பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, இம்மாதம் 02ஆம் நாள் (நேற்று) வியாழக்கிழமையன்று, கொடைக்கானலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு, திரும்பி வந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் சித்தனையன்கோட்டை அருகே அவர்களது வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில், அக்கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர், பணியாளர் மற்றும் வாகன ஓட்டுநர் என மொத்தம் 9 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் மதுரையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களின் பாவப் பிழைபொறுப்பிற்காகவும், சிகிச்சை பெற்று வருபவரின் பூரண உடல் நலனுக்காகவும், காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா சார்பில், சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் மற்றும் குருவித்துறைப் பள்ளி தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்றது.
துவக்கமாக, கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மறைந்த மார்க்க அறிஞர்கள் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, அதன் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் பாக்கவீ ஆகியோர், இரங்கல் உரையாற்றினர்.
துஆ - ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சியில், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் நடப்பாண்டு வைபவக் கமிட்டி நிர்வாகிகளான கே.எம்.செய்யித் அஹ்மத், கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், செய்கு ஹுஸைன் பள்ளி இமாம் என்.டீ.ஷெய்கு சுலைமான் ஜுமானீ உள்ளிட்ட நிர்வாகிகள், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (ஏப்ரல் 05 ஞாயிற்றுக்கிழமை) மதியம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் வாராந்திர தீனிய்யாத் வகுப்பின் மாணவர் ஒன்றுகூடலின்போது, மறைந்தவர்களின் சேவைகள் நினைவுகூரப்பட்டு, அவர்களுக்காக பிரார்த்திக்கப்பட்டது.
தகவல்:
சொளுக்கு S.M.S.ஷெய்கு அப்துல் காதிர்
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[படங்கள் இணைக்கப்பட்டன @ 22:18 / 05.04.2015] |