சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 70ஆவது பொதுக்கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பொதுக்குழுக் கூட்டம்:
சவுதி அரேபியா, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 70 வது பொதுக்குழு கூட்டம், இறைவனின் அருளால் 06.03.2015 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில், தம்மாம் ரோஸ் உணவக அரங்கில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த கூட்டத்தை இளவல் அன்வர் சயீத் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். அவர் ஓதிய திருமறை வசனத்தை இளவல் யூசுப் சாஹிப் ஆங்கிலத்தில் மொழி பெயர்பை வழங்கினார். வந்திருந்த அனைவர்களையும் மன்றத்தின் துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
தலைமையுரை:
அவரைத் தொடர்ந்து மன்றதின் தலைவர் டாக்டர் முஹம்மது இத்ரீஸ் தலைமையுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம்:-
• மன்றத்தின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜனாப் முஹம்மது இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர் ஜனாப் தல்.P.S.M. சேகு நூருத்தீன் ஆகியோரின் மகள்களின் திருமணங்கள் சென்ற மாதம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மன்றத்தின் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர்களின் மணவாழ்க்கை சிறப்பாக அமைய வல்ல அல்லாஹ்விடம் அனைவர்களும் பிராத்தித்தார்கள்.
• சென்ற பொதுக்குழுவில் தெரிவித்த நமதூர் மக்களுக்கு இரவு நேரங்களில் மற்றும் அவசரமான ஆபத்தான தருணங்களில் மருத்துவ உதவி கிடைப்பது கடினமாகிவிட்ட இக்கால கட்டத்தில், ஒரு எமெர்ஜென்சி சர்வீஸ் ( அவசர மருத்துவ உதவி ) ஏற்பாடு செய்ய நமதூர் கே.எம்.டி. மருத்துவ மனையின் உதவியை நாடுவது, இந்த இன்றியமையாத சேவையை சவூதி காயல் நற்பணி மன்றங்களும், கத்தார், துபாய், அபுதாபி மன்றங்களும் இணைந்து கே.எம்.டி. நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவு காண்பது என்பதின் தற்போதைய நிலமை, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை விவரித்து பேசினார்.
செயலர் உரை:
தலைவர் அவர்களின் உரையைத் தொடர்ந்து மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜனாப். அஹமது ரபீக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதன் சுருக்கம்.
• மன்றத்தின் செயல்பாடுகளில் தங்களை வீரியத்துடன் அர்ப்பணித்துக்கொண்ட சகோதரர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
• சென்ற பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கும் இடையில் மன்றத்தால் செய்யப் பட்ட நல உதவிகளை பட்டியலிட்டார். அதில் குறிப்பாக மருத்துவ உதவிக்கு ஷிபா மூலமாக 60 ஆயிரம் ரூபாயும்,
• நம் காயல்பட்டினத்தில் அண்மையில் தொடராகப் பெய்த வடகிழக்குப் பருவமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்திடுவதற்காக ‘காயல்பட்டினம் மழை - வெள்ள நிவாரணக் குழு’ எனும் பெயரில் தற்காலிக அமைப்பு துவக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு நிலையான நிவாரண உதவிகளைச் செய்யவும், அவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டவும் முயற்சிகள் செய்து வரும் இந்தக் குழுவிற்கு மன்றத்தின் பங்களிப்பாக ஒரு வீடு கட்டும் முழுச் செலவை ஏற்றுக் கொண்டதை தெரிவித்தார்.
• மன்றதின் சார்பாக, மிகவும் நலிவடைந்த குடும்பங்களுக்கு மாதம் தோறும் உணவுப் பொருட்களை வழங்கும் திட்டம் சென்ற மாதம் முதல் தொடங்கி விட்டதை அறியத்தந்து, அதில் கூடுதல் சகோதரர்கள் பங்குபெற்று, வல்ல அல்லாஹ்வின் உவப்பை பெறுமாறு வேண்டுகோள் வைத்தார்.
நிதிநிலை அறிக்கை:
பின்பு, மன்றத்தின் பொருளாளர் ஜனாப் இப்ராஹிம் அவர்கள் நிதி நிலை அறிக்கையை சமர்பித்தார்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
இவரின் உரையைத் தொடர்ந்து புதிய வரவான சகோதரர் ஷைக் நூருல் பாராஸ் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு மன்றத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
நெறியாளர் உரை:
இந்த இந்த நிகழ்ச்சிகளை அருமையாக ஒருங்கினைத்துக்கொண்டு இருந்த துணை செயலாளர் ஜனாப் இஸ்மாயில் (தம்மாம் இஸ்மாயில்) அவர்கள், 2015 ஆண்டுக்கான மன்றத்தின் செயல்பாடுகளையும், ஊரில் நடைபெற்ற மன்ற செயல்பாடுகளையும் குறிப்பிட்டார்.
அதில் குறிப்பாக அவசர மருத்துவ உதவி திட்டத்திற்க்காக இது வரை எடுக்கப்பட நடவடிக்கைகளைப் பற்றியும், சுற்றுப்புறத் தூய்மைக்கு செயல்திட்டம் பற்றிவும் விளக்கம் கூறினார்.
வரும் ஆண்டு நடத்தப் போகும் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகளைப் பற்றியும், ரமளான் மாதத்தில் வழமையாக ஏழைகளுக்கு வழங்கும் உணவுப்பொருள் திட்டதைப் பற்றியும் விவரித்தார்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
இவர்களின் உரையை தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பல சகோதரர்கள் தங்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்தார்கள்.
குழந்தைகளுக்கான போட்டிகள்:
இந்நிகழ்வுக்கு பிறகு, குழந்தைகளுக்கான போட்டிகள் நடைபெற்றன. குழந்தைகளின் வயதை நிர்ணயித்து இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
அல்குர்ஆன் வசனங்களை ஓதும் போட்டியும், துஆக்கள் ஓதும் போட்டியும் நடைபெற்றன. இந்த போட்டிகளை சகோதரர்கள் அன்வர், பஷீர் அலி, இம்தியாஸ் புஹாரி ஆகியோர் நடத்தினார்கள்.
அறிவுரை:
இதனைத்தொடர்ந்து தம்மாம் இஸ்லாமிய வழிகாட்டு மையத்தின் மூத்த மார்க்கப் பேரறிஞர் மௌலவி நூஹூ மஹ்லரி அவர்களின் மார்க்க உரை நடைபெற்றது.
இவர்களின் உரையில் சுவனத்தை அடையும் முறைகளைப் பற்றி மிக அருமையான முறையில் விளக்கிக் கூறினார்கள்.
பரிசளிப்பு:
அதன் பின், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றிக்கு முயன்றவர்களுக்கும், கூடவே ஊக்குவிக்கும் பொருட்டு அனைத்து குழந்தைகளையும் பரிசளிப்பில் இணைக்கப்பட்டார்கள்.
இவர்களுக்கான பரிசுகளை மன்றத்தின் தலைவர் டாக்டர் முஹம்மது இத்ரீஸ், செயலாளார் ஜனாப் அகமது ரபீக், துணைத்தலைவர் ஜனாப் சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன், மௌலவி நூஹூ மஹ்லரி ஆகியோர் வழங்கினார்கள்.
கூட்ட நிறைவு:
பின்பு, மன்றதின் தலைவர் டாக்டர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள், வல்ல இறைவனுக்கும், கலந்து சிறப்பித்த அனைவர்களுக்கும், விருந்து அனுசரணை வழங்கிய சகோதரர்கள் ஜனாப் தல்.P.S.M. சேகு நூருத்தீன் மற்றும் ஜனாப் தம்மாம் இஸ்மாயில் ஆகியோருக்கும் நன்றிகள் கூறி, துஆவுடன் இனிதே நிறைவு செய்தார். அல்ஹம்துலில்லாஹ். இக்கூட்டத்தில், மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மாம் காயல் நல மன்றத்தின் முந்தைய (69ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |