவித்து பேசிய 5வது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 15வது வார்டு உறுப்பினர் கே.ஜமால் உட்பட பலர் -
வாகனம் வாங்க அனுமதி வழங்கப்படவில்லை என திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனருக்கும், சென்னையில் உள்ள நகராட்சி
நிர்வாகத்துறை இயக்குனருக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.
[Administrator: புகைப்படம் இணைக்கப்பட்டது @ 11:30 am / 12.03.2015] |