நகராட்சியின் அலுவல் பயன்பாட்டிற்காக புதிய வாகனம் வாங்குவது குறித்து சில சர்ச்சைகள் எழுந்துள்ளன.
குறிப்பாக - இது தொடர்பாக, ஏப்ரல் 2012இல், நகர்மன்றத் தலைவரின் விருப்பத்தின் பெயரில் அந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக உறுப்பினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து - இத்தீர்மானத்தை முன்மொழிந்த அப்போதைய 01வது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் அவர்களிடம் - இத்தீர்மானம் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என காயல்பட்டினம்.காம் வினவியது. அதற்கு அவர் அளித்த விளக்கத்தின் சுருக்கம்:-
ஆரம்ப காலத்தில், நகராட்சியில் பணியிலிருந்த அலுவலர்கள் யாருமே நகர்மன்றத் தலைவருக்கு உரிய தகுதியை வழங்காதிருந்தனர்.
பொதுவாகவே நகராட்சிகளில் நகர்மன்றத் தலைவருக்கென வாகனம் உண்டு. ஆனால் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு இல்லை. நகராட்சிப் பணிகளை அவ்வப்போது பார்வையிட ஒரு வாகனம் மிகவும் அவசியமாகிறது.
நகராட்சியில் ஒரேயொரு வாகனம் மட்டுமே உள்ளது. (வாகனம் குறித்த கூட்டப் பொருள் முன்வைக்கப்பட்ட காலத்தில்) அப்போதைய நகராட்சி ஆணையர் ஊரில் இருக்கவில்லை. திருநெல்வேலியிலிருந்து தினமும் வந்து சென்றுகொண்டிருந்தார். அவரை அழைத்து வரவும், திரும்ப வீட்டில் விடுவதற்குமே அந்த வாகனம் பெரும்பாலும் பயன்பட்டது.
நகர்மன்றத் தலைவரே தனது பொறுப்பிற்கான தகுதியை விரும்பாவதவராகத்தான் இருந்தார். என்றாலும், அவருக்கென ஒரு தகுதி உள்ளதல்லவா? அதை அவர்கள் ஏற்றே ஆக வேண்டும். எளிமை என்பது இரண்டாவது விஷயம்.
நகர்மன்றத் தலைவர் ஆபிதா ஷேக்குடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இந்த வாகனக் கோரிக்கை ஆபிதா என்பவருக்கானது அல்ல அது. நகர்மன்றத் தலைவர் என்ற அந்தப் பொறுப்பில் யார் இருந்தாலும் அவருக்கு ஒரு வாகனம் அவசியமாகிறது என்பதே எனது கருத்து.
“நீங்கள் சேர்மன் ஆனதால் யாருக்கு லாபமோ, நஷ்டமோ தெரியாது... ஆனால் உங்களுக்கு கடுமையான நஷ்டமே! உங்கள் வீட்டுப் பொறுப்புகளைக் கவனிக்க முடியவில்லை... உங்கள் குழந்தைகளுக்கு உரிய அரவணைப்பை, பாசத்தை வழங்க முடியவில்லை... திடீரென நகராட்சி அலுவல்கள் எதிர்படும்போது, வீட்டு வேலைகளையெல்லாம் போட்டது போட்ட படி விட்டுவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லும் நிலை...” என்று நகர்மன்றத் தலைவரிடம் நானே கூறியிருக்கிறேன்.
நகர்மன்றத் தலைவர் என்ற அடிப்படையில் அவர்களைப் பலமுறை ஆதரித்திருக்கிறேன். பலமுறை எதிர்கருத்தும் கொண்டிருக்கிறேன்... ஆனால் அவையனைத்துமே என் மனசாட்சிப்படி நான் செய்தவைதான். அவர்கள் ஒரு கருத்தை சரியெனக் கருதி அதன்படி செயல்பட்டிருக்க அது எனக்கு தவறாகக் கூட பட்டிருக்கலாம். அல்லது சரியான ஒரு கருத்து அவரால் தவறாகக் கூட கருதப்பட்டிருக்கலாம். அது வேறு விஷயம்.
வாகனம் வாங்க வேண்டுமென்பது நகர்மன்றத் தலைவரின் கோரிக்கையே அல்ல. அவர்கள் அந்தக் கூட்டப் பொருளை முன்வைக்கவுமில்லை. இது நான் முன்மொழிந்த கூட்டப் பொருள்தான். அவர்கள் சொல்லி நான் அதை முன்வைக்கவுமில்லை. எனது கோரிக்கையை அஜெண்டாவில் சேர்ப்பதற்காக நான் நகர்மன்றத் தலைவரிடம் வழங்கியபோதுதான் அவர்களுக்கே அது தெரியும். தனக்கு வாகனம் வேண்டும் என்று எதிர்பார்த்த நிலையிலும் அவர்களை நான் காணவில்லை. தனக்கென வாகனம் எதுவும் இல்லாத ஒரே சேர்மனாக இவர்கள்தான் இருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.
என்னைப் பொருத்த வரை, சேர்மனும் தன் தகுதியை உணராமல் அலுவல்களுக்காக கடுமையாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். தெரு விளக்குகளைத் தம் கைகளால் எடுத்துச் சென்று பணியாற்றுவது வரை உறுப்பினர்களும் தங்கள் மதிப்பை உணராமல் அலுவல்களுக்காக கடுமையாக அலைந்து திரிந்துகொண்டிருக்கின்றனர் என்றே சொல்வேன். அவ்வாறு இருக்காதீர்கள் என நான் அவர்களிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளேன்.
இவ்வாறு 01ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்துள்ளார். |