கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக காவல்துறையினர் அவ்வப்போது ஆம்லா ஆபரேஷன் என்கிற ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துவது வழமை.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும், இன்றும் தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை காவல்துறையினரால் நடத்தப்பட்டது.
ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், துணை ஆய்வாளர் சீனிவாசன், தனிப்பிரிவு ஏட்டு ரகு, காவலர் மதன் ஆகிய குழுவினர் காயல்பட்டினம் கடற்கரைப் பகுதிகளில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சிங்கித்துறை மீனவர் பகுதி கடலோரத்தில் இன்று 09.00 மணியளவில், சந்தேகப்படும்படியான மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். டிப்டாப் உடை அணிந்து காணப்பட்ட அவர்கள் காவல்துறையினரைக் கண்டதும் நழுவி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அம்மூவரையும் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்களுள் இருவர் கப்பற்படை வீரர்களான எஸ்.கே.வர்மா, சுதீப் லாமா என்பதும், மற்றொருவர் கடலோர காவல் படை வீரரான சி.எஸ்.ராவ் என்பதும் தெரியவந்தது. இவர்கள் தீவிரவாத தடுப்பு ஒத்திகைக்காக தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து நேற்று 16.00 மணிக்கு மீனவர்களின் ஃபைபர் படகு ஒன்றில் புறப்பட்டு இன்று காலையில் காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்துள்ளனர்.
தகவல்:
ச.பார்த்திபன்
ஆபரேஷன் ஆம்லா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |