சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், அவ்வமைப்பிற்கு புதிய நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மன்ற உறுப்பினர்கள் அனைவரும் நீல நிற சீருடையில் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
வருடாந்திர பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி, இம்மாதம் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று, சிங்கப்பூர் முஸ்தஃபா கார்னர் - Kababs & Curries வளாகத்தில் நடைபெற்றது.
மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் பாதுஷா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
ஆலோசகர் உரை:
மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 2004ஆம் ஆண்டு துவக்கப்பட்டது முதலான - மன்ற வரலாற்றை விவரித்துப் பேசிய அவரது உரையின் சுருக்கம் வருமாறு:-
நமது சிங்கப்பூர் காயல் நல மன்றம், துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, பல்வேறு சோதனைகள் மற்றும் சிரமங்களுக்கிடையில் இறையருளால் வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது.
இப்படியோர் அமைப்பு சிங்கப்பூரில் அமையப்பெற்றிருப்பது காயலர்களுக்கு மிகப்பெரும் பாக்கியமாகும். இந்தியாவின் இதர பகுதிகளிலிருந்து சிங்கப்பூருக்க வேலைவாய்ப்புகளைத் தேடி வருவோர் படும் இன்னல்களையும், அவதிகளையும் கருத்திற்கொண்டு பார்த்தால், நம் காயலர்கள் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறுவேன்.
மற்ற பகுதியினரெல்லாம் இந்நாட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பல மாதங்களாக - ஏன், சில ஆண்டுகளாக அலைந்து திரிந்து அவதிப்படும் இக்காலகட்டத்திலும், தகுதியுள்ள ஒரு காயலர் இங்கு வேலைவாய்ப்புத் தேடி வரும் துவக்க நாளிலிருந்து, மிகக் குறுகிய காலத்திலேயே அவர் வேலைவாய்ப்பைப் பெற்றிடும் வரை இறையருளால் மன்றம் வழங்கும் அரவணைப்புடன் கூடிய உதவியும், ஒத்துழைப்பும் அவர்களை பெரிதும் மகிழ்வித்து வருகிறது என்றால் அது மிகையாகாது.
கடந்த காலங்களைப் போலன்றி, இப்போதெல்லாம் இங்கு வேலைவாய்ப்பு பெறும் காயலர்கள், நல்ல ஊதியத்தைப் பெற்று - தம் குடும்பத்துடன் தங்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அப்படிப்பட்ட நாம், நமக்கு இத்தனை அரிய வாயப்புகளை அளித்து வரும் இந்த நாட்டின் சேவைத் திட்டங்களில் நம்மை இயன்றளவு ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம், இந்நாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில், நமது சிங்கப்பூர் காயல் நல மன்றம், இங்குள்ள இந்திய முஸ்லிம்கள் கூட்டமைப்பின் (Federation of Indian Muslims - FIM) ஓர் அங்கம் என்பதையும், அதன் கலந்தாலோசனைக் கூட்டங்களில் நான் உட்பட நம் மன்றத்தின் பிரதிநிதிகள் தொடர்ந்து கலந்து வருகிறோம் என்பதையும் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
நம் மன்றத்தில் இளைஞர்கள் பெருமளவில் உள்ளதால், விளையாட்டாகத் துவக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளும், வேடிக்கை நிகழ்ச்சிகளும் இன்று மன்றத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயல்திட்டமாகவே மாறிவிட்டது. இதுவெல்லாம், நம் மன்ற உறுப்பினர்களாகிய உங்கள் யாவரையும் பெரிதும் மகிழ்விக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
இறையருளால் நம் மன்றம் இத்தனை காலம் சிறப்புற செயல்பட்டு வருவதற்கு மிக மிக முக்கியக் காரணம், இம்மன்றம் ‘மூத்தோர் வழிகாட்டல்; இளையோர் கீழ்ப்படிதல்’ என்ற அடிப்படையில் செயல்பட்டு வருவதால்தான். இந்த நல்ல நடவடிக்கை காலமெல்லாம் தொடர வேண்டும் - இன்ஷாஅல்லாஹ்!
இவ்வாறு, அவர் பேசினார்.
தலைவர் உரை:
தொடர்ந்து, மன்றத் தலைவர் எம்.எம்.அஹ்மத் ஃபுஆத் உரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
பரபரப்பான இந்த நாட்டில் இத்தனை அழகான - அரிய சந்திப்பு நிகழ்ச்சியில் தமது பொன்னான நேரத்தை ஒதுக்கி - குடும்ப சகிதம் பங்கேற்க வந்திருக்கும் உங்கள் யாவரையும் துவக்கமாக மனதார வரவேற்று மகிழ்கிறேன்.
கடந்த இரண்டாண்டுகளில் இம்மன்றத்தின் தலைவராக இருந்தும், இம்மன்றத்தில் மிகவும் குறைந்தளவிலேயே எனது செயல்பாடுகள் இருந்தும், மன்றம் இத்தனை ஒளிவுடன் மிளிர்கிறது என்றால், நமது இளைய உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான உழைப்பே அதற்கு முழுக் காரணம்.
நம் மன்றத்தின் நகர்நலத் திட்டங்கள் சிறப்புற செயல்படுத்தப்பட, அதன் வரவு-செலவு முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில், மன்றத்தின் முதன்மை நிதியாதாரமாகத் திகழும் மாதச் சந்தாவை நீங்கள் யாவரும் அழகிய முறையில் அளித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. நிலுவையின்றி, இது தொடர்ந்து கிடைக்கப்பெற்றால், தயக்கமின்றி மன்றம் தொடர்ந்து நகர்நலப் பணிகளை முழு மூச்சுடன் செய்யும் - இன்ஷாஅல்லாஹ்!
இம்மன்றத்தின் இதுநாள் வரையிலான செயல்பாடுகள் சிறப்புற முக்கியக் காரணமாகத் திகழ்ந்து வரும் இளைஞர்களுக்கும், நடப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு மற்றும் வினாடி-வினா போட்டியில் பங்கேற்ற மகளிருக்கும், உள்ளூரில் நம் மன்றச் செயல்பாடுகள் பயனாளிகளைச் சரியான தருணத்தில் சென்று சேர பெரிதும் காரணமாகத் திகழும் நம் மன்றத்தின் பிரதிநிதி கே.எம்.டீ.சுலைமான், அவரோடு இணைந்து தன்னலமற்ற சேவைகளை வழங்கி வரும் ‘எஃப்.எம்.ஸ்டோர்’ கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோருக்கும் இந்த நல்ல தருணத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆண்டறிக்கை:
மன்றத்தின் 2014ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை, மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வாசித்தார். [ஆண்டறிக்கை தனிச் செய்தியாக வெளியிடப்படும்.]
வரவு-செலவு கணக்கறிக்கை:
ஓராண்டு வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
இவ்விரு அறிக்கைகளும் அச்சிடப்பட்ட தாளாக பங்கேற்பாளர்களுக்கு வினியோகிக்கப்பட்டிருந்தது. இவ்வறிக்கைகளுக்கு கூட்டம் ஒருமனதான ஒப்புதலை வழங்கியது.
புதிய நிர்வாகிகள் & செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு:
அடுத்த இரண்டாண்டு பொறுப்புக் காலத்திற்கான - மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
எம்.ஆர்.ரஷீத் ஜமான்
துணைத்தலைவர்கள்:
(1) எம்.ஏ.கே.ஷேக்னா லெப்பை
(2) எம்.எம்.மொகுதூம் முஹம்மத்
செயலாளர்:
கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய்
துணைச் செயலாளர்:
கே.எஸ்.நூருல் அமீன்
பொருளாளர்:
ஏ.எம்.அபூ முஹம்மத் உதுமான்
துணைப் பொருளாளர்:
நஹ்வீ ஏ.எம்.ஷெய்க் அலீ ராஸிக்
செயற்குழு உறுப்பினர்கள்:
(01) எம்.எம்.அஹ்மத் முஹ்யித்தீன்
(02) சாளை ஷேக் நவாஸ்
(03) எம்.எஸ்.செய்யித் லெப்பை
(04) எம்.என்.ஜவஹர் இஸ்மாஈல்
(05) எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ
(06) எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்
(07) எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல்
(08) ஜெ.அபுல் காஸிம்
(09) எம்.எம்.அப்துல் காதிர்
(10) அபூபக்கர் ஸித்தீக்
புதிய தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமானுக்கு, நடப்பு தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆத் கைலாகு செய்து வாழ்த்துக் கூறினார்.
புதிய தலைவர் உரை:
தொடர்ந்து, மன்றத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஆர்.ரஷீத் ஜமான் உரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
2004ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இம்மன்றம் 2014ஆம் ஆண்டுடன் இறையருளால் 10 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளமையால், இது நமக்கு சிறப்பான ஆண்டாகும். இத்தனை ஆண்டுகளில் நாம் நமது தாயகமாம் காயல்பட்டினத்தில் - பொருளாதாரத் தேவையுடைய ஏராளமானோருக்கு நம்மால் இயன்ற உதவிகளை வழங்கியிருக்கிறோம். அது மட்டுமன்றி, நமக்கு வாழ்வளித்து வரும் இந்த சிங்கப்பூர் நாட்டிற்கும் நம்மால் இயன்ற சேவைகளை வழங்கி வருகிறோம்.
இவையனைத்தும் இன்ஷாஅல்லாஹ் இனி வருங்காலங்களிலும், உறுப்பினர்களாகிய நம் யாவரின் மாசு மருவற்ற ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் தங்குதடையின்றி - மெருகேறித் தொடர வேண்டும் என்ற எனது ஆவலை, வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை நிர்வாகிகள் உரை:
மன்றத்திற்குப் புதிததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை நிர்வாகிகள் சார்பில், துணைப் பொருளாளர் நஹ்வீ ஏ.எம்.ஷெய்க் அலீ ராஸிக், செயற்குழு உறுப்பினர்கள் சார்பில் ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் ஆகியோர் சிற்றுரையாற்றினார்.
மன்றச் செயல்பாடுகளை முன்னின்று செய்வதற்காக தமக்கு வழங்கப்பட்டுள்ள இப்புதிய பொறுப்பின் கீழ் இறையருளால் சிறப்புற செயலாற்றி, தேவையுள்ள மக்களுக்கு தம்மாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கப் போவதாக அவர்கள் கூறினர்.
பரிசளிப்பு:
இந்த வருடாந்திர பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியை முன்னிட்டு, முன்னதாக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு அழகிய பரிசுகள் வழங்கப்பட்டன. உறுப்பினர்கள் மகிழ்ச்சி பொங்க அவற்றைப் பெற்றனர்.
இவ்விளையாட்டுப் போட்டிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சிறப்புற நடத்திய எம்.எம்.அப்துல் காதிர், எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ, எம்.எஸ்.செய்யித் லெப்பை உள்ளிட்டோரடங்கிய குழுவினருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
குலுக்கல் பரிசு:
நடப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தோருக்கு படிவம் வழங்கப்பட்டு, அனைத்துப் படிவங்களும் ஒரு பாத்திரத்தில் இடப்பட்டு, குலுக்கல் முறையில் - ஆண்கள் பகுதியில் இருவர், பெண்கள் பகுதியில் இருவருக்கு கண்கவர் பரிசுகள் வழங்கப்பட்டன.
கூட்ட நிறைவு:
நன்றியுரையைத் தொடர்ந்து, ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் காஸிம் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன. நிகழ்ச்சிகளில், மன்ற அங்கத்தினர் யாவரும் மன்றத்தின் பெயர் மற்றும் இலச்சினை பொறிக்கப்பட்ட சீருடையில் ஒன்றாகப் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
பஃபே விருந்து:
பின்னர், அனைவருக்கும் பல்வேறு சைவ - அசைவ உணவுப் பதார்த்தங்கள் பஃபே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைவரும் வரிசையில் நின்று தமக்குத் தேவையான உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்டு மகிழ்ந்தனர்.
15.00 மணியளவில் அனைவரும் வசிப்பிடம் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.A.C.செய்யித் இஸ்மாஈல்
மூலமாக
M.N.L.முஹம்மத் ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்)
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு (2014) நடத்தப்பட்ட வருடாந்திர பொதுக்குழு, குடும்ப சங்கம நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |